You are printing this article from South Indian Social History Research Institute's web site: www.sishri.org
To avoid copyright violations, please get permission from the author(s) before reproducing this article in any form
தமிழக வேளாளர்களின் வரலாறு: சில ஆய்வுச் சிக்கல்களுக்கு விடை தேடும் முயற்சி (பகுதி 1)
எஸ். இராமச்சந்திரன்

தமிழ்ச் சமூக வரலாற்றாய்வில் வேளாளர் என்று பொதுவாக அடையாளப்படுத்தப்படும் சாதிக் குழுக்கள் பற்றிய ஆய்வு மிகவும் சிக்கல் வாய்ந்ததாகும். இதற்கு முதன்மையான காரணம், சூத்திரர்கள் என்று வகைப்படுத்தப்பட்டாலும் சாதியமைப்பில் பிராம்மணர்களுக்கு அடுத்த படிநிலையில் வேளாளர்களே இருப்பதாகப் பொதுப் பிரக்ஞையில் பதிந்திருப்பதுதான். எனவே சமஸ்கிருதம், ஆரிய இனம், வருணாசிரமம், மனுஸ்மிருதி எனப்படுவனவற்றின் அடையாளம் பிராம்மணர்கள் என்றும், திராவிட இனம், தமிழ் போன்ற விழுமியங்களின் பிரதிநிதிகள் வேளாளர்களே (அல்லது வேளாளர்களின் தலைமையை ஏற்ற திராவிடர்களே) என்றும் ஓர் இருமை நிலைக் கோட்பாடு உருவாவது எளிதாயிற்று. இதன் விளைவாகத் தமிழின் மிகப்பழைய இலக்கண நூலான தொல்காப்பியத்தில் (பெருளதிகாரம், மரபியல், 71-85) இடம்பெறுகிற அந்தணர், அரசர், வைசிகர்1 வேளாளர் என்ற பகுப்பு முறையையே சற்று மாற்றி அந்தணர் அரசர் வணிகர் வேளாளர் என்று வரிசைப்படுத்தி, இது பிராம்மணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் எனப்பட்ட வட இந்திய வர்ணாசிரம அமைப்பிலிருந்து வேறுபட்டது என்றும் சில அறிஞர்கள் கூறத்தொடங்கினர். வேளாளர் எனப்பட்டோர் அரசர்க்கு மகட்கொடைக்குரியோர் எனச் சங்க இலக்கியங்களுக்கு உரையெழுதிய பிற்கால உரையாசிரியர்கள் குறிப்பிடுவதாலும், சங்ககால அரசர்களுக்குக் கட்டுப்பட்ட அல்லது அவர்களுடன் மண உறவு கொண்டிருந்த சிற்றரச மரபினரான வேளிர்களே பிற்காலத்தில் வேளாளர்கள் எனக் குறிப்பிடப்பட்டனர் என்று சில ஆய்வாளர்கள் முடிவு செய்ததாலும் இத்தகைய அரசர் = வேளாளர் என்று சமன்படுத்தும் கருத்து வலிமை பெறலாயிற்று.

தமிழகத்தின் முதன்மையான போர்க்குடிகள் என்று கருதப்படுகிற கள்ளர், மறவர், அகம்படியர் ஆகியோர் மெள்ள மெள்ள வெள்ளாளர்களாக உயர்ந்தனர் எனப் பொருள்படும் "கள்ளன் மறவன் கனத்தோர் அகம்படியன் மெள்ள மெள்ளவே வெள்ளாளன் ஆனான்" என்ற பிற்காலப் பழமொழி, இத்தகைய பொருள் கோடலுக்கு மேலும் வலிமை சேர்த்தது. இவை மட்டுமின்றி, ஐரோப்பியக் காலனியாதிக்கத்துக்கு முன்னரே, கி.பி. 14-15ஆம் நூற்றாண்டுகளிலேயே வேளாளர் சாதிக் குழுக்கள் தமிழகத்தில் பிராம்மணர்களையடுத்த சமூகப் பொருளாதார அந்தஸ்தினை அடைந்திருந்ததாலும் இக்கருத்து மிக இயல்பாகப் பொதுப் பிரக்ஞையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

வரலாற்றில் வைதிகப் பிராம்மணர்களின் பங்களிப்பு குறித்து உடன்பாட்டு நிலையிலும் சரி, எதிர் மறைநிலையிலும் சரி - அளவுக்கதிகமாக முதன்மை அளித்தன்மூலம் தொடக்க நிலையிலிருந்தே வைதிக பிராம்மண சாதியினர் மட்டும்தான் அந்தண வர்ணத்தவராகத் தம்மை வகைப்படுத்திக் கொண்டனர் என்றும், பிற வர்ணப் பகுப்புகள் எல்லாம் அவ்வக்காலங்களில் வைதிக பிராம்மணர்களால் செயற்கையாகவும், தம் வசதிக்கேற்பவும் சமயோசிதமாகவும் வகைப்படுத்தப்பட்டவைதாம் என்றும் ஒரு விளக்கவுரையும் வேறுசில அறிஞர்களால் வழங்கப்பட்டது. இந்த விளக்கவுரையின் அடிப்படையில், குறுநிலத் தலைவர்களாக இருந்த நிலக்கிழார்கள் வேளாளச் சாதியினராக நீடித்தனர் என்றும், நாட்டின் தலைவனான அரசன் வேளாளச் சாதியினனாக இருந்தாலும் அரச வர்ணத்தவனாக வகைப்படுத்தப்பட்டான் என்றும் தர்க்கத்துக்குப் பொருந்தாத விரிவுரைகள் கூறப்பட்டன. ஆனால், சமூக வரலாற்றாய்வில் வேளாளர் குறித்த இக்கருத்தோட்டம் கேள்விக்கு உட்படுத்தப்படும்போது விடை காண இயலாத சிக்கல்கள் எழுந்தன. எடுத்துக்காட்டாக, அரசர்களின் குலம் என்பது தனிச் சாதியாக இல்லாதிருந்தால், கி.பி. 12ஆம் நூற்றாண்டில் பெரியபுராணம் இயற்றிய சேக்கிழார் அரச குல நாயன்மார்களை அரச குலத்தவர்கள் என்றும், வேளாளர் குல அடியார்களின் சாதி அடையாளத்தைத் தனியாகவும் குறிப்பிட வேண்டிய நிர்ப்பந்தம் என்ன என்ற கேள்வி எழுந்தது. கி.பி. 14ஆம் நூற்றாண்டில் சந்தான குரவருள் கடைசிக் குரவர் உமாபதி சிவாச்சாரியாரால் எழுதப்பட்டதாகக் கருதப்படும் சேக்கிழார் புராணத்திலும் அரசகுல நாயன்மார்களும் வேளாளர் சாதி நாயன்மார்களும் தனித்தனிச் சாதியினராகவே பட்டியலிடப்பட்டுள்ளனர்.

இப்போது மீண்டும் தொல்காப்பியம் குறிப்பிடும் வருணப் பகுப்புக்கே திரும்புவோம். அந்தணர் = பிராம்மணர்; சத்திரியர் அல்லது ராஜன்யர் = அரசர்; வைசிகர் = வைசியர்; வேளாளர் = சூத்திரர் என்ற சமன்பாடு குறித்து ஆராய்வோம். வருணாசிரம அமைப்பின் ஆரம்ப கட்டங்களில் - கிறிஸ்து சகாப்தத் தொடக்க நூற்றாண்டுகள்வரை வணிகர் என்ற தனியான வர்ணப் பிரிவு உருவாகவில்லை. வைசியர் என்ற சொல் 'விஸ்' (பொது) என்ற சொல்லிருந்து தோன்றியதாகும். அதாவது வைஸ்யர் என்றால் அடிமைகளல்லாத பொதுமக்கள்; விஸ்வக் (உலக) குடிகள் என்றே பொருள்படும். அரசுக்கு இறை (வாரம்) செலுத்துகின்ற உழவர், கைவினைஞர், வணிகர், குடிபடைகளாகச் செயல்படுகிற வீரர்கள் - ஆகியோர் வைஸ்யரே. சூத்திரர் (வேத மொழியில் தஸ்யூ) எனப்பட்டோர் அடிமைகள் ஆவர். இவர்கள் பெரும்பாலும் போர்களின்போது சிறைப்பிடிக்கப்பட்டவர்களும், சிறைப்பிடிக்கப்பட்ட பெண்டிரின் வம்சத்தவரும் ஆவர். இவர்கள் முறையான மண உறவுக்குரியோர் அல்லர். குடும்பம், அதன் தகுதிப்பாட்டு அடையாளமான சொத்துரிமை ஆகியன இவர்களுக்கு இல்லை. இதுவே வர்ணாசிரம அமைப்பின் பரிணாம வளர்ச்சியில் மிகவும் முற்பட்ட நிலையாகும். சூத்திரர் என்ற கருத்தோட்டத்தைத் தமிழில் சொல்வதற்குத் தொல்காப்பியம் ஏன் ‘வேளாளர்’ என்ற சொல்லைப் பயன்படுத்துகிறது என்ற கேள்விக்கான விடையில்தான் இந்த அடிப்படைச் சிக்கலுக்கான விடையும் உள்ளது.

வேளமும் வேளாண்மையும்

வேளாண்மை என்ற சொல் கலித்தொகையில் (பா. 101:45) பயன்படுத்தப்படுகிறது. பிரிந்து சென்ற காதலன் வரப்போவதை உணர்த்தும் வகையில் காதலியின் இடக்கண் துடிக்கிறது. (பெண்களுக்கு இடக்கண்ணும் இடத்தோளும் துடித்தல் நற்சகுனம்.) இது தனிமையில் புலம்பிக்கொண்டிருக்கிற காதலிக்குக் காதலன் வரவை முன்னறிவித்து உபகாரம் செய்கிற வகையில் அமைந்திருப்பதாகக் காதலி குறிப்பிடுகிறாள். இதனை "வேளாண்மை செய்தன கண்" எனக் கலித்தொகை குறிப்பிடுகிறது. இடக்கண்ணை மட்டும் துடிக்கவிட்டு, வலக்கண் துடிக்காமல் இருந்து ஒத்துழைப்பதால் ''செய்தன கண்'' எனப் புலவர் பன்மையில் குறிப்பிடுவதாக உரையாசிரியர்கள் அழகாக விளக்கமும் அளிக்கின்றனர். இங்கு வேளாண்மை என்பது உதவுதல் (உபசரித்தல், உபகாரம் செய்தல்) என்ற பொருளிலோ, தலைவர்கள் வருகையை வாயிலோர் முன்னறிவிப்பதுபோல் முன்னறிவித்தல் என்ற பொருளிலோ பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு தலைமக்களுக்கு வாயிலோராகப் பணிபுரிவோர் "வேளாண் வாயில்" என்றே பொருநராற்றுப் படையில் சுட்டப்படுகின்றனர்.2

பரிபாடலில் மட்டும்தான் (20:62,63) வேளாளர் என்ற சொல் மாடுகளை உழவுக்குப் பயன்படுத்தும் உழவர் என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. வேளாளர்கள் எருதுகளை ஏர்க்கலப்பை நுகத்தடியில் பூட்டி உழும் கடமை உடையவர்கள் என்ற கருத்தை இப்பரிபாடல் வரிகள் புலப்படுத்துகின்றன: ''எருது தொழில் செய்யாது ஓடவிடுகடன் வேளார்க்கு இன்று.'' அதாவது, உழவு மாடுகளைத் தொழிலுக்குப் பயன்படுத்தும் கட்டாயக் கடமை அவர்களுக்கு இருந்தது. அவ்வாறு ஏருழவு, விளைபொருள்களை வண்டியில் ஏற்றிக்கொணர்ந்து நிலக்கிழார்களிடம் ஒப்படைத்தல் போன்ற பணிகளுக்கென மட்டுமே மாடுகளைப் பயன்படுத்த வேண்டுமென்று வேளாளர்களுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது போலும்.

வேளாண்மை என்பது உபசரித்தல், வரவேற்பு போன்ற பொருள்களிலிருந்து விலகி விவசாயம் (பயிர் வெள்ளாமை) என்ற பொருளைப் பெற்றுவிட்டதற்கான முதல் அடையாளம் இதுவே. பரிபாடலின் காலம் கி.பி. 4-5ஆம் நூற்றாண்டு எனக் கொண்டால், ''வேளாண் மாந்தர்க்கு உழுதூணல்லது இல்லென மொழிய பிறவகை நிகழ்ச்சி'' எனக் குறிப்பிடும் தொல்காப்பிய நூற்பாவும் (மரபியல் 81) இதே கால கட்டத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என முடிவு செய்வதே உசிதமாகும். அதே வேளையில் வேளாண்மை என்பதற்கு உபசரித்தல், வரவேற்பு என்பவே பூர்விகப் பொருள்கள் என நாம் ஏற்பதிலும் ஒரு சிக்கல் உள்ளது. வேளாண்மை என்பது வேளிர் அல்லது வேள்களின் ஆளுமைப் பண்பு; அதுவே உபகாரம் - அதற்குச் சான்று ”முல்லைக்குத் தேரீந்த பாரி” என்ற எளிய சமன்பாடு இருக்கும்போது அதை ஏன் மறுக்க வேண்டும்? ஆனால், இந்தச் சிக்கலுக்கும் விடை உள்ளது.

சங்ககால வேளிர்கள் அரச குலத்தவரேயன்றி வேளாண் வருணத்தவரல்லர். அதனால்தான் போலும் மூவேந்தர்களைக் குறிப்பிடும் தொல்காப்பியம் வேளிர் பற்றி ஓரிடத்தில்கூடக் குறிப்பிடவில்லை. வேளாளர்களின் பிற்காலத்து மெய்க்கீர்த்திகளில் அரவின் புற்றில் கையிட்டோர், சூலி முதுகில் சோறிட்டோர், நீலி பழி கழுவினோர், ஆடைகீறிச் சிலந்தி காட்டினோர் என்பன போன்ற வேளாள மூதாதையர் செயல்கள் குறிப்பிடப்படுகின்றனவே தவிர, ஓரிடத்தில்கூட ''முல்லைக்குத் தேர் ஈந்தமை'' போன்ற வேளிர்குல அருஞ்செயல் குறிப்பிடப்படவில்லை. எனவே, வேளாண்மை என்பது வேள்களின் ஆளுமை எனப் பொருள் கொள்வதைவிட உபசரிப்பு, வரவேற்பு போன்ற பணிகளுடன் தொடர்புடைய வாயிலோர் தன்மை என்று பொருள்கொள்வதே பொருத்தமாகும்.

இருக்குவேளிர் குலத்தைச் சேர்ந்த இடங்கழி நாயனாரை, ஆதித்தன் குல முதலோர் (அதாவது சூரிய குலத்தவன் - சோழ குலத்தின் மூதாதை) எனச் சேக்கிழார் குறிப்பிடுகிறார்.3 உமாபதி சிவாச்சாரியாரும் இவரை அரச குலத்தவராகக் குறிப்பிடுகிறாரே தவிர வேளாளர் குலத்தவராகக் குறிப்பிடவில்லை.

கி.பி. 9ஆம் நூற்றாண்டைய ஆய் மன்னனின் பார்த்திவசேகரபுரம் செப்பேட்டில் (வரி. 60-61) "வெள்ளாட்டி" என்ற சொல் இடம்பெற்றுள்ளது.4 வேலைக்காரி என்பது இதன் பொருள். இச்சொல் வேளாட்டி என்பதன் திரிபாகும். வேளம் என்ற சொல், சிறைச்சாலை, சிறைப்பிடிக்கப்பட்ட உயர்குடிப் பெண்டிர் வாழ்விடம் என்ற பொருள்களில் கி.பி. 12ஆம் நூற்றாண்டுச் சோழர் சாசனங்களிலும், இலக்கியங்களிலும் பயன்படுத்தப்படுகிறது.5 இவ்வாறு அரச குடியினர் வேளத்தில் ஏற்றப்படும் வழக்கம் பிற்காலச் சோழர் ஆட்சியில் புதிதாகப் புகுந்திருக்க வாய்ப்பில்லை. சங்க காலத்திலேயே இருந்திருக்க வேண்டும் என்பதற்கு ஒரு மறைமுகச் சான்று உள்ளது. சேர மன்னன் கணைக்கால் இரும்பொறை, சோழன் கோச்செங்கணானுடன் போரிட்டுத் தோற்றுக் குடவாயிற் கோட்டத்தில் சிறை வைக்கப்பட்டான். அப்போது அவன் ஒரு பாடல் இயற்றிவிட்டு உயிர்துறந்தான். அப்பாடலில், சிறையில் அவனுக்கு வழங்கப்பட்ட உணவு ''வேளாண் சிறுபதம்'' என குறிப்பிடப்படுகிறது.6 வேளத்தில் வழங்கப்படுகிற அல்லது வேளாண் பெண்டிரால் சமைக்கப்படுகிற சிறுமைப்பட்ட உணவு என்பது இதன் பொருள் எனத் தோன்றுகிறது. இத்தகைய வேளத்துப் பணிப் பெண்டிரான வேளாட்டியர்க்கு - வேலைக்காரிகளுக்குப் பிறந்தோர் ‘வேள ஆளர்’ எனக் குறிப்பிடப்பட்டனர் எனப் பொருள்கொள்வது பொருத்தமாக உள்ளது. தாசி (வேலைக்காரி, அடிமைப்பெண்) மகன் என்று பொருள்படும் தஸ்யூ என்ற சொல்லின் நேர்ப் பொருளில் வேள ஆளர் என்பது அமைந்துள்ளது என்பதால்தான் வேளாண் மாந்தர் என்ற சொல் சூத்திரர் என்ற கருத்தோட்டத்தைக் குறிக்கும் தமிழ்ச் சொல்லாகத் தொல்காப்பியத்தால் பயன்படுத்தப்பட்டுள்ளதென நாம் முடிவு செய்யலாம். கி.பி. 12ஆம் நூற்றாண்டில் பெரியபுராணம் எழுதிய சேக்கிழார் (இவரே தொண்டை மண்டல வேளாளர் சமூகத்தவர் ஆவார்) சூத்திரத்தொல்குலம், நாலாங்குலம், வேளாண்குடி ஆகியவற்றை ஒரே பொருளில் பயன்படுத்துவது இது தொடர்பாக அறியத்தக்கது. ஆனால் ஒரு முதன்மையான பிரச்சினை என்னவென்றால், சூத்திரர் என்பது வருணப் பிரிவினை. அப்படியானால் வேளாளர் என்பதும் வருணப் பிரிவினையாகத்தானே இருக்க முடியும்? வேளாளர் என்பது சாதிப் பெயராகத்தானே இருந்து வருகிறது? தமிழக வரலாற்றில், வேளாளர் சாதிக் குழுக்கள் மட்டுமின்றிப் பல்வேறு கைவினைஞர் சாதிக் குழுக்களும் குடி படைகளான போர்க்குடிகளும் சூத்திரர்களாகத்தானே வகைப்படுத்தப்பட்டுள்ளன? இத்தகைய ஒழுங்கற்ற ஒரு வருணப் பகுப்பு முறை தமிழகத்தில் நடைமுறையில் இருந்திருக்க வாய்ப்பு உண்டா என்ற கேள்விகள் எழுகின்றன.

இந்தியாவில் நிலப்பிரபுத்துவ முறையின் பரிணாம வளர்ச்சியை ஆராய்ந்த அறிஞர்கள் சிலர் நம் கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில் ஒரு கருத்தைக் குறிப்பிட்டுள்ளனர். "இந்திய நிலமானிய முறை" (Indian Feudalism) என்ற நூலை எழுதிய ராம்சரண் சர்மா7 பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

"(நிலமானிய முறை வரலாற்றில்) சூத்திரர்கள் விவசாயிகளாக மாறியது ஒரு முக்கியமான வளர்ச்சியாகும். சமுதாயத் துறையிலும் பொருளாதாரத் துறையிலும் ஏற்பட்ட இந்த மாறுதல் குப்தர் காலத்தில் தொடங்கியது. கி.பி. ஏழாம் நூற்றாண்டின் முற்பாதி முடிவதற்குள் சூத்திரர் அனைவருமே விவசாயிகள் என்ற நிலை ஏற்பட்டு விட்டது. விவசாயிகளுள் பெரும்பாலோர் சூத்திரர்கள் என்ற கூற்று குப்தர்களுக்கு முற்பட்ட காலத்தில் உண்மையாய் இருந்திருக்காது. ஆனால் குப்தர் காலத்திற்கும் அதற்குப் பிற்பட்ட காலத்திற்கும் அந்தக் கூற்று மிகவும் பொருத்தமானது. அடிமைகளாகவும் கூலிக்குப் பயிரிட்ட உழவர்களாகவும் இருந்த சூத்திரர்கள் விவசாயிகளாக மாறியது நிலமானிய முறையின் தோற்றம் என்ற கோணத்திலிருந்து நோக்கும்போது ஒரு முக்கியமான நிகழ்ச்சியாய் இருக்கிறது."

குப்தர் காலம் என இம்மேற்கோளில் குறிப்பிடப்படுவது கி.பி. 4-5ஆம் நூற்றாண்டுகளாகும். இதற்குச் சமகாலத்தில் தமிழகத்தில் மூவேந்தர் ஆட்சி மறைந்து களப்பிரர் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. களப்பிரர் ஆட்சிக் காலம் என்பது இருண்ட காலம் என்ற கருத்தினைத் தற்போது தமிழறிஞர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. ஆயினும் களப்பிரர் யார், அவர்கள் எத்தகைய சமூக இயக்கப்போக்கின் பிரதிநிதிகள் என்பன போன்ற கேள்விகளுக்கு விடைகாணும் முயற்சிகள் சரியான கோணத்தில் மேற்கொள்ளப்படவில்லை.

களப்பிரர் ஆட்சி = வைசியர், வேளாளர் கூட்டணி ஆட்சி

வட இந்தியாவில் குப்தர்கள் ஆட்சி நடந்துகொண்டிருக்கும்போது தென் இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் அதன் தாக்கம் ஏதும் இருந்ததா என்றே இதுவரை ஆராயப்படவில்லை. சற்றொப்ப இக்காலகட்டத்தில் தோன்றிய சிலப்பதிகாரமும் மணிமேகலையும், பொருள் பரிவர்த்தனையையே வாழ்வாதாரமாகக் கொண்ட வணிக வர்க்கம் ஒன்று உருவாகிச் செல்வாக்குடன் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிட்டத்தை உணர்த்துகின்றன. குப்தர்கள் வைசிய வருணத்தவர் என்பது நாம் கவனத்தில் கொள்ளத்தக்கது. குப்தர் காலத்தில் ஏற்பட்ட வணிகப் பெருக்கத்தாலும் பணப் புழக்கத்தாலும், நகர மயமாதலின் முதன்மையான ஓர் அம்சமான 'நாகரிகம்' என்பதும் வளர்ந்து வந்தது என்பதை குப்தர் காலக் கலை இலக்கிய வெளிப்பாடுகள் உணர்த்துகின்றன. தொழில் வளர்ச்சியில் உன்னத நிலை எட்டப்பட்டிருந்தது என்பதைத் துருப்பிடிக்காத இரும்புத்தூண் போன்ற அற்புதப் படைப்புகள் நிறுவுகின்றன. சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படுகின்ற பரபரப்பான சமூக நடைமுறைகள் போன்றவை கைவினைஞர் சமூகத்தின் நாடுதழுவிய ஊடாட்டத்தால் தொழில் வளர்ச்சி ஏற்பட்டுவிட்டதன் அடையாளங்களாகும். மணிமேகலையில் (19:107-125), “மகத வினைஞரும் மராட்டக் கம்மரும் அவந்திக் கொல்லரும் யவனத் தச்சரும் தண்டமிழ் விளைஞர் தம்மொடு கட்டிக் கொண்டினி தியற்றிய மண்டபம்” குறிப்பிடப்படுகிறது. இத்தகை சாதனைகளுக்கு வணிக வர்க்கத்தின் எழுச்சியே பின்னணியாகவும், உந்து சக்தியாகவும் இருந்ததென்பதை நாம் உணர்கிற அதே வேளையில், வேறு இருவித இயக்கப் போக்குகளையும் உய்த்துணரலாம்.

1) வைசியர் என்ற வர்ணப் பெயர், சுதந்திரமான உழுகுடிகளையே முதன்மையாகக் குறித்த நிலை மாறி, சமூகத் தலைமையை எய்திவிட்ட வணிக வர்க்கத்தவரைக் குறிக்கத் தொடங்கிவிட்டது. தொல்காப்பியம் (மரபியல் 78), ''வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை'' எனக் குறிப்பிடுவதன் பின்னணி இதுவே. அடிமை நிலையிலிருந்த உழுகுடிகள், இப்போது அடிமைத் தளையிலிருந்து விடுபட்டுவிட்டனர். அரசு என்பது மூவேந்தர், வேளிர் போன்ற (சந்திர குல, சூரிய குல, யது குலச்) சத்திரியர்களால் இயக்கப்படுவது என்ற நிலை மாறிவிட்டது. தாய்வழிச் சமூகக் கூறுகளை மிகுதியாகக் கொண்ட அசுர குலச் சத்திரியன் மகாபலியின் வம்சத்தைச் சேர்ந்த பெண்மணி, சோழ நாட்டு இராசமாதேவியாக இருந்த நிலை மணிமேகலையால் (19:54-55) தெரியவருகிறது. சோழ அரசனுக்கு நாக நாட்டு இளவரசி பீலிவளையிடம் களவு மணத்தில் பிறந்த குழந்தை சோழ குலத்தவனாக அங்கீகரிக்கப்படாமல் ‘தொண்டைமான்’ என்ற பட்டத்துடனும், வேளாளர் என்ற வர்ண அந்தஸ்துடனும் அரசமைத்தமை, மணிமேகலை (24:57-59) வரிகளுடன் பெரும்பாணாற்றுப்படை (30-31) வரிகளுக்கு உரையாசிரியர்கள் அளிக்கும் விளக்கத்தையும் சேர்த்துப் படித்தால் தெரியவருகிறது. இதேபோன்று, சோழ அரசனுக்கு வேளாட்டியர் வம்சத்துப் பெண்மணி வசம் பிறந்தமையால் சோழ அரச குல அந்தஸ்து கிட்டாத களந்தையர் கோன் கூற்றுவ நாயனார் வரலாறும் இக்கால கட்டச் சமூக இயக்கப் போக்குகளை உணர்த்தும். இவை பற்றிப் பின்னர் விரிவாக ஆராய்வோம்.

வணிக வர்க்கத்தவரின் ஆதரவுடன் ஆட்சியைக் கைப்பற்றிய இத்தகையோரால் இயக்கப்படுகிற அரசுக்கு வாரம் (இறை) செலுத்துகிற அளவுக்குச் சுதந்திரக் குடிகளாக வேளாளர்கள் உயர்ந்தனர். அவர்களில் பலர் முறையான திருமுண உறவு, குடும்ப வாழ்க்கை ஆகியவற்றைப் பின்பற்றும் உரிமை எய்திவிட்டனர். தொல்காப்பியம் கற்பியல் 3ஆம் நூற்பா, மேல் மூன்று வருணத்தாருக்கு மட்டுமே உரியதாயிருந்த திருமண நடைமுறை கீழ் வருணத்தாராகிய வேளாளர்க்கும் தற்காலத்தில் உரியதாகிவிட்டது என்று பொருள்படும்வண்ணம், “மேலோர் மூவர்க்கும் புணர்த்த காரணம் கீழோர்க்கு ஆகிய காலமும் உண்டே” எனக் குறிப்பிடுவதும் இச்சமூக மாற்றத்தை உள்ளடக்கியே ஆகும்.

2) வைசியர் - சூத்திரர் கூட்டணி ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிவிட்டதன் விளைவாக வைதிக பிராம்மணர்களைவிட அதிகமாகப் பாதிக்கப்பட்டவர்கள் அரச குலத்தவரே. அதே வேளையில், முன்னர் பிராம்மண வர்ணத்தில் சேர்க்கப்பட்டிருந்த – அதாவது அதிகார அந்தஸ்து நிலையில் வைதிக பிராம்மணர்களுக்குச் சமமாக மதிக்கப்பட்ட8 வேளாப் பார்ப்பனர் – கண்மாளர்கள் - வணிகர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொணரப்பட்டுக் கைவினைஞர்களாகவும், வாரக் குடிகளான உழவர்களுக்கு ஏர்க் கலப்பை, மாட்டு வண்டி போன்றன செய்துகொடுத்துக் கூலிபெறும் தசசு, கொல்லுத் தொழிலாளர்களாகவும் ஆயினர். தங்களுக்குக் கட்டுப்பட்ட உள்குடிகளாகப் (உழுகுடிகளாக) பரம்பரை அடிமை வர்க்கம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் புதிய வாரக் குடியினரான குடியானவர் (வேளாளர்) இறங்கினர். வள்ளுவர் (கணியர்) போன்ற அறிவர் குழுவினர் பலர் பிராம்மண வர்ணத்தில் சேர்க்கப்பட்டிருந்த சங்க கால நிலைமை மாறிப் பறையர் சமூகத்துடன் இணைக்கப்படுவதற்குரிய நியாயத்தை உருவாக்கும் இயக்கப்போக்கு உருவாகிவிட்டது. பதினெண்கீழ்க் கணக்கு நூல்களை ‘வேளாண் வேதம்’ எனக் குறிப்பிடுவதற்கான சமூக வரலாற்றுப் பின்னணி இதுவே. வேளாளர்களின் பிற்கால மெய்க்கீர்த்திகளில் “பாணன் பிணம் சுமந்தோர் பறையனோடு சோறுண்டோர்” எனக் குறிப்பிடப்படுவதும் இத்தொடர்பினை உணர்த்தும். பள்ளர், பறையர் சமூகம் கருங்கை வினைஞர்களாகவும், களமர்களாகவும் உருமாறிய பின்னணி இதுவே எனத் தோன்றுகிறது.

அடிக்குறிப்புகள்:

1. "வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை" என்று நூற்பாவின் (தொல். மரபியல், 78) அடிப்படையில் வைசிய வர்ணத்தவர் எனக் குறிப்பிடுவதே வணிக வர்ணத்தவர் எனக் குறிப்பிடுவதைவிடப் பொருத்தமானதாகும்.

2. "கேளிர் போலக் கேள் கொளல் வேண்டி வேளாண் வாயில் வேட்பக் கூறி" - பொருநர். 75. வேளாண்வாயில் என்பது "உபகாரம் செய்வதற்கு உரிய முகாந்தரமாக அமையும் யாசகம்" என்று உரையாசிரியர் பொருள் கூறுகின்றார். தனது அரண்மனைக்கு வந்த பொருநர்களைக் கரிகாலன் உபசார வார்த்தைகள் கூறி வரவேற்பது இவ்வாறு குறிப்பிடப்படுகிறது. வேளாண்வாயிலோரின் பணிகளுள் வரவேற்பாளர் (receptionist) பணியும் ஒன்றெனத் தெரிகிறது.

3. “அந்நகரத்தினிலிருக்கும் வேளிர்குல அரசளித்து ----- ஆதித்தன் குல முதலோர்” - பெரியபுராணம், கடல்சூழ்ந்த சருக்கம், பா. 16.

4.“சட்டர் வெள்ளாட்டிகளை மடத்தில் வைத்துக் கொள்ளப் பெறார்”, பக். அ16, பாண்டியர் செப்பேடுகள் பத்து, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை-600113, 1999.

5. கலிங்கத்துப்பரணி - தாழிசை 41; “வேளத்துப் பெண்டாட்டி”, “உத்தமசீலியார் வேளம்” போன்ற பல குறிப்புகள் சோழர் கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளன.

6. புறநானூறு 74:4. இப்புறப்பாடலின் அடிக்குறிப்பில் இச்செய்தி குறிப்பிடப்படுகிறது. இது பிற்காலத்தில் கற்பனையாக எழுதிச் சேர்க்கப்பட்டது என்றும், நம்பத் தகுந்ததன்று என்றும் ஒரு வாதம் சிலரால் முன்வைக்கப்படுகிறது. இப்பாடலில் போரில் வீர மரணமடையாமல் எதிரிகளால் சிறைப்பிடிக்கப்பட்டு இழிவுபடுத்தப்பட்ட தலைமகன் ஒருவனின் கழிவிரக்கம் உள்ளத்தை உருக்கும் வகையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. எனவே, இப்புறநானூற்று அடிக்குறிப்பு பொருத்தமானதே.

7. பக். 76-77, இந்திய நிலமானிய முறை, தமிழாக்கம்: மு.ரா. பெருமாள் முதலியார், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ். சென்னை-600098. 1989.

8. சிலப்பதிகாரம் 10:125, உரை - பக். 259, 276, சிலப்பதிகாரம் மூலமும் அரும்பதவுரையும் அடியார்க்கு நல்லார் உரையும், உ.வே.சா. நூல் நிலையப் பதிப்பு, சென்னை-600090, 2008.

(நன்றி: தமிழினி, மார்ச் 2010)



SISHRI Home