இக்கட்டுரையை அச்செடுக்க To print this article
வைதிக இந்து சமயமும் திருக்குறளும்: ஓர் ஆய்வுச் சிக்கல்
எஸ். இராமச்சந்திரன் (ஆய்வாளர், தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்)
திருக்குறள் உலகப் பொதுமறையா? சில சொல்லாடல்கள் என்ற ந. முருகேச பாண்டியனின் கட்டுரை (தீராநதி, டிசம்பர் 2008) குறித்த எதிர்வினை:

"தத்துவ போதனைகளைக் கேட்கவோ, போதிக்கவோ யாருக்கும் அக்கறை இல்லை... பெளத்த, ஜைனத் துறவியரின் தமிழக வருகைக்குப் பின்னர், தமிழரின் நடைமுறை வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்பட்டன" என்றும், "வைதிக இந்து சமயம் கற்பித்த சாதிய ஏற்றத்தாழ்வு சமூகத்தில் வலுப்பெற்றது" என்றும் ந. முருகேச பாண்டியன் எழுதியுள்ளார்.

தமிழறிஞர்கள் - ஆய்வாளர்களிடையே பரவலாக நிலவுறுகிற ஓர் அபிப்பிராயத்தையே அவர் வழிமொழிந்துள்ளார். இது சரியான கருத்தென்று கொள்வதற்கில்லை. வைதிக இந்து சமயம் என்பது வேள்வி முதலிய சடங்காசார நெறிமுறைகளை வலியுறுத்திய ஒரு சமயமே என்பதில் ஐயமில்லை. ஆனால், அச்சமூக அமைப்பில் சாதிய ஏற்றததாழ்வுகள் பெளத்த ஜைன சமயங்கள் அறிமுகமாவதற்கு முன் எந்த அளவுக்கு வலிமையாக நிலவின என்பதை அறுதியிட்டுக் கூறிவிட முடியாது. ஏனெனில், பிறப்பு அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகளை நியாயப்படுத்துகிற கர்ம வினைக் கோட்பாடு பெளத்த ஜைன சமயததவரிடமிருந்து வைதிக இந்து சம்யம் பெற்றுக்கொண்ட கொடையா, அல்லது வேத அந்தம் என்றும், சடங்காசார நெறிமுறைகளுக்கு அன்னியமான தத்துவச் சார்புடைய நெறியென்றும் போற்றப்படுகிற உபநிடத விசார (ஆய்வு) நெறிமுறையிலிருந்து ஜைன பெளத்த சமயங்கள் பெற்றுக்கொண்ட கொடையா என்ற அடிப்படைக் கேள்விக்கே இன்றுவரை துல்லியமான விடை கிடைக்கவில்லை. கர்ம வினை அல்லது ஊழ்வினைக் கோட்பாட்டின் அடிப்படையிலமைந்த சாதி அமைப்பு என்பது பெளத்த, ஜைன சமயத்தவரால் எந்த அளவுக்குப் போற்றப்பட்டுள்ளது என்பதற்கு இரண்டு எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம். கி.பி. 5ஆம் நூற்றாண்டு அளவில் களப்பிர அரசன் அச்சுத விக்கந்தன் ஆதரவுடன் காவிரிப்பூம்பட்டினத்தில் கணதாச விஹாரையில் வாழ்ந்த புத்ததத்தர் தம்முடைய அவிதம்ம அவதார உரையில் காவிரிப்பூம்பட்டினத்தில் சுத்த ஜாதியினர் மட்டுமே வாழ்ந்தனர்; நகருக்குள் அசுத்த ஜாதியினர் யாரும் வாழ்வதற்கு அனுமதிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். கி.பி. 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிற ஜைன நூலான சீவகசிந்தாமணி (பா. 1234) பின்வருமாறு குறிப்பிடுகிறது:

ஊனொடு தேனும் கள்ளும் உண்டு உயிர் கொன்ற பாவத்து ஈனராய்ப் பிறந்தது.

அதாவது, எயினர் (மறவர்) போன்ற இழிந்த குலத்தில் ஒருவன் பிறப்பது அவன் முற்பிறப்பில் உயிர்களைக் கொன்ற பாவத்தினால்தான் என்பது இதன் பொருளாகும். பிற உயிர்களைக் கொண்று தின்னுதல் மிக இழிவான பழக்கமாகக் கருதப்பட்டதால் அத்தகைய கொலைத் தொழிலையே தங்கள் வாழ்வியலாகக் கொண்டிருந்த மறவர், குறவர் போன்ற இனத்தவர்கள் பெளத்த, ஜைனர்களால் இழிகுலத்தவராகக் கருதப்பட்டனர். சீவகசிந்தாமணி வேறோரிடத்தில் (பா. 2741) பின்வருமாறு குறிப்பிடுகிறது:

வில்லின் மாக் கொன்று வெண்ணிணத் தடி விளிம்படுத்த
பல்லினார்களும் படுகடல் பரதவர் முதலா
எல்லை நீங்கிய இழிதொழில் இழிகுலம் ஒருவி
நல்ல தொல்குலம் பெறுதலும் நரபதி அரிதே.

பரதவர் முதலிய மீனவர் சமூகத்தவரும் இழிகுலத்தவராகக் குறிப்பிடப்பட்டிருப்பது கவனத்துக்குரியது.

வைதிக இந்து சமயத்தின் மிக உயர்ந்த வர்ணத்தவராகக் கருதப்பட்ட பிராம்மணர்கள் புலால் உணவை விட்டொழித்தவர்கள் அல்லர். ஜைன, பெளத்த சமயத் தாக்கத்தினால்தான் புலால் உண்ணும் வழக்கத்தை மாற்றிக்கொண்டனர் என்பது வரலாறு. எனவே, உபநிடதங்கள் தோன்றுவதற்கு முற்பட்ட வைதிக சமயம், கொலைத் தொழில், புலால் உண்ணுதல் போன்ற பழக்கங்களின் அடிப்படையில் சாதிய உயர்வு தாழ்வினைக் கற்பித்தது என்பது தர்க்கபூர்வமான ஒன்றல்ல. ஜைன, பெளத்த சமயங்களின் தாக்கத்தால் மட்டுமே வைதிக இந்து சமயத்தில் சாதிய ஏற்றத்தாழ்வுகள் உட்புகுந்து நிலை பெற்றிருக்க வேண்டும். பெளத்த சமயம், பிராம்மண வர்ணத்தவரின் ஆதிக்கத்துக்கு எதிரானது என்ற கருத்து சரியானதே. ஆனால், க்ஷத்ரிய, பிராம்மண, வைசிய, சூத்ரர் என்ற சமூகப் படிநிலையையே பெளத்தம் முன்னிறுத்தியது என்பதையும், “வேளாப் பார்ப்பனர்" எனப்பட்ட விஸ்வ பிராம்மணர் (கண்மாளர்)களையும், வள்ளுவர் குலத்தாரையும், அருந்தவர்களையும் (தபஸ்விகள்) பிராம்மணர்களுக்கு மாற்றாக ஏற்றிருந்தது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியம்.

கி.பி. 5-6ஆம் நூற்றாண்டுகளில் உருவான சைவ, வைணவ பக்தி இயக்கம் சாதிய ஏற்றத்தாழ்வுகளைச் சமன்படுத்த முயன்றிருக்கிறது என்பதில் ஐயமில்லை. "ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும் கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்பராகில் அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே" என்று முழங்கிய அப்பர் பெருமானும், "குலந்தாங்கு சாதிகள் நாலினும் கீழ்ப்பட்டு எத்தனை நலந்தான் இலாத சண்டாள சண்டாளராயினும் திருமாலுக்கு அடியாராயினால் உயர்வடைவர்" என்ற ஆழ்வார் பாடலும் பிரச்சார நோக்கத்தில் வீசப்படும் மாயத் தூண்டில்கள் என்றே கொண்டாலும்கூட தர்க்கபூர்வமான பெளத்த ஜைனர்களின் ஊழ்வினைக் கோட்பாட்டுக்கு எதிராக முன்னிறுத்தப்பட்ட சரணாகதியினால் உயர்வடைதல் என்ற அடையாளமே என்பது ஐயத்துக்கு இடமற்ற உண்மையாகும். இவற்றால் என்ன பெரிய சமூக மாற்றம் நிகழ்ந்துவிட்டது என்ற கேள்வியில் நியாயம் இருக்கிறது. ஆனால், வைதிக இந்து சமயம்தான் சாதியமைப்பை உருவாக்கிக் கட்டிக்காத்தது என்ற குற்றச்சாட்டில் நியாயம் இல்லை என்பதை உணர்த்துவதற்காகவே இம்மேற்கோள்களை எடுத்துக்காட்ட நேர்ந்தது.

கி.பி. 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ராமானுஜர், "ஐயா, நாங்கள் தாழ்ந்த மறக்குலத்தைச் சேர்ந்தவர்கள்" என்று தம்மிடம் அறிமுகம் செய்துகொண்ட பொன்னனையும், பொன்னாச்சியையும் தம் அடியார்களாக ஏற்றுக்கொண்டு ஆதர்சமான வைணவர்களாக முன்னிறுத்திக் காட்டினார். பொன்னனுக்குப் ‘பிள்ளை உறங்காவில்லி தாசன்’ என்ற தாஸ்ய நாமம் வழங்கியதோடு, அவனது தோளில் தமது கையைப் போட்டுக்கொண்டு நடப்பது குறித்து உயர்குல அடியார்கள் கேள்வி எழுப்பியபோது "உத்தமமான அந்த வைணவனைத் தொடுவது ஒரு ஸ்பரிசவேதி (தொட்டால் தங்கமாக்கும் ரசவாதம்)" என்றும் கூறியவர் ராமானுஜர். அதுமட்டுமின்றி பிள்ளை உறங்காவில்லி தாசன், அகளங்கநாடன் எனப்பட்ட விக்கிரம சோழனின் மெய்க்காவலனாகப் பணிபுரிவதன் மூலம் கிடைத்த ஊதியத்தைக் குருதட்சிணையாகக் கொடுத்தபோது அதனை ஏற்க மறுத்து, உயர்குடிப் பாரம்பரியப் பெருமித உணர்வுடைய அரசர்களால் ஈட்டப்பட்ட பொருள் பாப திரவியம் என்றும் குறிப்பிட்டவர் ராமானுஜர்.

இத்தகைய நிகழ்வுகளையெல்லாம் தொகுத்துப் பார்க்கும்போது ஓர் உண்மை தெளிவாகப் புலப்படும். சாதிய ஏற்றத்தாழ்வுகள் மற்றும் அவற்றோடு சார்ந்த பொருளியல் நலன்கள் என்பவை நிலப்பிரபுத்துவம் சார்ந்த ஆட்சியமைப்புகளும் அதிகார வர்க்கமும் நடைமுறைப்படுத்திய நடவடிக்கைகளின் விளைவுகளே; (வைதிக) இந்து சமயமும், ஜைன, பெளத்த சமயங்களும் அவ்விளைவுகளுக்குப் பின்னேற்பு (ratification) வழங்கிய குற்றத்தை மட்டுமே செய்தன என்றுதான் கருத வேண்டியிருக்கிறது. குறிப்பாக, பெளத்த சமயம் இன்றைய வஹாபிய இஸ்லாத்தின் ஜமாத் போல சங்கம் என்ற அமைப்பின் மூலம் ஆட்சியதிகார அரசியலை முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. இந்தியாவைப் பொருத்தவரை, அரசர்களுக்கே அது பெரும் சவாலாக இருந்ததால் கி.பி. 7-8ஆம் நூற்றாண்டளவிலேயே பெளத்தம் இந்தியாவை விட்டு விரட்டப்பட்டது.

மகேந்திரப பல்லவனின் மத்தவிலாச பிரகசனத்தில் வருகிற ஒரு காட்சியை இங்குக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்: குடி வெறியில் தனது கபாலத்தைத் தவறவிட்ட காபாலிக சைவன் ஒருவன் அவ்வழியில் வருகின்ற பெளத்தத் துறவி ஒருவர்தாம் தனது கபாலத்தைத் திருடிக்கொண்டு செல்கிறார் என்று தகராறு செய்கிறான். அப்போது அவ்வழியாக வருகின்ற பாசுபத சைவன் ஒருவன் அமைதியாகப் போகிற அவரிடம் ஏன் தகராறு செய்கிறாய்? நீதி மன்றத்துக்குப் போய் வழக்குத் தொடுக்கவேண்டியதுதானே என்று கேட்கிறான். அதற்கு அந்தக் காபாலிகன் எதிர்வினா ஒன்று தொடுக்கிறான். “அந்த நீதிமன்றத்திலும் பெளத்தன் ஒருவன்தான் நீதிபதியாக உட்கார்ந்திருப்பான். இல்லாவிட்டாலும்கூட நீதியையே விலைக்கு வாங்கக்கூடிய அளவிற்குச் செல்வ வளம் படைத்தவன் இந்த பெளத்தத் துறவி. நானோ ஏதுமற்ற ஏழைக் காபாலிகன். என்னுடைய ஒரே சொத்தான கபாலமும் இப்போது திருட்டுப் போய்விட்டது. எனக்கு, அந்த நீதிமன்றத்தில் எப்படி நீதி கிடைக்கும்?" என்று கேட்கிறான். பல்லவர்களின் தலைநகரான காஞ்சி நகரத்தில் அதாவது, தன்னுடைய அரசியல் தலைநகரில் இப்படிப்பட்ட ஒரு நிலைதான் இருந்தது என்பது மகேந்திர பல்லவன் அளித்துள்ள ஒப்புதல் வாக்குமூலமாகும்.

எனவே, பெளத்தம் இந்திய நாட்டிலிருந்து மறைந்ததற்குக் காரணம் வைதிக இந்து சமயத்தின் சூழ்ச்சி என்று அறிஞர்களிடையே பரவலாக நிலவுகின்ற கருத்தும் மறுபரிசீலனைக்குரியதே. அதே வேளையில், பெளத்தத்தின் வீழ்ச்சியால் பலனடைந்த சக்திகள் யாரென்று பார்த்தால் சங்கம் என்ற கூட்டமைப்புக்கு எதிரான நில மானிய - படை மானியக் கிழார்களும், அவர்களைச் சார்ந்தும், அவர்களின் அதிகாரத்தை அங்கீகரித்தும் வாழ்ந்த வைதிக பிராம்மணர்களுமே என்று சொல்ல முடியும். தமிழகத்தில் நிலவிய நிலப் பிரபுத்துவத்தின் கூறுகளைப் பற்றி முழுமையாக ஆய்வு செய்யாமல் சனாதன இந்து சமய நெறிமுறைகள் என்ற வரையறையை நாமாக வகுத்துக்கொண்டு அதற்குள் திருக்குறளைப் பொருத்திப் பார்ப்பது அல்லது திணித்துப் பார்ப்பதென்பது சரியான ஆய்வு ஆகாது.

"நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும் குலத்தில் பிறந்தார் வாய்ச்சொல்" என்ற குறளின் மூலம் பிறப்பு அடிப்படையிலான குல உயர்வு தாழ்வுகளை அங்கீகரிக்கின்ற திருவள்ளுவர் பிறந்த வள்ளுவர் குலத்திற்கே மேற்குறித்த வரையறையைப் பொருத்திப் பார்த்தால் முக்கியமான சில வரலாற்று உண்மைகள் புலப்படும். மிகச் சிறந்த அறநூல், பொருள்நூல், இன்பநூல் (தர்ம சாஸ்திர, அர்த்த சாஸ்திர, காம சாஸ்திர) அறிவும், வானநூல் அறிவும் படைத்திருந்த, அரசர்களின் உட்படு கருமத் தலைவர்களாக இருந்த வள்ளுவர் குலத்தவர்கள் தாழ்த்தப்பட்ட சமூகப் பிரிவினராக மாறிய நிகழ்வுப் போக்கு நிலப்பிரபுத்துவத்தின் வளர்ச்சி, விரிவாக்கம் ஆகியவற்றோடு தொடர்புடையதாகும். பெரும்பான்மை ஜைனத்தையும், சிறுபான்மை பெளத்தத்தையும் (பேராசிரியர் நெடுஞ்செழியன் போன்றோரின் கருத்துப்படி ஆசீவகத்தையும்) சார்ந்திருந்த வள்ளுவர்கள், அச்சமயங்கள் வீழ்ச்சியடைந்ததன் விளைவாகத் தமது சமூக அந்தஸ்துகளையும் காலப்போக்கில் இழந்தனர். கி.பி. 13ஆம் நூற்றாண்டளவில் தமிழகத்தில் பிராம்மணர், வேளாளர் சாதியினரின் கூட்டணி உருவாகி வலுப்பெற்றதிலிருந்து வள்ளுவர்களின் முதன்மை என்பது பழங்கதை ஆகிப்போயிற்று. வள்ளுவர் சாதியினர் தாம் வாழ்கின்ற ஊர்களின் நிலப்பிரபுத்துவ நலன்களுக்கு உகந்த வகையில் பணிபுரிகிற பணிமக்களாயினர். அதாவது, விதைத்தல், அறுவடை செய்தல் போன்றவற்றை மேற்கொள்வதற்குரிய நல்ல நாள்களைக் குறித்துக் கொடுப்பதும், நில உடைமைச் சாதியினரின் குடும்பங்களில் பிறக்கின்ற குழந்தைகளுக்கு ஜாதகம் கணித்தல், திருமணத்திற்கு நாள் குறித்தல், சோதிடப் பலன் கூறுதல் போன்ற பணிகள் செய்வதுமே இவர்களின் முதன்மையான தொழில்களாயின.

பெளத்த சமயத்தின் வீழ்ச்சிக்குப் பின்னரும் சேர நாட்டில் வள்ளுவர்கள் அதிகாரத்தில் இருந்தனர் எனத் தெரியவருகிறது. கி.பி. 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சேரமான் பெருமாள் தமது திருக்கயிலாய ஞான உலாவில் இரண்டு திருக்குறள்களை (இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை எல்லாருஞ் செய்வர் சிறப்பு, கண்டு கேட்டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணேயுள) எடுத்தாள்கிறார். கி.பி. 9ஆம் நூற்றாண்டுக்குரிய கேரள மாநிலம் திருநெல்லிக் கல்வெட்டில் நியாய சேகரர் (நீதித் தலைவர்) என்றும், கச்சம் (சட்டம்) வகுக்கின்ற அதிகாரம் படைத்தவர்களாகவும் குறிப்பிடப்பட்ட வள்ளுவர்கள் கி.பி. 13ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் சித்திரை விஷு (புத்தாண்டுப் பிறப்பு) அன்று நில உடைமைச் சாதியினர், அந்த ஆண்டுக்குரிய பஞ்சாங்கப் பலன்களை அறிந்து வருவதற்காகக் ‘கணி காணுதல்’ என்ற பெயரில் சென்று சந்தித்து வருகின்ற சாதியினராகக் குறுகிப்போயினர். அந்த வழக்கமும் நாளடைவில் நின்றுபோய், ‘கனிகாணுதல்’ எனத் திரிந்தது மற்றொரு கதை. நிலப்பிரபுத்துவம் இவர்களின் அதிகார வரம்பினைக் குறுக்கிவிட்டதால் வானநூல் அறிவு (அதாவது பஞ்சாங்கம் கணித்தல், சோதிடப் பலன் கூறுதல்) தவிர்த்து இந்திய தேசிய அளவிலான நீதி-நிர்வாக அறிவுத்துறைக் கல்வியாகிய அறநூல் - பொருள்நூல் கல்வி என்பது இவர்களால் அடையமுடியாத எட்டாக் கனியாகிவிட்டது.

முருகேச பாண்டியனின் கட்டுரையில் இடம்பெற்ற சில சொல்லாடல்கள் பற்றி மட்டுமே எமது கருத்தைத் தெரிவிக்க விழைந்தோம். திருக்குறள் உட்பட அனைத்துப் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களும் 'வேளாண் வேதம்' என அழைக்கப்படுவதன் பின்னணி என்ன என்பதை ஆராய்ந்தாலே சங்க காலச் சமூக வாழ்வியல் வேறு; திருவள்ளுவர் சித்திரிக்க முயலும் வாழ்வியலும், உருவாக்க முயலும் வரையறைகளும் வேறொரு சமூகத்துக்குரியவை என்ற விவரம் புரியும். வைதிக இந்து சமயம் என்ற பொதுப்படையான சொல்லாட்சி குழப்பமளிப்பதாகவே அமையும். சங்க காலத் தமிழர் வாழ்வியல், அதாவது திருக்குறளுக்கு முற்பட்ட காலகட்டத்தைச் சேர்ந்த தமிழர் வாழ்வியல் என்பது ஒற்றைப் பரிமாணப் பார்வையில் பார்ப்பதற்கு உரியதன்று என்பதை வலியுறுத்துவதற்காகவே இதனை எழுதியுள்ளோம். முருகேச பாண்டியனின் பிற கருத்துகள் குறித்து எமக்கு மாறுபாடு ஏதுமில்லை.

sr@sishri.org

SISHRI Home