You are printing this article from South Indian Social History Research Institute's web site: www.sishri.org
To avoid copyright violations, please get permission from the author(s) before reproducing this article in any form
தில்லை கோயில் பிரச்சினை குறித்து
எஸ். இராமச்சந்திரன் (ஆய்வாளர், தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்)
கோயில் வழிபாடு உட்பட சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும் காலத்திற்கேற்ப மாறுதல்கள் ஏற்படுவது அங்கீகரிக்கப்பட வேண்டிய ஒன்று; இதில் இரண்டாம் கருத்துக்கே இடமில்லை. முன்னோர் விதித்த முறைப்படியேதான் அனைத்தும் இருக்க வேண்டுமெனில் மின் தொடர்புகூட வெட்டப்படுவதுதான் சரி என்றாகிவிடும். வழிபடுகின்ற பெரும்பான்மையான மக்களின் மொழி உணர்வும், உணர்வுபூர்வ விருப்பங்களும் மதிக்கப்பட வேண்டும்; மாறுதல்கள் தேவையெனில் மாற்றிக்கொள்ளப்பட வேண்டும். அதுதான் ஜனநாயகபூர்வமானது; இந்த உணர்வுகளுக்கு எதிராக எவருடைய நடவடிக்கைகள் அமைந்தாலும் அவை கண்டிக்கத்தக்கவையே.

ஆனால், அதற்காக வரலாற்றில் இடம்பெற்றுவிட்ட, வசதிக் குறைவான நிகழ்வுகளை மறைத்துவிட்டு, தம் கருத்துக்குச் சாதகமான விஷயங்களை மட்டும் தெரிவு செய்து முதன்மைப்படுத்தி முன்வைப்பது நேர்மையான செயலல்ல. ”கரையான் புற்றுக்குள் கருநாகம்” என்கிற கட்டுரையில் (தமிழர் கண்ணோட்டம், ஏப்ரல் 2008), அதன் ஆசிரியர் திரு. ஜெயராமன், தில்லை வாழ் அந்தணர்கள் குறித்த அர்ஜுன் சம்பத் அவர்களின் கருத்தை (தினமணி கட்டுரை) மறுக்கும் விதத்தில், ‘மொழி, உடற்கூறு அடிப்படையிலும் வரலாற்று அடிப்படையிலும் தீட்சிதர்கள் அந்நியர்களே’ என்று அழுத்தந் திருத்தமாக வரையறை செய்திருக்கிறார். இன்றைய தீட்சிதர்களின் மூதாதையர்கள் காஷ்மீரத்திலிருந்து வந்தவர்கள் என்று பி.ஜி.எல். சாமி குறிப்பிடுவதைத் தம் கருத்துக்கு ஆதாரமாகச் சுட்டிக் காட்டியுள்ளார்.

தீட்சிதர்களின் சம்ஸ்கிருத அறிவு மற்றும் பூசை நெறிமுறைகளில் சமஸ்கிருதத்தைப் பயன்படுத்துவது என்பவற்றைக் கொண்டு மொழி அடிப்படையில் அவர்களை அந்நியர் என்று வகைப்படுத்துகிறார். தீட்சிதர்கள் தமக்குள்ளும், பிறருடனும் அன்றாடம் புழங்குகின்ற மொழி தமிழே; மேலும் அன்றாட வாழ்க்கையில் சம்ஸ்கிருதம் அல்லது இந்தோ-ஐரோப்பிய அல்லது பிற வட இந்திய மொழிகள் பேசும் பிராம்மணர்களுடன் அவர்களுக்கு உணர்வுபூர்வமான ஐக்கியமோ, உறவோ, பெண்-கொடுக்கல் வாங்கலோ இருக்கின்றதா? இவ்வாறாக, வட இந்திய பிராம்மணர்கள் அல்லது இந்தோ- ஐரோப்பிய மொழித் தொடர்புள்ள மற்றவர்களுடன் இணந்து இயக்கமாக அணிதிரளக்கூடிய மனப்பாங்கு உள்ளதா? எனவே அவர்களை மொழி அடிப்படையில் தமிழர்களல்லர் என்று சொல்வது யதார்த்த நிலையைப் பிரதிபலிப்பதாகாது. மரபணு அடிப்படையில் அவர்களிடம் தமிழுக்கு / திராவிடத்துக்கு அந்நியமான காஷ்மீரத் தன்மை நீடித்து வருகிறது என்பது ஜெயராமன் அவர்களின் வாதம் எனில், அவருக்கு மற்றோர் ஆய்வு முடிவைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். கன்னியாகுமரி மாவட்ட மக்கள் தொகையில் 60-65% விழுக்காடு உள்ள சான்றோர் (நாடார்) சமூகத்தவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மரபணு சோதனையில், அவர்கள் காஷ்மீரி பிராமணர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது. (p. 10, Kanniyakumari Aspects and Architects, Dr. M. Immanuel, Historical research & Publication trust, Nagercoil, 2007.) எனவே இனக்கலப்பு என்பது என்றோ நிகழ்ந்துவிட்ட ஒன்று. வருணமும் சாதியும் ஒன்றே என்று நினைத்துக் குழப்பிக்கொண்டு ஆராய்ச்சி செய்வது இப்படித்தான் முடியும்; இனத் தூய்மை என்பது ஒரு மாயையே.

தில்லை தீட்சதர்களைக் கௌண்டின்ய, ஸ்ரீ வத்ஸ, விஸ்வாமித்ர மற்றும் ரவிஷன்ய கோத்ரங்களைச் சேர்ந்தவராகக் குறிப்பிடுகிறார் திரு. ஜெயராமன். கோத்ரம் என்ற சொல் ‘மாட்டுக் கூட்டத்தை’ அடையாளமாகக் கொண்டு வகைப்படுத்தப்பட்ட கூட்டங்களைக் குறிக்கும். கௌண்டின்யர் என்பது குண்டத்தில் தோன்றியவர் எனப் பொருள்படும். திலோத்தம்மையின் நடனத்தைக் கண்டு வருணாமித்ரர்களுக்கு ஸ்கலிதம் ஏற்பட, அதனைக் குண்டத்தில் பிடித்து வைத்ததில் தோன்றியவர்களே அகத்தியரும் வசிஷ்டரும் என்பது புராணக் கதை மரபு. விஸ்வாமித்ரர் என்ற பெயர் சத்ரிய வர்ணத்தில் தோன்றி வசிஷ்டர் வாயால் ‘பிரம்மரிஷி’ பட்டம் பெற்று பிராம்மணராக அங்கீகரிக்கப்பட்ட ஒரு ரிஷியின் பெயராகும். இந்த மூன்று ரிஷிகளுமே சுத்த சுயம்புவான பிராம்மணர்கள் அல்லர். இந்த ரிஷிகளின் தோற்றமே வருணக் கலப்புக்குச் சான்றாக உள்ளது. இதில் குறிப்பாகக் குறுமுனியாகிய அகத்தியர் இரண்டு வருணங்களின் இயல்புகளைக் கொண்டவர் என்பது வேதங்களில் பதிவாகியுள்ளது. மேலும் அவரது உருவம் குறித்த வர்ணனைகளே அவர் இந்தோ ஐரோப்பிய இனத்தவர் அல்லர் என்பதற்குச் சான்றாகும்.

.தில்லைவாழ் அந்தணர்களும் தீட்சிதர்களும் வெவ்வேறு பிரிவினர் என்கிறார் கட்டுரை ஆசிரியர். தில்லை மூவாயிரவர் என்றும், தில்லை வாழ் அந்தணர் என்றும் சொல்லப்படுபவர்கள் இன்றைய தீட்சிதர்களிடமிருந்த்து வேறுபட்டவர்கள் என்கிற முற்றிலும் தவறான ஓர் அடிப்படையை இக்கட்டுரையின் மையக்கருத்தாகக் கொண்டு எழுதியுள்ளார். மேலும் இக்கருத்தை வலியுறுத்தும் விதத்தில் ‘கரையான் புற்றுக்குள் கருநாகம்’ என்று கட்டுரைக்குத் தலைப்பிட்டுள்ளார். சரியோ தவறோ, தில்லைவாழ் அந்தணர்கள் என்று தேவார காலத்திலிருந்து அழைக்கப்பட்டு வருகின்ற பூசகர்களின் வம்சாவழித் தொடர்புடையவர்களே இன்றைய தில்லை தீட்சிதர்கள். இடைக்காலத்தில் இத்தொடர்பு முற்றிலும் அறுந்து, தில்லைவாழ் அந்தணர்களுடன் அறவே தொடர்பற்ற தீட்சிதர்க் கூட்டமொன்று தில்லையில் குடியேற்றப்பட்டு, தில்லைக் கோயில் பூசகப் பணியும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

‘கொடும்பாளூர்ப் பகுதியில் வலிமை பெற்ற கூற்றுவ நாயனார் பாண்டிய, சோழ நாடுகளைக் கைப்பற்றி தில்லை வாழ் அந்தணர்களைத் தமக்கு முடிசூட்டுமாறு வேண்ட ...’ என்றெல்லாம் நீண்ட ஆலாபனை செய்துள்ளார் ஜெயராமன். கொடும்பாளூர் என்பது இருக்கு வேளிர்கள் தலைநகரம். இருங்கோ வேளிர் அல்லது இருக்கு வேளிர்களுக்கும் கன்னட மொழிக்கும் தொடர்பு இருந்த்திருக்கலாம் என்கிற ஒரு கருத்து உண்டு. அப்படி இருந்திருக்குமாயின் அது கி.பி. 9-10 ஆம் நூற்றாண்டுகளில் கர்நாடகத்தில் செல்வாக்கு பெற்று விளங்கிய காளாமுக சைவ சமயத்தினால் ஏற்பட்ட தொடர்பாகவே இருக்கவேண்டும். (கொடும்பாளூர் மூவர் கோயில் கல்வெட்டில் ஆத்ரேய கோத்திரத்து மல்லிகார்ஜுனர் என்ற காளாமுக குரு குறிப்பிடப்படுகிறார்.) கூற்றுவ நாயனாரோ, களந்தையர் கோன், அதாவது களப்பிரர் குல அரசனாவார். அவரது காலம் கி.பி. 5-6ஆம் நூற்றாண்டாகலாம். களப்பிரர்கள் கர்நாடகத்திலிருந்து தமிழகத்தில் குடியேறியவர்கள் என்றொரு கருத்து உண்டு. ஆனால், கொடும்பாளூர் இருக்கு வேளிர்களுக்கும் களப்பிரர்களுக்கும் ஒட்டுமில்லை, உறவுமில்லை. அப்படி இருக்கையில் கூற்றுவ நாயனாரைக் கொடும்பாளூருடன் தொடர்புபடுத்துவது தவறானதாகும்.

இது போலவே கௌட தேசத்திலிருந்து (வங்காளத்திலிருந்து) தில்லைக்கு வந்த சிம்ம வர்மன் தில்லையில் இருந்த நீர் நிலையில் மூழ்கி எழுந்து ஹிரண்ய வர்மன் ஆனான் என்ற கோயில் புராணக் கதையைக் குறிப்பிடுகின்ற ஜெயராமன், ஹிரண்ய வர்மனை கி.பி. 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நந்திவர்ம பல்லவனின் தந்தை என்று முடிவு செய்கிறார். மட்டுமின்றி, இதே காலத்தைச் சேர்ந்தவர்தான் ஆதி சங்கரர் என்றும், ஆதி சங்கரர் காலத்தில் நம்பூதிரிப் பார்ப்பனர்கள் பெருமளவில் தில்லை வந்தனர் என்று கருதலாம் என்றும் குறிப்பிடுகிறார். ஊகத்தின் மேல் ஊகங்களை அடுக்கிக்கொண்டே செல்வது ஆய்வு ஆகாது. ‘கௌடேச மனு’ என்றும், வங்காளத்தில் இருந்து தில்லைக்குக் குடியேறி ஆட்சி புரிந்த சிம்மவர்மன் என்றும் கோயிற்புராணம் குறிப்பிடும் அரசன் பல்லவ அரசனாக இருக்கமுடியாது. பல்லவர்கள் தங்களைக் கௌட தேசத்தவர் என்று எந்த ஆவணத்திலும் குறிப்பிட்டுக் கொண்டதில்லை. மாறாக, தில்லைக் கோயிலுடன் மரபு வழித் தொடர்புடையவர்கள் சோழ அரசர்களேயாவர். சோழர்களுக்கும் கௌட தேசத்துக்கும் உள்ள தொடர்பு பல ஆவணங்களிலும் பதிவாகியுள்ளது. தில்லைக் கோயிலுடன் எந்த வகையிலும் தொடர்பற்ற ஆதி சங்கரரை எவ்வித அடிப்படையும் இன்றித் தொடர்புபடுத்தி, ஆதி சங்கரரே நம்பூதிரி பிராம்மணர் என்ற தொனியில் ஜெயராமன் எழுதியுள்ளது குழப்பங்களின் உச்சமாகும். ஆதி சங்கரரால் நிறுவப்பட்டதாகக் கருதப்படும் அத்வைத மதத்தைச் சேர்ந்தவர்கள், அவர்கள் வைதிக பிராம்மணர்களாக இருந்தாலும்கூட தில்லைக் கோயிலில் கருவறைக்குள் சென்று பூசை செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள் என்கிற விவரத்தை உள்ளது உள்ளபடியே சொல்லும் நேர்மை கட்டுரையாளரிடம் இல்லை என்பது வாசகர்களின் கவனத்திற்குரியது.

உண்மையில், தில்லைவாழ் அந்தணர்கள் குறித்துச் சம்மந்தரின் தேவாரம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்:

“பறப்பைப் படுத்தெங்கும் பசுவேட் டெரியோம்பும்
சிறப்பர் வாழ் தில்லைச் சிற்றம்பலம்”

[இந்த யாகம் (பசுவேட்டு எரியோம்புதல்) செய்யும் மரபில் யாகம் செய்வதற்கு முன்பாகக் காப்புக்கட்டுதல் போன்ற ஒரு சடங்கே தீக்ஷை அல்லது தீக்கை எனப்படும். காண்க: பாகவதம், அத்தியாயம் 10.]

“கற்றாங்கு எரியோம்பிக் கலியை வாராமே
செற்றார் வாழ் தில்லைச் சிற்றம்பலம்”

என்று சம்மந்தரால் குறிப்பிடப்படுகின்ற தில்லைவாழந்தணர்கள், யக்ஞ மரபைப் பின்பற்றிய வைதீகப் பிராம்மணர்களாக இருந்து சிவ வழிபாட்டிலும் பூசைகளிலும் ஈடுபட்டவர்களாவர். இவர்களை ‘ஊர்த்துவ சைவர்’ என்று குறிப்பிடுவர். காளி வழிபாடு, சிவ வழிபாட்டால் வீழ்த்தப்பட்டுச் சிவன் ஆடவல்ல பெருமானாகவும், கௌட தேசத்துக் காளி வழிபாட்டு மரபினரான சோழர்கள், ஆடவல்லானைக் குல தெய்வமாக ஏற்றுக் கொண்ட நிலையிலும், (குறிப்பாகச் சொல்வதாயின், கோச்செங்கணான் காலத்தில்) தில்லை நடராசர் கோயில் பூசகர்களாக வைதீக யக்ஞ மரபைச் சேர்ந்த தீட்சிதர்கள் நியமிக்கப்பட்டிருக்கலாம். இது மிக விரிவாகவும் ஆழமாகவும் ஆராயப்படவேண்டிய ஒன்று. கோச்செங்கணான், அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவர். பிரசவ காலம் கடந்த பிறகு உரிய கோள் நிலைகள் கூடிவந்த சமயத்தில் பிள்ளை பிறந்ததென்றும், பிரசவ காலத்தைச் செயற்கையாக நீடிக்கச் செய்ததன் விளைவாகக் கருவில் இருந்த குழந்தைக்குக் கண்கள் சிவந்து விட்டமையால் செங்கணான் என்று அக்குழந்தைக்குப் பெயரிடப்பட்டதாகவும் சேக்கிழார் குறிப்பிடுகிறார். ஆனால், சிங்க விண்ண சோழன் என்ற சோழ அரசன் கி.பி. 5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகப் பல்லவர் செப்பேடுகளிலிருந்து தெரிய வருவதால் சிங்க விண்ணன் என்ற பெயரே செங்கணான் என்று திரிந்திருக்கவும் வாய்ப்புகள் உண்டு. எனவே இந்தச் சிங்க விண்ணன் என்ற சோழனையே சிங்க வர்மன் என்கிற கௌடேச மனு என்று கோயிற்புராணத்தில் குறிப்பிட்டு இருக்கலாம்.

எனவே, இந்த ஆதாரங்களைத் தவறாகப் புரிந்துகொண்டு பல்லவ அரசன் சிம்ம வர்மன் அந்நிய தேசத்திலிருந்து பிராம்மணர்களைத் தில்லையில் குடியமர்த்தினான் என்றும், அவர்களின் வம்சா வழியினரே தீட்சிதர்கள் என்றும் எழுதுவது ஏற்கத்தக்கதல்ல.

சிவ பெருமான், தென்னாடுடைய சிவன் என்று போற்றப்பட்டவர்; அவர் தமிழ்க் கடவுள், சிவ ஆகமப் படியான வழிபாடுகளே சிவனுக்கு நடத்தப்பட வேண்டும் என்றெல்லாம் சொல்லி இதைத் தீட்சிதர்கள் தம் விருப்பப்படி மாற்றிக்கொண்டனர் என்று ஜெயராமன் எழுதியுள்ளார். முதலில், சிவன் தமிழ்க் கடவுள் என்பதற்கான உறுதியான ஆதாரம் என்ன? ”நம சிவாய” என்ற பஞ்சாட்சர மந்திரம் யஜூர் வேதத்தில் இடம்பெற்றுள்ளது; அது தமிழ்ச் சொல்லா? அல்லது யஜூர் வேதம் தமிழ் வேதமா? உண்மையில், முல்லை நில மாயோன் வழிபாடும், குறிஞ்சி நிலச் சேயோன் (முருகன்) வழிபாடும்தான் சிவ வழிபாட்டைவிடத் தமிழ் மரபில் தோய்ந்து உருவானவை. அப்படி இருக்கையில் எந்த அடிப்படையில் இப்படி எழுதுகிறார் என்பது தெரியவில்லை. வேத நெறி இல்லையேல் சிவ வழிபாடு இல்லை. சிவன் வடிவம் என்பதே (நாம் லிங்க வடிவைக் குறிப்பிடவில்லை) தீயும் காற்றும் இணைந்த இயமானன் (எஜமானன்) வடிவாகும். எனவே யக்ஞ நெறியுடன் நெருங்கிய தொடர்புடையதே சிவ வழிபாடு. அதனால்தான், ”வேத நெறி தழைத்தோங்க மிகு சைவத் துறை விளங்க, பூத பரம்பரை பொலியப் புனித வாய் மலர்ந்தழுத சீத வள வயற்புகலித் திருஞான சம்மந்தர்” என்று சேக்கிழாரின் பெரிய புராணம் போற்றுகிறது. திருஞான சம்மந்தர் (தில்லை தீட்சிதர்களின் கோத்திரங்களிலொன்றாக ஜெயராமன் குறிப்பிடுகிற) கௌண்டின்ய கோத்திரத்தைச் சேர்ந்தவர் என்பது கவனத்திற்குரியது. தில்லைக் கோயிலைத் தமிழ்க் கடவுளான சேயோன் கோயிலாக மாற்ற வேண்டும்; ஏனெனில், ”முதலி பெரியம்பலத்துள் வரை அசலமண்டபத்துள் முனிவர் தொழ அன்று நிர்த்தமாடினான்” என்று அருணகிரிநாதர் (சேயோனை) முருகனைத்தான் பாடியுள்ளார் என்று கோரிக்கை வைத்தாலாவது அதில் நியாயம் இருக்கும். ஆனால் அத்தகைய கோரிக்கையில் இன்னொரு ஆபத்தும் இருக்கிறது. அருணகிரிநாதரே கௌட கவி என்றுதான் குறிப்பிடப்படுவார்; அவருடைய பாடல்களில் கௌட (வங்காள) தாந்த்ரீக மரபு ஆழப் பொதிந்துள்ளது.

சோழ அரச மரபுக்கு உரிமை கொண்டாடக்கூடிய உரிமை படைத்த ‘சான்றோர்கள்’ (நாடார்கள்), வலங்கை உய்யக்கொண்ட இரவிகுல க்ஷத்ரியர்களாவர். ”உய்யக்கொண்டார் குலத்தை உருவேற்ற வந்தேன் நான்” என்று முழங்கிய சாமித்தோப்பு ஐயா வைகுண்டர், கன்னியாகுமரி மாவட்டம் ஒசரவிளை என்ற ஊரில் அம்பலம் என்ற பெயரிலும், மூல கொண்ட பதி என்ற பெயரிலும் ஒரு கோயிலைக் கட்டியுள்ளார். தொண்ணூற்றாறு தத்துவங்களைக் கடந்து ஆகாசப் பெருவெளியில் சிவன் நடனம் புரிகிறார் என்ற சித்திரத்தை உருவகிக்கும் வகையிலேயே தில்லைக் கோயில் ஆகாச லிங்கம் அமைந்துள்ளது. இதே பாணியில் 96 கூரை விட்டங்களைக் கொண்ட மூல கொண்ட பதியில் ஆகாச லிங்கம் அமைந்துள்ளது. இன்றும் வலங்கை உய்யக்கொண்டார் பிரிவுச் சான்றோர்கள் வாழும் இடங்களில் (நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்கள்) சிதம்பரேஸ்வரர், புலியூர் ஈசர் கோயில்களைப் பரவலாகக் காண இயலும். இந்த மரபைப் பின்பற்றும் சமூகத்தவர் எவரேனும் சிதம்பரத்திலோ அதன் சுற்று வட்டத்திலோ இருந்தால் சொல்லுங்கள். அவர்களே சோழ அரச குல வாரிசுகள் என ஒப்புக்கொள்கிறோம்.

1899 கமுதி கோயில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது சான்றோர் குலத்தவர்கள் கோயில்களுக்குள் நுழைவதற்கு அனைத்து உரிமையும் பெற்ற உயர் வர்ணத்தவரே என்று சான்றோர்களுக்கு ஆதரவாகச் சாட்சி சொல்லி, ஆங்கிலேய நீதிபதியின் ஏளனத்துக்கு உள்ளான பெருமையும் இந்த தில்லை தீட்சிதர்களுக்கு உண்டு. ”சோழர்க்கன்றிச் சூட்டோம் முடி” என்று உறுதிபடக் கூறிவிட்டு மலைநாடு சென்றுவிட்ட தில்லைவாழ் அந்தணர்களின் மன்றாட்டு முழக்கத்தின் விட்டகுறை தொட்டகுறையாகவே இதனைக் கருதலாம்.

இப்படியாக ஒரு மரபைக் காப்பாற்றுவதற்காக ஏளனங்களையும் இழப்புக்களையும் எதிர்கொண்டாலும் தளராது நியாயத்தின் பக்கம் குரல் எழுப்பியுள்ளதையும் பார்க்கின்ற அதே நேரத்தில், வெகுஜனங்களின் மொழி உணர்வு சார்ந்த விருப்பங்களுக்கு அனுசரித்துச் செல்லாத தவறான ஒரு போக்கையும் தீட்சிதர்களிடம் நாம் காண்கிறோம். இந்தப் போக்கை எவ்விதத் தயக்கமும் இன்றி நாம் கண்டிக்கின்றோம். அதே வேளையில், தில்லை தீட்சிதர்கள், பல்லாயிரம் கோடி ரூபாய் சொத்துக்களைத் திருடி அனுபவித்துக் கொண்டு வருவதாக ஜெயராமன் குறிப்பிட்டு, இதுதான் தமிழ் மக்களின் சமூகப் பொருளாதார வாழ்வியலில் கனன்றுகொண்டிருக்கும் முதன்மையான பிரச்சினை போலச் சித்திரிக்கும் முயற்சியைத்தான் நம்மால் ஏற்க முடியவில்லை. தமிழகத்தின் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நிலங்களில் இருந்து ஆற்று மணல், அரியவகை மண், மரங்கள் என இயற்கை வளங்களையெல்லாம் கொள்ளையடிக்க அனுமதித்துப் பங்கு பெற்று, நாட்டைப் பாலைவனமாக்கி உலகப் பணக்காரர் பட்டியலை நோக்கிக் குறிவைத்துப் பயணம் செய்துகொண்டே, ஆறுமுகசாமிக்கு மாதம் ரூ. 3000 தந்து பாவ நிவர்தி வேண்டுகிறவர்கள்தாம் சமூகத்தில் கனன்று கொண்டிருக்கும் பல சமூகப் பிரச்சனைகளுக்கு மூல காரணமாக இருக்கிறார்கள் என்பது ஜெயராமன் போன்றவர்களின் கண்களுக்குப் புலப்படாதது விந்தையிலும் விந்தை; வரலாற்று விந்தை.

இந்தியச் சமயங்களின் வழிபாட்டு மரபுகள் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டும் மோதியும் ஒன்றையொன்று விழுங்கியும் மட்டும் நிலைபெற்றவை அல்ல; உடன்பட்டும், முயங்கியும், மயங்கியும், சுவீகரித்தும் வளர்ந்தவை; இதுதான் இந்தியச் சமய வழிபாட்டு மரபுகளின் வரலாறு. மாற்றங்களும் வரலாற்றின் ஒரு பகுதியே.

ஜனநாயகக் கோரிக்கைகளைச் சொல்வதற்காக, நியாயப்படுத்துவதற்காக வரலாற்றைத் திரித்துச் சொல்வது, தெரிவு செய்யப்பட்ட பகுதிகளை மட்டும் எடுத்துக்கொண்டு தமக்குத் தர்மசங்கடம் விளைவிக்கின்ற ஆதாரங்களைப் பூசி மெழுகி மறைப்பது என்பதெல்லாம் தமிழகத்தில் கடந்த சில நூறு ஆண்டுகளாகப் பெரும்போக்காக உள்ளது. ஒரு கோரிக்கை உண்மையில் ஜனநாயக பூர்வமானதாக, மக்களின் பெருவிருப்பமாக இருக்குமெனில் அதனை வெகுஜனங்களின் விருப்பமாக – ஏன் ஆணையாகவே – வெளிப்படுத்துவதற்குத் தயங்கவேண்டியதில்லை. ஆனால் அதற்காக வரலாற்றை – வரலாற்று ஆய்வை - ஒரு கை பார்த்துவிடுவது என்று கோதாவில் இறங்குவது நியாயமல்ல.

sr@sishri.org
(c) Author. To avoid copyright violations, please get permission from the author(s) before reproducing this article in any form.