You are printing this article from South Indian Social History Research Institute's web site: www.sishri.org
To avoid copyright violations, please get permission from the author(s) before reproducing this article in any form
தமிழரைத் தேடி - 6
பிரகஸ்பதி (ஆய்வாளர், தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்)
தமிழ்ச் சமூகமும் புராண மரபும்:

நீண்ட நெடிய வரலாற்றினைக் கொண்ட தமிழ்ச் சமூகத்திற்கென்று தனியாக புராண மரபு இல்லை என்பது மிகப் பெரும் குறையாகப் பார்க்கப்படுகின்றது. புராணங்களின் தோற்றத்திற்கான காரணிகளை ஆராய்வதன் மூலம், புராண மரபு இல்லாமைகூட தமிழ்ச் சமூகத்திற்கே உரிய சிறப்பம்சம் எனக் கூற முடிகின்றது.

வரலாற்று நினைவுகள்தான், வழக்காறுகளாகிப் பின்னர் சில புனைவுகளுடன் புராணங்களாகின்றன. தொடர்ச்சியான வரலாறு கொண்ட எந்த சமூகத்திலும், புராணங்கள் தோன்றுவதற்கான அடிப்படை இல்லை. வரலாற்று தொடர்ச்சி கொண்ட சமூகங்களில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் வழக்காறாக கூறப்பட்டு வருகின்றன. குறிப்பிட்ட சமூகம் வேறு சமூகத்திடம் அரசியல் மேலாண்மையை இழந்து கீழ்நிலைக்குச் சென்றபொழுது வரலாற்றுத் தொடர்ச்சியை இழந்து விடுகின்றது. இக்கட்டத்தில் முதல் சமூகத்தில் வழங்கப்பட்ட வழக்காறுகள் புராணங்களாக மாறுகின்றன.

சுமேரியப் புராணங்களே உலகில் முதலில் தோன்றின. மேற்காசியாவில் கி.மு. 5500 முதல் கி.மு.4300 வரை நிலவிய உபெய்து பண்பாட்டு சமமூகத்தின் முக்கிய நிகழ்வுகள், அச்சமூகத்தில் வழக்காறாகக் கூறப்பட்டு வந்தன. இதனைத் தொடர்ந்த ஊருக் காலக் கட்டத்தில் அரசியல் அதிகாரத்தில், புதிய சமூகத்தினர் பங்கு பெறுகின்றனர். இக்கட்டத்தில் உபெய்து காலத்திய வழக்காறுகள், ஊருக் சமூகத்தின் புராணங்களாகின்றன. உபெய்து பண்பாட்டினரின் தலைமக்களின், குலமுன்னோர்கள் ஊருக்காலத்திய கடவுளர்களாகின்றனர். இதேபோல் பெருவெள்ள அழிவுக்குப் பின், செமைட்டுகள் அதிகளவில் அரசியல் அதிகாரத்தில் பங்கு பெற்ற சூழலில், ஊருக் பண்பாட்டு வழக்காறுகள், புதிய சமூகத்தின் புராணங்களாகின.

சுமேரிய ஆறுகளில் ஏற்பட்ட பெருவெள்ள அழிவிலிருந்து தப்பிய அரசனை சுமேரிய புராணங்கள் சியுகத்து என அழைக்கின்றன. ஊருக் நகர அரசின் முதல் அரசனாகக் கருதப்படும் கில்கமேஷ் தொடர்பான கதையில் அவனுடைய குல முன்னோனாக சியுகத்து கூறப்படுகின்றான். பெருவெள்ள அழிவினைத் தொடர்ந்து தோன்றிய ஆரம்பக்கட்ட வம்சாவழி அரசுகளின் காலத்தில் சியுகத்துவின் கதை வரலாற்றுக் கதையாக வழக்காறுகளில் நிலவியுள்ளது. சோழரின் குல முன்னோர்களான சிபி சக்கரவர்த்தி மற்றும் மனுநீதிச் சோழன் ஆகியோரின் கதைகள், வரலாற்றுக் கதைகளாக சங்ககாலத்தில் கூறப்பட்டதுபோல், சியுசுத்துவின் கதையும், சுமேரியாவில் வழங்கப்பட்டது எனலாம். கி.மு. 2350க்குப் பின் செமைட்டுகளின் அக்காடியன், அசிரியன் மற்றும் பாபிலோனிய அரசுகள் தோன்றி அரசியல் மாற்றம் முழுவதுமாக நிகழ்ந்தபின்னர், இக்கதை புராணத்தன்மையை பெறுகின்றது. பின்னர் தோன்றிய புராணம் சியுசுத்துவை உத்னபிஸ்தம் என பெயர் மாற்றம் செய்து விட்டது.

மகாபாரதம், இராமாயணம் ஆகிய புராணங்களின் தோற்றம், இக்கருதுகோளை மேலும் தெளிவாக்குவதாக உள்ளது. இவ்விரு காப்பியங்களும், வாய்மொழி புலவர்களால் பாடப்பட்டு வந்த கதைகளை தொகுத்து உருவாக்கப்பட்டதாக, இன்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். புராண கால ஆரியர் வட இந்தியாவில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவரை, அச்சமூகத்தின் வழக்காறுகளாக இராமாயணம் தொடர்பான கதைகளும், மகாபாரதப் போர் தொடர்பான கதைகளும் வாய்மொழிப் புலவர்களால் பாடப்பட்டு வந்தன. புராண கால ஆரியர் சமூகத்தவர்களான பரீட்சித்து மகாராஜா, ஜனமேஜயனம் போன்றோர் ஆட்சியிலிருந்தவரை, இப்பாடல்கள் வழக்காறகவே பாடப்பட்டன. கி.மு.400க்குப் பின், புராண கால ஆரியர் தொடர்பான அரசவம்சங்கள் அரசியய் அதிகாரத்திலிருந்து முழுவதுமாக நீக்கப்பட்டனர். அதன்பின் இக்கதைப் பாடல்கள் தொகுக்கப்பட்டதால், அக்கதைகள் புராணத் தன்மையை அடைந்துவிட்டன. வரலாற்றுக் காலத்திற்கு முந்திய சமூகங்களின் வழக்காறுகளே இவ்வாறு புராணங்களாகின்றன. சமூகம் ஒரே ஒரு அரசியல் மாற்றத்தை மட்டும் சந்தித்த சூழலில் வழக்காறுகள் புராணங்களாக மாறும்பொழுது, அவற்றில் சிறிது வரலாற்றுத் தன்மையும் நீடித்து விடுகின்றன. இராமாயணம், மகாபாரதம், மற்றும் சியுசுத்து தொடர்பான புராணக் கதைகளை இதற்கு உதாரணமாகக் கூறலாம். பல அரசியல் மாற்றங்களை கடந்து வந்த வரலாற்றுக் கதைகள், வரலாற்றுத் தன்மையை பெருமளவு இழந்து, முழுக்க புராணத் தன்மையை அடைகின்றன. வியாசரால் தொகுக்கப்பட்டதாகக் கூறப்படும் 18 புராணங்களும் இவ்வாறு வரலாற்றுத் தன்மையை இழந்த புராணங்களாகும். எனினும், இப்புராணங்களிலும் சில தொல் பழங்காலத்திய வரலாற்றுச் செய்தி இழையோடியிருப்பதை அடையாளம் காணலாம்.

சங்ககால தமிழ்ச் சமூகத்தில் வேந்தர், வேளிர் குடியினர் தலைமக்களாயிருந்தனர். தமிழ் மரபு இவ்வரச குடியினர் குல முன்னோராக இந்திரன், வருணன், திருமால், முருகன் ஆகிய கடவுள்களை கூறுகின்றது. இக்கடவுள்களில், இந்திரன் தலைமைப் பதவியைக் குறித்து நிற்கின்றது. பிற மூன்று கடவுள்களும், தமிழக அரச குடியினரின் குல முன்னோராவார். இக்கடவுளர்களின் தோற்றக் காலத்திலிருந்து வேந்தர், வேளிர் குடியினர் தொடரச்சியாக அரசியல் அதிகாரத்தை கைவிடாமல் வந்துள்ளனர் எனத் தெரிகின்றது. இப்பின்னணியில்தான் தமிழ்ச் சமூகத்தில் தொடர்ச்சியான புராண மரபுகள் தோன்றாமல் போய்விட்டது. வட இந்திய புராணங்கள் கூறும் பல கடவுள்கள் தமிழ்ச்சமுகம் தொடர்புடையனவாதலால், அப்புராணக் கதைகள் தேவையான இடத்தில் எடுத்தாளப்பட்டுள்ளன.

சோம சுந்தரேஸ்வரனை முதல் பாண்டியனாகக் கொண்ட பாண்டிய அரசகுலத்தின் வரலாற்றுத் தொடர்ச்சிக்கு வேறு சான்று தேவையில்லை. சோழருக்கும் நீண்ட, நெடிய வரலாற்றுத் தொடர்ச்சி இருந்ததாலேயே மனுநீதிச் சோழனும், சிபிச் சக்கரவர்த்தியும் கடவுள்களாக மாறாமல் வரலாற்று நாயகர்களாக காட்சியளிக்கின்றனர். தமிழ் வேந்தர் குடியின் இவ்வரலாற்றுத் தொடர்ச்சி, பண்டைய சுமேரியா மற்றும் ஏலமைட் வரை செல்வதைத் தொல்லியல் சான்றுகள் நிறுவுகின்றன.

குல முன்னோர்களை கடவுள்களாக்கிய மரபு கி.பி 5500 - கி.மு 4300ல் நிலவிய உபெய்து பண்பாட்டிலேயே தோன்றி விட்டது. பண்டைய காலத்தில் உலகம் முழுவதும் வாழ்ந்து வந்த இனக்குழுக்களிடையே, ஆவியுலகக் கோட்பாடு பரவியிருந்தது. ஆவியுலக நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு, மந்திரச் சடங்குகள் வளர்ந்தன. இதன் அடுத்தக்கட்ட வளர்ச்சியாக முன்னோர் வழிபாடு தோன்றியது. உபெய்து பண்பாட்டில் ஒவ்வொரு நகர மாந்தரும் ஒரு இனக்குழுவை சேர்ந்தவராக வாழ்ந்தனர். உபெய்துகளின் கல்லறைப் பொருட்களில் ஏற்றத்தாழ்வுகள் இல்லாமையைக் கொண்டு, அங்கு ஒரு வகையான சமத்துவம் நிலவியதாக வரலாற்றிஞர் கூறுவதைக் கொண்டு இவ்வாறு கருத முடிகின்றது. ஒவ்வொரு நகர மாந்தரும் ஒரே இனக்குழுவைச் சேர்ந்தவர் என்பதாலேயே, இத்தகைய சமத்துவத்தை காண முடிகின்றது. இந்நகர மாந்தரின் குலமுன்னோனை, அந்நகரங்களின் காவல் தெய்வமாக வழிபட்டனர். நகர தலைவர்கள் செய்த வீர தீர செயல்களெல்லாம், குல முன்னோன் தெய்வத்தின் மேல் ஏற்றி வழக்காறாகக் கூறப்பட்டது.

உதாரணமாக, விருஷ்ணிகளின் தலைவன் கண்ணன் தொடர்பான புராணக் கதைகள், பல காலக்கட்டங்களில் விருஷ்ணி தலைவர்கள் மேற்கொண்ட வீர தீர செயல்களின் தொகுப்பாகும். ஆயர்பாடி கண்ணனும் மகாபாரதக் கண்ணனும், வெவ்வேறு நபர்கள் என வரலாற்றறிஞர் சுவீரா, ஜெயஸ்வால் கருதுவது, இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. குல முன்னோன் தெய்வமாகிய கண்ணன் மேல், விருஷ்ணிகளின் தலைவர்கள் பல்வேறு காலக் கட்டங்களில் செய்த வீரதீர செயல்கள் ஏற்றிக்கூறப்பட்டதாலேயே, கண்ணன் சுவாரஸ்யமான கடவுளாகிவிட்டான். இதுபோல்தான் உபெய்துகளின், நகர அரசர்களின் வீரதீர செயல்கள் அவர்களின் குல முன்னோரான காவல் தெய்வத்தின் மேல் ஏற்றி வழக்காறுகள் தோன்றின.

உபெய்து காலம் வரை நகரக் குடிகள் ஒரே இனக்குழுவை சேர்ந்தவையாக இருந்தன. நகரைச் சார்ந்து வாழ்ந்த திணைக் குடிகள் முழு சுதந்திரத்துடன் வாழ்ந்ததுடன் தனி தெய்வ வழிபாட்டையும் கொண்டிருந்தனர். கி.மு. 4300 - கி.மு 3200 வரை நிலவிய ஊருக் பண்பாட்டில், ஒரே அரசியல் அமைப்பிற்குள் பல குடிகள் வாழத் தலைப்பட்டனர். இக்காலக்கட்டத்தில் உபெய்து காலத்திய வழக்காறுகள் புராணங்களாக மாறியிருந்தன. நகர சமூகத்தின் தலைமக்களின் குலமுன்னோன், அனைத்து சமூகத்திற்குமான கடவுளாக மாறினான். ஊருக் பண்பாட்டு தலை மக்களுக்கு (ஆட்சி குடிகள்), அக்கடவுள்கள் குலமுன்னோராயினும், பிற குடிகளுக்கு மேலுலகக் கடவுளாகச் சித்தரிக்கப்பட்டன. இவ்வியக்கப் போக்கில் முன்னோர் வழிபாடு கடவுள் வழிபாடாக மாறியது.

ஊருக் பண்பாட்டில் ஆயிரக்கணக்கான தெய்வங்கள் வழிபடப்பட்டன. ஊருக் பண்பாட்டைத் தொடர்ந்த ஊர் வம்சாவழி அரசுகளின் காலத்தில், சில தெய்வங்கள் நகர எல்லைகளைத் தாண்டி அனைத்து இனக்குழுக்களும் வழிபடக் கூடிய பெருந் தெய்வங்களாகவும், மற்றவை சிறுதெய்வங்களாகவும் மாறியிருந்தன. இக்காலத்தில், அரசியல் மேலாண்மையைக் கொண்டிருந்த நகர ஆட்சி குடிகளின் குல முன்னோன் தெய்வங்கள் பெருந் தெய்வங்களாகவும், பிற குடிகளின் தெய்வங்கள் சிறு தெய்வங்களாகவும் மாறியிருந்தன போலும்.

அரசியல் அதிகாரத்தை இழக்காமல் தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டிருந்ததாலேயே, சங்க கால தமிழ்ச் சமூகத்தில் தலை மக்களின் குலமுன்னோர்களாக தமிழரின் பெருந்தெய்வங்கள் காட்சியளிக்கின்றன. நாற்கவிராசநம்பி இயற்றிய அகப்பொருள் விளக்கம் ஐந்து நில தலைமக்கள் பட்டியலில், அந்நில தெய்வங்களை முதலில் குறிப்பிடுவதை, இம்மரபை உணர்த்துவதாக உள்ளது.

குறிஞ்சி: விறற் சேய் (முருகன்), பொருப்பன், வெற்பன், சிலம்பன்
முல்லை: நெடுமால், குறும்பொறை நாடன், தோன்றல்
மருதம்: இந்திரன், ஊரன், பைந்தார் மகிழ்னன்
நெய்தல்: வருணன், சேர்ப்பன், விரிதிரைப்புலம்பன்
பாலை: கன்னி, (குமரி), விடலை, காளை, மீளி

சேந்தன் திவாகரம், அரசருக்குரிய பெயர்களையே இறைவனுக்குரிய பெயர் பட்டியலில் கூறியிருப்பதும் இக்கருத்திற்கும் வலு சேர்க்கின்றது.

இறைவன் பெயர்: நாதன், நாயகன், அதிபன், காந்தன்

(திவாகரம்-175) பதி, கோன், ஈசன், செம்மல், இறைவன், தலைவன், மன்னவன் பிரானே, கொழுநன், அரசன், ஆதி எனப் பதினைந்தும் உரைசெய் எப்பொருட்டும் இறைவன் மேற்றே.

அரசன் பெயர்: புரவலன், கொற்றவன், பொருமான், காவலன், அரசன், ஏந்தல், கோவே, குரிசில், (திவாகரம் - 178) தலைவன், மன்னவன், வேந்தன், முதல்வன், நிருபன், பூபாலன், நரபதி, பார்த்திபன், இறைவன், அண்ணல் எனப் பதினெட்டும் அரசர் தொல் பெயர் ஆகும் என்ப.

திவாகரத்தில் அரசன் பெயர் தொகுதியில் இடம் பெறாமல், இறைவன் பெயரில் இடம் பெற்றுள்ள நாதன், அதிபன், பிரான், கொழுநன் போன்ற பெயர்களும் இலக்கியங்களில் அரசருக்கு வழங்கி வருவதைக் காணலாம். அரசன் குடிமக்களிடம் வாங்கும் வரியை 'இறை' என அழைப்பதும் பொருத்தப்பாடாகவே உள்ளது.

மிகவும் பிற்காலத்திய, ஊத்துமலை பாளையப்பட்டு வம்சாவழி வரலாற்று ஆவணம் கூறும் செய்தி இம்மரபை தெளிவான நிறுவுவதாக உள்ளது.

குறுநில மன்னர் அந்தஸ்தில் இருந்த கொண்டையன்கோட்டை மறவரின் தலைவனிடம், மகட்கொடை கேட்டு பிற்கால பாண்டியமன்னன் ஒருவன் தூது அனுப்புகிறான். அதற்கு மறுமொழி கூறுமிடத்து, ராஜகுலத்துக்கு நாங்கள் மகட்கொடை கொடுக்க முடியாது என்றும், ராஜகுலமானது பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதில்லை எனவும் கூறி, புராணகால அரசர்களின் செயல்களை மேற்கோள் காட்டுகின்றனர். ஊரார் பேச்சைக் கேட்டு கர்ப்பிணியான தன் மனைவி சீதையை சந்தேகப்பட்டுக் காட்டுக்கு அனுப்பிய ராமனையும், ராஜகுலவர் நிறைந்த அரசவையில் தன் மனைவியின் துகில் உரியப்படுவதைத் தடுக்க முடியாமல் நின்ற பாண்டவர்களையும் குறை கூறுகின்றனர். வள்ளி தங்களுடைய வேட்டுவ குலத்தின் வளர்ப்பு மகள் என்பதாலேயே முருகனுக்கு மணம் முடித்துக் கொடுத்தாகவும் கூறுகின்றனர்.

ராமன், பாண்டவர்கள் போன்ற அவதார புருஷர்களை ராஜகுலமாக கூறிவிட்டு, முருகனை தமிழக ராஜ குலத்தவனாக கூறியது, குறிஞ்சி நில தலைமக்களின் குலமுன்னோனாக முருகனைக் கருதியதாலேயே ஆகும். முருகனையும், முல்லை நில தலைமகன் திருமாலையும் 'வேள்' என தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுவது இங்கு பொருந்துவதாக உள்ளது. அரசகுலத்தவரின் குல முன்னோரை, அனைத்து குடிகளும் பெருந்ததெய்வங்களாக ஏற்று வழிபட்ட மரபு மேற்காசியாவில் தோன்றி வளர்ந்ததாகும். தமிழரின் பெருந் தெய்வங்களான வருணன், இந்திரன், திருமால், முருகன், சோமசுந்தரேஸ்வரன் (சந்திரன்), கன்னி போன்ற தெய்வங்கள் மேற்காசியாவில் தோன்றியவை என்பதை நிறுவ முடியும். (இதனைத் தனிக் கட்டுரையில் காணலாம்).

உலகின் பிற அரசகுலத்தவருக்கு கடவுளர்கள் தேவலோகத்தைச் சேர்ந்தவர்களாகும். தமிழக வேந்தர் குடியின் குலமுன்னோர்களான இந்திரன், வருணன் போன்ற கடவுளர்கள் ரிக்வேத ஆரியருக்கு தேவலோகக் கடவுளாகக் காட்சியளிப்பதாக தர்மனந்த கோசாம்பி குறிப்பிடுவது ஒப்பு நோக்கத்தக்கது. பெரும்பான்மையான ஆரிய மொழி பேசும் இனக்குழுக்களும், யூதர்களும் உட்பட்ட செமைட்டுகளும், மேற்காசிய அரசியல் சூழலில் தமிழர் தொடர்பான சமூகங்களின் அடியோராகவும், வேளாண் வாயிலாகவும் வாழ்ந்து, பின்னர் ஏற்பட்ட பண்பாட்டு வளர்ச்சியால் தனி ஆட்சிக்குடிகளாக பரிணமித்ததை தெளிவாக நிறுவ முடியும். (தனிக் கட்டுரையில் காணலாம்)

யூதர்களின் 'பிதா' முகமதியர்களின் 'அல்லா' ஸ்காண்டினேவியரின் 'ஓடின்', பாரசீக ஆரியரின் 'அகுர மஸ்தா' போன்ற முழு முதல் கடவுள்கள் எல்லாம், தொடர்புடைய சமூகத்தினருக்கு மேல் உலகக் கடவுளாகவே காட்சியளிக்கின்றனர். இவ்வனைத்து கடவுள்களுமே, வருணனின் பல்வேறு முந்திய வடிவங்களாகும். சுமேரியருக்கு, அனைத்து கலைகளையும் நெடுங்கணக்கையும் கற்றுக் கொடுத்த 'ஒன்ணெஸ்' என்ற தெய்வம் சுமேரியரிடையே, யா (Ea) என்றும், என்கி(Enki) என்றும் இரு தெய்வாளாகப் பிரிந்து வளர்ந்தது. பண்டைய மேற்காசியாவின் ஹரியன் என்ற இனக்குழு அறிஞர்கள், அங்கு பிற்காலத்தில் குடியேறிய இந்தோ ஐரோப்பிய இனக்குழுவினருக்காக, சுமேரியபுராணங்களை, இந்தோ ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்த்து கொடுத்தாக வரலாற்றுக்குறிப்பு உள்ளது.

ஹரியன் இனக்குழுவினர் பேசிய மொழிகளுள், மிட்டானி மொழியும் ஒன்று. இம்மொழி தொல்தமிழுடனும் (திராவிடம்), பின்னோ-உராலியன் மொழிகளுடனும் மிக நெருங்கிய மொழியாகும். மிட்டானி அரசுக்குள், இந்தோ ஐரோப்பியர் பெருமளவில் குடியேறி வழுவான நிலையை அடைந்தசூழலில், அம்மொழி மணிபிரவாள நடையைப்போன்று இந்தோ ஐரோப்பிய மொழிகளின் சொற்களை பெருவாரியாக ஏற்றுத்திரிந்திருந்தது. (பிராகிருத மொழித்தோற்றத்திற்கான வேர்). இவ்வாறு திரிந்த மிட்டானி மொழியிலேயே, முதன்முதலில் (கி.மு. 1350) வருணன், இந்திரன் என்ற பெயர்களில் தெய்வங்கள் குறிப்பிடப்பட்டன. ஹரியன் அறிஞர்கள், 'யா' என்ற தெய்வத்தை, இந்தோ ஐரோப்பியருக்கான வருணன் என பெயர் மாற்றினர் போலும்.

ரிக்வேத ஆரியரின் சமஸ்கிருத மொழியைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டுமானால், சுமேரிய மொழிப்புலமை வேண்டும் என தர்மானந்த கோசாம்பி கூறுவார். ரிக்வேதத்தில் காணப்படும் பல மரபுகள், சுமேரியரிடமிருந்து பெறப்பட்டவை என்பது அவர் வாதம். தொல்தமிழர் மற்றும் ஊரார்டியன் இனக்குழுக்களின் கலப்பால் உருவானதே, சுமேரிய நாகரிகமாகும். சங்ககாலத் தமிழரின் இலக்கிய, இலக்கண மரபுகளையும், அறக்கோட்பாடுகளையும், சமயத்தையும் மீட்டுருவாக்கம் செய்வதற்குச் சுமேரிய, ஏலமைட் போன்ற மேற்காசிய மொழிகளின் இலக்கியங்களை நன்கு ஆய்ந்தால் பயனுள்ளதாக அமையும். இப்பண்டைய மொழிகளின் இலக்கியங்களை ஆய்வதன் மூலம், தமிழரின் பண்பாட்டுத் தொடர்ச்சியும் தெளிவாக நிரூபணம் ஆகும்.

brahaspathy@sishri.org
(c) Author. To avoid copyright violations, please get permission from the author(s) before reproducing this article in any form.