இக்கட்டுரையை அச்செடுக்க To print this article
தைந்நீராடல்
எஸ். இராமச்சந்திரன் (ஆய்வாளர், தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்.)

தமிழ்ப் புத்தாண்டு தை மாதத்தில் தொடங்குவதாகத் திராவிட முன்னேற்றக் கழகத்தினரால் 2008ஆம் ஆண்டில் தமிழகச் சட்டமன்றத்தில் சட்ட முன்வரைவு கொணரப்பட்டுச் சட்டமும் நிறைவேற்றப்பட்டது. சற்றொப்ப 88 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த ஒரு நிகழ்வே இதற்கான நியாயம் எனக் குறிப்பிடப்பட்டது. தை மாதம் முதல் நாளன்று தமிழகம் முழுதும் அறுவடைத் திருநாளாகக் கொண்டாடட்படுகின்ற பொங்கல் விழாவுடன் சங்க இலக்கியங்களில் முதன்மையான சடங்காகக் குறிப்பிடப்படும் தைந்நீராடலைத் தொடர்புபடுத்தி இதற்கு ஒரு தமிழ்த் தேசிய இன அடையாளம் வழங்கும் முயற்சிகள் சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் நடந்தேறின. தைப் பொங்கல் நாள் என்பது தமிழர் திருநாளென்றும், எனவே, அந்நாள்தான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்க நாளாக இருந்திருக்க வேண்டுமென்றும் 1921ஆம் ஆண்டில் மறைமலையடிகள் தலைமையிற்கூடிய தமிழறிஞர்கள் பலரால் முடிவு செய்யப்பட்டதாகவும் சட்ட மன்றத்தில் சொல்லப்பட்டது. தை மாதம் – தமிழ்ப் புத்தாண்டு சட்டத்திற்கு இதுவே அடிப்படையாகும்.

தைப்பொங்கல் நாளினைத் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்க நாளாகக் கொள்ள முடியுமா? என்ற கேள்வி குறித்துச் ‘சித்திரையில்தான் புத்தாண்டு’ என்ற என்னுடைய கட்டுரையில் ஆராய்ந்துள்ளேன்.1 பக்தி இலக்கியங்களில் பாவை நோன்பாகப் பரிணமித்த சங்ககாலத் தைந்நீராடல் மரபுக்கு அடிப்படையாக இருந்த நம்பிக்கைகள் என்ன என்பது குறித்த என்னுடைய கருத்துகளை இங்குப் பதிவு செய்ய விழைகிறேன்.

தைஷ்யம் -> தைஇயம்

முதலாவதாகத் தை என்ற பெயரின் தோற்றத்தை ஆராய்வோம். மாதம், திங்கள் என்ற பெயர்கள் மதி, அதாவது நிலவு தொடர்பான பெயர்களாகும். நிலவுக்கு உடுபதி என்ற பெயருண்டு. உடுக்கணங்களின் தலைவன் அல்லது நட்சத்திரங்களின் கணவன் என்பது இதன் பொருள். நட்சத்திரக் கணங்கள் மொத்தம் 27 ஆகும். சந்திரன் தேய்ந்து வளர்வதற்கு 30 நாள்கள் ஆகின்றன. 27 நட்சத்திரக் கணங்களை ஒவ்வொன்றும் இரண்டே கால் நட்சத்திரக் கணங்கள் கொண்ட 12 ராசிகளாகப் பிரித்து இந்த 12 ராசிகளையும் நிலவு சுற்றி வருவதற்கு 30 நாள்கள் பிடிப்பதாகக் கணக்கிட்டனர். அதாவது ஒரு ராசியில் அடங்கிய இரண்டேகால் நட்சத்திரக் கணங்களை நிலவு கடப்பதற்கு இரண்டரை நாள்கள் ஆவதாகக் கணக்கிட்டனர். ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரக் கணத்துடன் சேர்ந்து முழுநிலவு சஞ்சரிக்க நேர்கிற நாளே அந்த மாதத்தின் பெளர்ணமி தினமாகும். எனவே, அந்த மாதத்தை அக்குறிப்பிட்ட நட்சத்திரக் கணத்தின் பெயரால் அழைத்தனர். எடுத்துக்காட்டாகத் துலா ராசியில் இடம்பெறுகின்ற சித்திரை நட்சத்திரக் கூட்டத்துடன் சேர்ந்து வானில் முழுமதி திகழ்கின்ற நாளை அடிப்படையாகக்கொண்டு, அம்மாதம் சித்திரை மாதமென வழங்கப்பட்டது. அதுபோன்றே புஷ்யம் (பூசம்) அல்லது திஷ்ய நட்சத்திரக் கூட்டம் வானில் சஞ்சரிக்கின்ற நாளில் அந்நட்சத்திரக் கூட்டத்துடன் சேர்ந்து முழுமதியும் சஞ்சரிக்கின்ற மாதம் பெளஷ்ய மாதம் அல்லது தைஷ்ய மாதம் எனப்பட்டது. தைஷ்ய மாதம் என்பதே தைஇய திங்கள் என்றும், தைஇத் திங்கள் என்றும் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பூச நட்சத்திரக் கணம் என்பது கடக ராசியில் இடம்பெறும் நட்சத்திரத் தொகுதியாகும். இத்தொகுதியில் மூன்று நட்சத்திரங்கள் அடங்கும். கிரேக்க மொழியில் அமைந்த வானநூல் குறிப்புகளில் இக்குழு Delta, Cancri எனப்படும். கடக ராசியிலிருந்து ஏழாவது ராசியாகிய மகர ராசியில் சூரியன் நின்று, மகர ராசியிலிருந்து 180 பாகைகள் தொலைவில் அமைந்துள்ள கடக ராசியில் இடம்பெற்றுள்ள திஷ்ய நட்சத்திரக் கூட்டத்துடன் நிலவு சஞ்சரிக்கிறபோது அந்நிலவினை நேரெதிர்ப் பார்வையால் பார்க்கின்ற நாளே தை மாத முழுநிலவு நாளாதலால் அந்நாளினை மகர ஞாயிற்றுப் பெளர்ணமி என்றும் குறிப்பிடுவதுண்டு. இது சூரியனை அடிப்படையாகக்கொண்ட செளரமானக் கணிதம் ஆகும். செளரமானக் கணிதத்தைவிட நிலவினையும் நட்சத்திரக்கணங்களையும் அடிப்படையாகக்கொண்ட சாந்திரமானக் கணிதமே பழமையானதாகும். காரணம், அந்தி மயங்கி இருள் பரவத் தொடங்குகிறபோது நிலவுடன் சேர்ந்து தென்படுகிற நட்சத்திரக் கூட்டத்தினை அடையாளம் கண்டுகொள்வதும் பிறைநிலவோ முழுநிலவோ மதிமறைவோ நிகழ்கிற ஒவ்வொரு நாளிலும் எந்த நட்சத்திரக் கூட்டம் நிலவுடன் சேர்ந்து சஞ்சரிக்கின்றது என்பதைக் கண்டோ, ஊகித்தறிந்தோ அதனை அடிப்படையாகக்கொண்டு காலத்தைக் கணிப்பதும், வானத்தைக் கவனிப்பதில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு எளிய செயல்களே. மனிதன் குகைகளில் தங்கி வேட்டையாடி வாழ்ந்த காலத்திலேயே சாந்திரமானக் கணிதம் தொடங்கிவிட்டது எனத் தெரிகிறது. எனவே, மேஷ ஞாயிறு, மகர ஞாயிறு போன்ற வழக்காறுகளைவிடச் சித்திரை மாதம், தை மாதம் என்ற வழக்காறுகள் பழமையானவை ஆகும்.

புஷயம் அல்லது திஷ்ய நட்சத்திரத்துடன் முழுநிலவு சஞ்சரிக்கின்ற நாளில் ஆறுகளிலோ, குளங்களிலோ நீராடுவதென்பது புஷ்ய ஸ்நானம் அல்லது திஷ்ய ஸ்நானம் எனக் குறிப்பிடப்படும். இதுவே தைந்நீராடல் ஆகும். 12 மாதங்களிலும் திஷ்ய நட்சத்திரத்துடன் நிலவின் தேய்பிறைத் திதியோ, வளர்பிறைத் திதியோ ஏதாகிலும் ஒரு திதி நிகழ்கிற நாளில் நீராடுதல் ஒரு விசேடச் சடங்காகக் கடைப்பிடிக்கப்பட்டதென்றாலும், ஆண்டுக்கொரு முறை வருகிற முழுநிலவு நாளாகிய தைப்பூச நாளில் அவ்வாறு நீராடுவது மிகுந்த சிறப்புடன் கடைப்பிடிக்கப்பட்டது என்று தர்ம சாஸ்திர நூல்கள் கூறுகின்றன. குறிப்பாக, முழுமதியுடன் ஒரு மாதம் முடிவடைவதாகக் கணக்கிடப்பட்ட பூர்ணிமாந்தக் காலக் கணக்கீட்டினைப் பின்பற்றிய சமூகத்தவரிடையே மார்கழி மாத இறுதி நாளான மிருகசிர நட்சத்திர நாளிலோ ஆதிரை நட்சத்திர நாளிலோ விரதம் தொடங்கி 30 நாள்கள் விரதம் கடைப்பிடித்து விரதத்தின் இறுதி நாளாக வருகிற தை மாத இறுதி நாளான தைப்பூச நாளில் நீராடி விரதத்தை முடிப்பதென்பது மிகுந்த சிறப்புடைய ஒரு சடங்காகக் கடைப்பிடிக்கப்பட்டது. குறிப்பாகப் பெண்டிர் இவ்விரதத்தை மிகுந்த கவனத்துடன் மேற்கொண்டனர் என அறிய முடிகிறது.

இதற்கான காரணங்கள் பல இருந்தாலும் முதன்மையான காரணமாகக் கருதத்தக்கது பெண் உடலில் ஏற்படுகின்ற மாதவிடாய்ச் சுழற்சி என்பது நிலவுடன் தொடர்புபடுத்தப்பட்டதே. மனித மதியின்மீதும் கடலின் அலையின்மீதும் நிலவு ஆட்சி செய்கிறதென்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கருத்தே ஆகும். நிலவு என்று பொருள்படும் Lunar என்ற லத்தீன் சொல்லுக்கும், மனநோயாளி என்று பொருள்படும் Lunatic என்ற லத்தீன் சொல்லுக்குமிடையேயுள்ள பொருள் தொடர்பு இவ்விடத்தில் கருத்திற்கொள்ளத்தக்கது. காதலுணர்வு, கற்பனை, கவித்துவம் போன்றவற்றுடன் தொடர்புடையதாகக் கருதப்பட்ட நிலவு, பெண் உடலின் பருவச் சுழற்சியின்மீதும் அதிகாரம் செலுத்துவதாக நம்பப்பட்டது. உலகின் பருவச் சுழற்சியைக் குறிக்கின்ற பருவம், ருது என்ற சொற்களே பெண் பூப்படைவதைக் குறிப்பிடவும் பயன்படுத்தப்படுவது நாம் அறிந்த ஒன்றாகும்.

பெண்டிர் பிறை தொழுகின்ற வழக்கம் தொல்பழங்காலத்திலிருந்தே தமிழகத்தில் நிலவியுள்ளது. வளர்பிறைக் காலத்து மூன்றாம் பிறை மேற்குத் திசைச் செக்கர் வானத்தில் பரவிவருகின்ற இருளினூடே சில நிமிட நேரம் மட்டுமே கண்ணுக்குப் புலப்பட்டு மறைந்துவிடும். மதி மறைவு நாளான அமாஸ்யத்துக்கு அடுத்துக் கண்ணுக்குப் புலப்படுகின்ற பிறை மூன்றாம் பிறையே ஆகும். ஓராண்டில் 12 முறை தோன்றுகின்ற அந்த மூன்றாம் பிறையைப் பெண்டிர் விசேடமாகத் தொழுதனர்.

ஒள்ளிழை மகளிர் உயர்பிறை தொழூஉம்
புல்லென் மாலை

- என அகநானூறு (239) குறிப்பிடுகிறது. இவ்வழிபாடு மிகப் பழமையானது என்பதற்குக் “குடமுதல் தோன்றிய தொன்று தொழுபிறை” எனக் குறிப்பிடுகிற மதுரைக் காஞ்சி (வரி 193)யே சான்றாகும்.

செவ்வாய் வானத்து ஐயெனத் தோன்றி
இன்னம் பிறந்தன்று பிறையே

- எனக் குறுந்தொகை (பா. 307) குறிப்பிடுகின்றது.

நெய்தல் நிலத்தின் தெய்வமாகத் தொல்காப்பியத்தால் குறிப்பிடப்படுபவன் வருணன் ஆவான். நெய்தல் நிலத்துக்குரிய சிறுபொழுதாகத் தொல்காப்பியம் குறிப்பிடுகின்ற எற்படுபொழுதில் செக்கர் வானத்தில் மேலைத் திசையில் சற்று நேரம் தோன்றி மறைகின்ற மூன்றாம் பிறையினை வழிபடுவது வருணன் வழிபாட்டின் முதன்மையான ஒரு கூறாக இருந்திருக்க வேண்டும்.2 சிவன் தன் செஞ்சடையில் மூன்றாம் பிறையைச் சூடியுள்ளான் என்ற புராணகால வர்ணனைகூட, வருணன் குறித்த கற்பிதத்தினைச் சைவம் உள்வாங்கிக்கொண்டதன் விளைவே ஆகும்.3

தேவர்களால் தொழப்படுகின்ற பிள்ளைப் பிறை, சிவன் தனது சடையில் எடுத்துச்சூடியதால் சிறப்புற்றது; ஆயினும், திருமகளோடு பாற்கடலிலிருந்து தோன்றியதால் திருமகளின் மறுவடிவமாகிய கண்ணகியின் உடன்பிறப்பாகின்ற உயர்வும் அடைந்தது எனச் சிலப்பதிகாரம் (2:38-40) குறிப்பிடுகின்றது. உண்மையில், நிலவு வழிபாடு என்பது செல்வச் செழிப்புக்கும், இயற்கை வளத்துக்கும் அடையாளமாகக் கருதப்பட்ட பாற்கடல் தெய்வ வழிபாட்டின் ஓர் அம்சமே ஆகும். தாவரங்கள், மூலிகைகள் (ஓஷதிகள்) ஆகியவற்றின் தெய்வமாக நிலவினை வடமொழி இலக்கியங்கள் வர்ணிக்கின்றன.

பன்னிரு ராசிகளுள் நிலவின் ஆட்சி பெற்ற ராசி கடக ராசியாகும். கடக ராசியின் முதன்மையான நட்சத்திரக் கூட்டமாகிய திஷ்ய நட்சத்திரக் கூட்டத்தில் முழுமதி அமைகிற நாள் நிலவின் அதிகபட்சமான ஆற்றலை வழங்குகிற ஒரு நாளாகக் கருதப்பட்டதில் வியப்பில்லை. நிலவு நீரை ஆட்சி செய்கின்ற கோளாகவும், கடக (நண்டு) ராசி ஒரு நீர் ராசியாகவும் கருதப்படுவதால் திஷ்ய நட்சத்திர முழுமதி நாளில் மகளிர் நீராடல் சடங்கு நிகழ்த்துவது அவர்களின் மனநலனுக்கும் குடும்ப நலன்களுக்கும் உகந்ததாகக் கருதப்பட்டது என்பதை நாம் எளிதில் புரிந்துகொள்ள முடியும். 27 நட்சத்திர கணங்களுமே சந்திரனின் மனைவியராகக் கருதப்பட்டாலும் ரோகிணி நட்சத்திரக் குழுவின்பால் சந்திரன் விசேடமான அன்பு செலுத்தியதாகப் புராணங்கள் குறிப்பிடுகின்றன. நெடுநல்வாடையும் (வரி 159-163) இக்கருத்தினைப் பதிவுசெய்துள்ளது. ரோகிணி நட்சத்திரக் கணம் இடம்பெறுகின்ற ரிஷப ராசி சந்திரனின் உச்ச ராசியாகும். ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திர நாளில் கண்ணன் பிறந்ததாகக் கருதிக் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடுவது புராண மரபாகும். வருணன் வழிபாடு என்பது புராண மரபுக்கு முற்பட்ட வேத கால மரபாகும். வருணன் ரிதம் என்ற பிரபஞ்ச ஒழுங்கிற்குத் தலைவனாக வேதங்களில் குறிப்பிடப்படுகிறான். க்ஷார-க்ஷீர உததிகள் (உப்புக் கடலும் நன்னீர்க் கடலும்) வருணனின் இரு தொடைகளாக அதர்வண வேதத்தில் குறிப்பிடப்படுகின்றன. நன்னீர்க் கடல் என்றும், பாற்கடல் என்றும் குறிப்பிடப்பட்ட க்ஷீர உததி என்பது வேறெங்கோ இருப்பதன்று; வான மண்டலமே பாற்கடலாக உருவகிக்கப்பட்டது. மீன், ஆரல் என்ற சொற்கள் கடலில் நீந்துகின்ற மீனையும், வானின் திகழ்கின்ற விண்மீனையும் குறிக்கும் தமிழ்ச் சொற்கள் ஆகும்.

முப்புணர் அடுக்கிய முறைமுதற் கட்டின்
நீர்நிலை நிரப்பின் கீழும் மேலது
ஆனிலை உலகத்தானும்

- என்ற புறநானூற்று (பா. 6) வரிகள் பாற்கடல் குறித்த இக்கருத்தோட்டம் தமிழ் மரபுக்கு இணக்கமானதே எனப் புலப்படுத்துகின்றன. (ஆனிலை உலகமென்பது பாற்கடல் உலகமாகும்.) பயிர்களின் செழிப்புக்குக் காரணமாக இருக்கின்ற மழையினை ஆனிலையுலகத்திலிருந்து பொழிகிற பாலாகக் கருதினர். வள்ளுவர் ‘வான் சிறப்பு’ அதிகாரத்தில் வானவர்களின் அமிழ்தமே மழை என்கிறார். (வானின்றுலகம் வழங்கி வருதலால் தானமிழ்தம் என்றுணரற் பாற்று.) வானத்தை அல்லது வானுலகக் கடலினை அமுதக் கடலாக உருவகித்து அமிதாபர் என்ற பெயரில் ஒரு தியானி புத்தராகக் குறிப்பிடுவது பெளத்த மரபாகும். க்ஷீர உததியை, அதாவது பாற்கடல் தெய்வத்தைக் கீரன், குவீரன், குவேரன் எனப் பிராகிருத வழக்கில் குறிப்பிட்டனர்.4 இவ்வழக்கே பின்னர் குபேரன் என இதிகாச, புராண கால சமஸ்கிருதத்தில் வழங்கியிருக்க வேண்டும். திஷ்ய நட்சத்திர கணம் நீர் வளம், பயிர் வளம் ஆகியவற்றுடன் (அவற்றின் மூலமாகக் கன்றுகாலிகளின் பால்வளத்துடனும்) தொடர்புடையதாகக் கருதப்பட்டமையால் புஷ்ய ஸ்நானம் அல்லது தைந்நீராடல் என்பது செல்வச் செழிப்பின் உருவகமான குபேர வழிபாட்டு மரபில் முதன்மையான ஒரு நோன்பாக மேற்கொள்ளப்பட்டது என நாம் உணரலாம். புஷ்யம் என்ற சொல்லே புஷ்டி, போஷித்தல் போன்ற கருத்தோட்டங்களுடன் தொடர்புடைய புஷ் என்ற வேர்ச்சொல்லிலிருந்து தோன்றியதாகும்.

வருணன் வழிபாடும் சரத் கால நோன்பும்

மழைக் காலத்திற்குப் பின்னர் வருகின்ற பனிக் காலத்தினை ‘சரத் காலம்’ என வடமொழியில் குறிப்பிட்டனர். சரத் காலத்தில் நீர் நிலைகள் நிறைந்து ஆம்பல், குவளை, நெய்தல் போன்ற மலர்களுடன் காட்சியளிக்கும். ‘சரதேந்தீவரஸ்யாமம்’ என ஸ்ரீமத்பாகவதம் (3:26:28) குறிப்பிடுகிறது. சியாமஇந்தீவரம் அல்லது கருங்குவளை மலர் சரத் காலத்துக்குரியது என்பது இதன் பொருளாகும். வருணனுக்குரிய மலராகிய நெய்தல் மலர் கருங்குவளை வகையைச் சேர்ந்ததே. எனவே, சரத் காலத்தில் வருணன் வழிபாடும் வருணனின் ஒரு கூறாகிய பாற்கடல் தெய்வ வழிபாடும் சிறப்புற நிகழ்த்தப்பட்டன. இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கையில், தைப்பூச நாள் விழா வருணன் வழிபாட்டு மரபின் ஓர் அம்சமே என்பது தெளிவாகிறது.

பழமையான தர்மசூத்திர நூல்களுள் ஒன்றாகிய ஆபஸ்தம்ப தர்ம சூத்திரத்தில் (II: 8:20:3-9; 10-22) புஷ்யவிரதம் என்ற பெயரில் இந்நோன்பு குறிப்பிடப்படுகிறது. குறிப்பாக, உத்தராயனத்தில் சுக்லபட்சத்தில் ஓரிரவு விரதமிருந்து ஸ்தாலிபாகம் (தேன் கலந்த பாற்சோறு) சமைத்துக் குபேரனுக்குப் படைக்கவேண்டும் என்று குறிப்பு காணப்படுகிறது. ஹரிவம்சம் போன்ற பல நூல்களில் புஷ்யஸ்நானம் மிகவும் உயர்ந்த சாந்திச் சடங்காகக் குறிப்பிடப்படுகிறது.5 உத்தராயனத்தில் (சூரியனின் வடதிசை நோக்கிய நகர்வுக் காலத்தில்) சுக்லபட்சத்தில் (வளர்பிறையில்) கடைப்பிடிக்கப்படும் புஷ்யவிரதம் என்பது தை மாதம் தொடங்கி ஆனி மாதம் வரை எந்த மாதத்திலும் வளர்பிறைக் காலத்தில் கடைப்பிடிக்கத்தக்கதே எனினும் தை மாதத்தில் கடைப்பிடிக்கப்படும் புஷ்யவிரதம் என்பது முழுநிலவுவுக்கு முதல் நாளில் அனுசரித்து மறுநாளில் விரதம் முடிக்கின்ற நாளாகக் கொள்வதற்கு உகந்ததாதலால் சிறப்பானதாகும். இவ்விரதத்துடன் குபேரனை ஆபஸ்தம்ப சூத்திரம் தொடர்புபடுத்துவது குறிப்பிடத்தக்கது.

நிலவு வழிபாட்டைப் பொருத்தவரை, மூன்றாம் பிறை முதன்மையான வழிபாட்டுக்கு உகந்ததே எனினும் அமிர்த கிரணன் எனப்பட்ட முழுநிலவு மரணமிலாப் பெருவாழ்வைக் குறிப்பதாகவும், அமுதக் குடத்தின் உருவகமாகவும் கருதப்பட்டது.6 முழுநிலா நாளில் கடல் தெய்வத்தை வழிபடுவது சிறப்பானதாகக் கருதப்பட்டது. கொற்கையிலிருந்த பழையர் மகளிர் ஒரு முழுநிலா நாளில் அந்தி நேரத்தில் கடல் தெய்வத்திற்கு வலம்புரிச் சங்குகளையும், முத்துகளையும் படைத்து வழிபட்டனர் என்றும், அதனை ஏற்கும் விதமாக முழுநிலவின் தோற்றமும், கடல் அலைகளின் எழுச்சியும் நிகழ்ந்தன என்றும் மாமூலனாரின் அகநானூற்றுப் பாடல் ஒன்று (பா. 201) குறிப்பிடுவது கடல்-நிலவு-மகளிர் என்ற சடங்குத் தொடர்பைப் புலப்படுத்தும். மழைக்காலம் முடிந்தபின்னர் வருகின்ற சரத் (பனிக்) காலத்தில் மேகங்களற்ற வானத்தில் தோன்றுகின்ற முழுநிலவு சரத் சந்திரன் எனப் போற்றப்பட்டது. சரஸ், சரத் என்ற சொற்கள் குளம் என்ற பொருளுடையவை. சரத் சந்திரன், அலைகளற்ற குளத்தில் பிரதிபலிக்கின்ற முழுநிலவே போன்று மனதை மயக்கக்கூடிய தோற்றம் கொண்டதாகும். வடகிழக்குப் பருவக்காற்றால் நேர்கின்ற மழை ஆவணி மாதம் தொடங்கி நான்கு மாதங்கள் நீடித்துக் கார்த்திகை மாதத்துடன் முடிவடையும். அதன் பின்னர், மார்கழி மாதத்திலிருந்து பங்குனி வரை நீடிக்கும் காலம் சரத் காலம் ஆகும். இந்நான்கு மாதங்களையுமே பனிக்காலம் எனத் தமிழிலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. கி.பி. 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதத்தக்க பரிபாடலில் (பா. 11) சரத்கால முழுநிலவு பின்வருமாறு வருணிக்கப்படுகிறது:

கனைக்கும் அதிர்குரல் கார்வானம் நீங்கப்
பனிப்படு பைதல் விதலைப் பருவத்து
ஞாயிறு காயா நளிமாரிப் பின்குளத்து
மாயிருந் திங்கள் மறுநிறை ஆதிரை

மாரிக் காலத்துக்குப் பின்னர் வருகின்ற சரத் சந்திரன் குளத்துத் திங்கள் என இப்பாடலில் குறிப்பிடப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

சரத்கால விரதம் என்பது மார்கழி மாதம் தொடங்கிப் பங்குனி மாதம் வரை நீடிக்கும். இதில் முதன்மையானது தைந்நீராடல் விரதம் ஆகும். அடுத்தது மாசி மாத சுக்லபட்சப் பஞ்சமி தொடங்கிப் பெளர்ணமி (மாசிமகம்)யுடன் முடிவடையும் சாரதா நவராத்திரி அல்லது சரஸ்வதி நோன்பு ஆகும். இவ்விரு மாதங்களுடன் பங்குனி மாதத்திலும் நோன்பிருந்து பங்குனி உத்தரத்துடன் காமவேள் நோன்பு முடிவடைவதாக திவ்யப் பிரபந்தம் (நாச்சியார் திருமொழி) குறிப்பிடுகிறது.7 இந்நோன்புகளுள் தைந்நீராடலே தவத் தைந்நீராடுதல், தையில் நீராடிய தவம் எனச் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படுகிறது. சரத்காலம் முழுமையுமே தவத்துக்குரிய காலமாகக் கருதப்பட்டது. சரத்காலம் முடிந்து இளவேனிற்பருவம் தொடங்கிச் செடி, கொடிகள், மரங்கள் அனைத்தும் மலர்கள் மலர்ந்து வண்டுகள் சூழச் செழிப்புடன் காட்சியளிப்பதைக் குறிப்பிடும் கலித்தொகைப் புலவன், ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகத் தவம் செய்தவர்கள் அத்தவத்தின் பயனைப் பெற்று அனுபவிப்பதை அதற்கு உவமையாகக் குறிப்பிடுகின்றான். (கலித்தொகை 30:1-4.)

இவ்வாறிருப்பினும், பெண்டிர் தவம் செய்து முடித்தபின் தவத்தின் பயனை நுகரும் நாளாகத் தைப்பூச நாளே சங்க இலக்கியங்களில் முதன்மைப்படுத்தப்படுகிறது. தைப்பூச நாளில் இயற்கையாகவே நிலத்தில் நீர் ஊறும் என்று நம்பப்பட்டது.

தைஇத் திங்கள் தண்கயம் போலக்
கொளக்கொளக் குறையாக் கூழுடை வியனகர். (புறம். 70:6-7)
- என்ற வரிகளில் இச்செய்தி பதிவுபெற்றுள்ளது. எனவே, அந்நாள் நோன்பு முடித்து நுகர்ச்சி கொள்வதற்குரிய நாளாகக் கருதப்பட்டது. குறிப்பாக, அந்நாளில் நீராடி விரதம் முடித்தல் பெண்டிரின் பாலியல் நலன்களைப் பாதுகாக்கும் என நம்பப்பட்டது.

அணங்குடைப் பனித்துறை கைதொழுதேத்தி
யாயும் ஆய மொடயரும் (அகம். 240)

தைஇத் திங்கள் தண்கயம் படியும்
பெருந்தோட் குறுமகள் (நற்றிணை 80)

நறுவீ ஐம்பால் மகளிர் ஆடும்
தைஇத் தண்கயம் (ஐங்குறுநூறு 84)

கலித்தொகையில் (59:12-13)

”வையெயிற்றவர் நாப்பண் வகையணிப் பொலிந்து நீ
தையில் நீராடிய தவந்தலைப் படுவையோ”

- என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன. தைந்நீராடிய தவத்தின் பயனாகச் செல்வ வளம் பெருகிக் குடும்ப நலன் சிறப்புறும் என்ற கருத்து இவ்வரிகளில் பொதிந்துள்ளது.8

”மாயிருந் திங்கள் மறுநிறை ஆதிரை” எனக் குறிப்பிடும் மேற்குறித்த பரிபாடலின் (பா. 11) வரிகள் தவத்தைந்நீராடலை விவரிக்கின்ற தொடக்க வரிகளாகும். அவ்வரிகளின் தொடர்ச்சி பின்வருமாறு:

விரிநூல் அந்தணர் விழவு தொடங்கப்
புரிநூல் அந்தணர் பொலங்கல மேற்ப
வெம்பா தாக வியனில வரைப்பென
அம்பா ஆடலின் ஆய்தொடிக் கன்னியர்
முனித்துறை முதல்வியர் முறைமை காட்டப்
பனிப்புலர்பு ஆடி…

தீயெரிப்பாலும் செறிதவம் முன்பற்றியோ
தாயருகா நின்று தவத்தைந்நீராடுதல்
நீ யுரைத்தி வையை நதி

- இப்பாடலில் முனித்துறை முதல்வியர் முறைமை காட்ட மகளிர் தவத்தைந்நீர் ஆடினர் என்ற செய்தி இடம்பெற்றிருப்பது கவனத்துக்குரியது. காளிதாசனின் குமாரசம்பவத்தில் (5:26) உமையன்னை சிவபெருமானைக் கணவனாகப் பெறுவதற்குத் தவம் செய்தது வருணிக்கப்படுகிறது. பெளஷ்ய (தை) மாதம் முழுவதும் இரவில் பொழியும் பனியில் தண்ணீரில் நின்று தவம் செய்ததாகக் குறிப்பிடப்படுகிறது. அதனை இக்குறிப்புடன் ஒப்பிடலாம்.

மார்கழி ஆதிரை நாளன்று மகளிரின் தைந்நீராடல் குறித்த நோன்பு (விரதம்) தொடங்கிற்று என்றும், வையை நதிக்கு மடை (நைவேத்தியம்) படைக்கப்பட்டதென்றும், இன்னும் இதுபோன்ற பல விவரங்களைப் பரிபாடல் தெரிவிக்கின்றது. பரிபாடல் தரும் விவரங்களைத் தொகுத்துப் பார்த்தால் இந்நோன்பு மார்கழி ஆதிரையன்று தொடங்கி 29 நாள்கள் நடைபெற்று 30ஆவது நாளில் வருகின்ற தைப்பூச நாள் நீராடலுடன் முடிவுற்றிருக்க வேண்டும் எனத் தெரியவருகிறது. பெண்டிர் விரதத்தை முடித்த பின்னர், விருந்துண்டு மகிழ்ந்திருப்பர் என்பதை நாம் எளிதில் உணர்ந்துகொள்ளலாம். கி.பி. 7ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்தவரான திருஞானசம்பந்தர் தமது திருமயிலைப் பதிகத்தில் “நெய்ப்பூசும் ஒண் புழுக்கல் நேரிழையார் கொண்டாடும் தைப் பூசம் காணாதே போதியோ பூம்பாவாய்” எனக் குறிப்பிடுகிறார்.9 இப்பாடல் வரிகளில் இடம்பெறுகின்ற நெய்ப்பூசும் ஒண் புழுக்கல் நேரிழையார் என்ற தொடர் கவனத்திற்குரியது. கி.பி. 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆண்டாளின் திருப்பாவையில் இடம்பெறுகின்ற “நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி” என்ற வரியில் இடம்பெறுகின்ற பாவை நோன்பு முறையுடனும் “பாற்சோறு மூட நெய் பெய்து முழங்கை வழிவாரக் கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்” என்ற வரியில் இடம்பெறுகின்ற பாவை நோன்பு முடிப்பு முறையுடனும் மேற்குறித்த தேவாரப் பாடல் வரியைத் தொடர்புபடுத்திப் பார்த்தல் தேவை. ஒண்புழுக்கல் என்றும், மூட நெய் பெய்த பாற்சோறு என்றும் குறிப்பிடப்படுவது சர்க்கரைப் பொங்கலே என்பது தெளிவு. இதனையே ‘ஸ்தாலீபாகம்’ – தேன் கலந்த பாற்சோறு – என ஆபஸ்தம்ப தர்மசூத்ரம் குறிப்பிடுகிறது.

மேற்குறித்த பரிபாடலில் (வரிகள் 120-121) தைந்நீராடல் நோன்பு இயற்றும் பெண்டிர் நீடித்த இளமை, குடும்பவளம் ஆகியவற்றைப் பெறுவதற்கு வேண்டுவர் என்ற குறிப்பு காணப்படுகிறது. (”கிழவர் கிழவியரென்னாது ஏழ்காறும் மழவீன்று மல்லற்கோள் மன்னுக”.) மேலும், ”வெம்பாதாக வியனில வரைப்பென அம்பா ஆடலின்” என்ற குறிப்பும் வையை நதிக்கு நைவேத்தியம் படைத்து வழிபட்டனர் என்ற குறிப்பும், இந்நோன்பு தனிப்பட்ட நலன்களுக்காக மட்டுமின்றி நீர்நிலைகள் நிரம்பி, வறட்சியின்றி உலகம் செழித்து வாழவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திற்காகவும் நீர்வழிபாடு குறித்த இந்நோன்பு கடைப்பிடிக்கப்பட்டது என்பதைப் புலப்படுத்துகிறது.

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ் செந்நெலூடு கயல் உகளத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்தமுலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்

- என்ற திருப்பாவை வரிகளில் காணப்படுவது இக்கருத்தோட்டத்தின் தொடர்ச்சியே. பகவத்கீதையில் கண்ணனால் சிறப்பித்துக் கூறப்படுவதும், விஸ்வபுருஷனின் பிரும்ம முகூர்த்தம் (அதிகாலைப் பொழுது) என்று போற்றப்படுவதுமாகிய மார்கழி மாதம், வைணவ சமயத்தாரால் பாவை நோன்புக்குரிய மாதமாகக் கொள்ளப்பட்டது. சிவனுக்குரிய நாளாகிய திருவாதிரை நட்சத்திரத்தன்று முடிவடையும் வண்ணம் சைவ சமயத்தாரால் மார்கழி மாத நோன்புக் காலம் வரையறுக்கப்பட்டது. இவ்விரு சமயத்தவராலும், இவ்வகையில் ‘நீர்வழிபாட்டின்’ கூறுகள் ஈர்த்துத் தன்மயமாக்கிக் கொள்ளப்பட்டன. நீர்நிலைகள் இறைவடிவமாகவே கருதப்பட்டமைக்கு எடுத்துக்காட்டாக, மாணிக்கவாசகரின் திருவெம்பாவையில், “பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்” எனத் தொடங்கும் பாடலில் நீர் நிலையைச் சிவன் – பார்வதியாக உருவகித்து, “எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த பொங்குமடு” என்ற வருணனை இடம்பெறுவதைக் குறிப்பிடலாம். ஆயினும், புஷ்ய (திஷ்ய) நட்சத்திரத்திற்கு நீர்வளத்துடன் உள்ள தொடர்பு இவ்வழிபாட்டு மரபுகளில் முதன்மைப்படுத்தப்படவில்லை.

தைந்நீராடலை வருணிக்கும் மேற்குறித்த பரிபாடலில் பாவை நோன்பு என்பது அம்பா ஆடல் என்று குறிப்பிடப்படுகிறது. அம்பா என்ற சொல்லினை அம்பு - பா என்று பிரித்து நீர் தொடர்பான பாடலென்றும், நீர் விளையாட்டின்போது பாடுகின்ற பாட்டென்றும், நீரில் ஓடம் விடும்போது பாடுகின்ற பாட்டென்றும் பலவிதமாகப் பொருள்விளக்கம் கூற இயலும். மீனவர்களிடையே வழங்குகின்ற ஏஎலோ-ஏலசா என்று முடிகின்ற நாட்டுப்பாடலுக்கு அம்பா என்றே பெயர்.10 இத்தகைய பாடல்களைப் பாடி நீராடுதலே ‘அம்பா ஆடுதல்’ ஆகும். திருப்பாவை, திருவெம்பாவைப் பாடல்கள் ஏலோரெம்பாவாய் என்றே முடிவடைவது வழக்கம். உண்மையில் இவை ஏலோ அம்பாவாய் என்றோ, ஏலோ ரம்பாவாய் என்றோ முடிவடைந்திருக்க வேண்டும்.11 இதற்குச் சான்றாக, ஈரோடு மாவட்டம் கத்தாங்கண்ணியில் உள்ள 14ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு ஒன்றில் திருவம்பாவை என்ற வடிவம் இடம்பெற்றிருப்பதைக் குறிப்பிடலாம்.12

பாவை நோன்பு என்பது சைவத்தாலும், வைணவத்தாலும் ஈர்த்துத் தன்மயமாக்கிக் கொள்ளப்பட்டமையால் தைந்நீராடல் என்பது சரத் காலத்துக்குரிய, குறிப்பாக முன்பனிக் காலத்துக்குரிய வழிபாட்டு மரபு என்பதும் வருணன், குபேரன் ஆகிய நீர்த் தெய்வங்களோடு தொடர்புடைய வழிபாட்டு மரபு என்பதும் மக்கள் நினைவிலிருந்து முற்றிலும் அகன்றுவிட்டன. தொல்காப்பியர் காலத்திலேயே வருணன் வழிபாட்டுக் கூறுகள் பல சிவன், திருமால் ஆகிய இரு தெய்வ வழிபாட்டு மரபுகளில் கலக்கத் தொடங்கிவிட்டன. வருணனின் நெய்தல் உலகத் தலைமைத் தன்மை netherworld எனப்பட்ட தென்புலத்தின் தெய்வக்கூறு மட்டுமே ஆகும். ஒளித் திசையாகக் கருதப்பட்ட உத்தர (வட) திசையின் தெய்வக்கூறு சோமன் அல்லது குவேரன் எனப்பட்டது. இத்தெய்வம் கல்லுக்கு அல்லது மலைக்கு உரிய தெய்வமாகக் கருதப்பட்டது. மலையிலிருந்து ஆறுகள் தோன்றுகின்ற இயற்கை நிகழ்வு இதற்குக் காரணமாக இருந்திருக்க வேண்டும். இந்திர வழிபாட்டுக்கு எதிராகப் புராண புருஷனாகிய கண்ணனால் முன்னிறுத்தப்பட்ட வழிபாடு மலை வழிபாடே என்பது விஷ்ணுபுராணத்திலும், ஸ்ரீமத் பாகவதத்திலும் (கோவர்த்தனகிரிக் கதை) குறிப்பிடப்படுகிறது. சரத் கால மலர்களால் மாடுகளை அலங்கரித்து, அவற்றுடன் மலையைச் சுற்றிவந்து கண்ணனும் பிற ஆயர்களும் வழிபட்டதாகவே விஷ்ணுபுராணம், குறிப்பிடுகின்றது.

வேதங்களில் வருணன் அத்ரிவன் (மலைக்கு இறைவன்) எனக் குறிப்பிடப்படுகிறான். பிரபஞ்ச இயக்கத்தின் சட்டமாகிய ரிதம் என்ற கோட்பாட்டின் காவலன் வருணனேயாதலால் அவனே ஒப்பந்தங்களுக்குரிய தோன்றாத் துணைவனாகவும், சாட்சி பூதமாகவும் இருப்பவன். காதலன் காதலியிடம், ”உன்னைக் கைவிட மாட்டேன்” எனச் சூளுரைக்கும்போது வருணனைச் சுட்டிச் சூளுரைப்பது வழக்கம். கலித்தொகை இவ்வழக்கத்தைக் குறிப்பிடுகிறது. சிலப்பதிகாரம், கானல்வரியிலும் இச்செய்தி குறிப்பிடப்படுகிறது.13 இத்தகைய சூளுரையினை ‘மலையொடு மார்பமைந்த செல்வன் அடியைத் தொட்டும்’ உரைப்பதுண்டு எனக் கலித்தொகை (108:55) குறிப்பிடுவது ‘அத்ரிவன்’ என்ற கருத்தோட்டத்துடன் வருணன் கொண்ட உறவை உணர்த்தும்.. வருணன் சாஸ்திரங்களின் (வாழ்வியற் சட்டங்களின்) தலைவனாதலால் அவனை ‘சாஸ்திர ராஜன்’ என்பர். சாஸ்தா எனப்பட்ட ஐயனார் வருணனின் ஒரு வடிவமே ஆவார். ஐயனாரை ‘மகாசாத்திரன்’ எனச் சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகிறார். ‘நெய்தல் பூண்டோன்’ என்பது ஐயனாரின் பட்டப்பெயர் என நாமதீப நிகண்டு (நூற்பா 43) கூறுகிறது. இன்றும் ஐயனார் வழிபாட்டில் சரத் காலமாகிய மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களே முதன்மை பெறுகின்றன. இவற்றுள் தை மாத (மகர ஜோதி) வழிபாடு சிறப்பாகக் குறிப்பிடத்தக்கதாகும்.

திஷ்யம், தைஷ்யம் என்ற வழக்குகளைவிடப் புஷ்யம், பெளஷ்யம் என்ற வழக்குகளே வட இந்திய மரபில் மிகுதியாகக் காணப்படுகின்றன. ‘திஷ்ய’ என்பதன் பாலித் திரிபாகிய ‘திஸ்ஸ’ என்பது பெளத்த மரபில் குறிப்பாகச் சிங்கள பெளத்த மரபில் பரவலாக வழக்கிலிருந்துள்ளது. எனவே, தைந்நீராடல் என்பது யக்ஷர் (இயக்கர்) எனப்பட்ட இலங்கையின் பூர்வகுடி மரபினரிடையே நிலவிப் பின்னர் பிற இனத்தவர்களாலும் பின்பற்றப்பட்ட நோன்பாகலாம். யக்ஷர் எனப்படுவோர் மஞ்சள் நிற மங்கோலிய இனத்தவராகக் கருதப்படுகின்றனர். யக்ஷர் தலைவன் குபேரன் ஆவான். நெய்தல் மலர் தாங்கிய கடவுள் எனப் பொருள்படும் பெயருடைய ‘உத்பல வருணன்’ (உபுல்வன்) சிங்கள பெளத்தத்தில் சிறப்பிடம் பெற்ற இறைவனாவான். வருணனின் இயக்கர் குல வடிவமாகிய குபேரனுக்கு இலங்கை குறித்த புராணங்களில் சிறப்பிடம் உண்டு.

தைந்நீராடலும் மாசிமக நீராடலும்

திஷ்ய நட்சத்திரக் கணம் பிருஹஸ்பதி எனப்படும் வியாழனுக்குரிய நட்சத்திரக் கணம் எனச் சோதிட நூல்கள் குறிப்பிடும். வருணன் அல்லது ஐயனாரின் சாஸ்திர ராஜன் எனப்படும் குருத்தன்மை, பிருஹஸ்பதியுடன் இவ்வாறு இணைத்து இனம் காணப்பட்டிருக்கலாம். எனினும் சந்திரன், குருபத்தினியாகிய தாரையுடன் (தாரை அல்லது தாரகை என்பது நட்சத்திரம் எனப் பொருள்படும்) களவு மணம் புணர்ந்த கதை புராணங்களில் பதிவு பெற்றுள்ளது. இவ்விருவரின் களவு மணத்தில் பிறந்தவனே புதன்.

புராணங்கள் குறிப்பிடும் இத்தகைய கதைகள், சோமனுக்கும் திஷ்ய நட்சத்திரக் கணத்துக்குமிடையே நிலவிய குறிப்பிடத்தக்க தொடர்பையும், தனது முழுமுதல் தன்மையை இழந்துவிட்ட வருணனின் முன்னாளைய குருத்தன்மையையும் இணைத்துப் பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட கதைகளாகலாம்.

இன்றைய நிலையில் தைப்பூசத் தெப்பம் போன்ற விழாக்களில் மட்டும் நீர்த் தெய்வத்துக்குத் தைஷ்யத்துடன் உள்ள தொடர்பு நீடிக்கிறது எனக் கொள்ளலாம். மாகி அல்லது மாசி மாதப் பூர்ணிமையாகிய மாசி மகமே நீர்த் தெய்வ வழிபாட்டுக்குரிய நாளாக நீடிக்கிறது. ”மாசிக் கடலாடல்” என்றே இதனைச் சம்பந்தர் தமது மயிலைப் பதிகத்தில் குறிப்பிடுகிறார். இது, பாரசீக (ஜொராஸ்ட்ரிய) சமயக் கருத்துகளின் அல்லது ‘மாகி’ மரபின் தாக்கத்தின் விளைவாகலாம். வருணன் வழிபாட்டில் சூரிய வழிபாட்டுக் கூறுகளை முதன்மைப்படுத்துபவர்கள் கார்த்திகை நட்சத்திரக் கணத்தையே முதலாவது உடுக்கணமாகக் கொண்டு 27 நட்சத்திரங்களைக் கணக்கிடும் கார்த்திகாதி கணித முறையினைப் பின்பற்றியிருக்க வாய்ப்புண்டு. இக்கணக்கீட்டினை மணிமேகலையில் காணலாம்.14

அஸ்வினி ஆதியாக நட்சத்திரக் கணங்களைக் கணக்கிட்டால் திஷ்ய நட்சத்திரக் கணம் எட்டாவது உடுக்கணமாகும். கார்த்திகை ஆதியாகக் கணக்கிட்டால் மகம் எட்டாவது உடுக்கணமாகும். எட்டு எட்டாக எண்ணுவதே மிகப் பழமையான கணித மரபாகும்.15 எட்டாவது கடலான கரும்புறக் கடல்16 போல எல்லையாக அல்லது வரம்பாக நிற்கிற தத்துவம் என்ற கண்ணோட்டத்தில், சோம வழிபாட்டு மரபினர் திஷ்யத்தையும் சூரிய வழிபாட்டு மரபினர் மகத்தையும் நீர்த்தெய்வ வழிபாட்டோடு தொடர்புபடுத்தி முதன்மைப்படுத்தியிருக்கலாம். இந்தியச் சிந்தனை மரபில் சூரிய வழிபாட்டு மரபின் செல்வாக்கு வளர்ந்ததன் உடனிகழ்ச்சியாகவே மாசிமக நீராடல் முதன்மை பெற்றதெனத் தோன்றுகிறது.

எப்படியாயினும் தைந்நீராடல் மரபு என்பது ‘புஷ்ய ஸ்நானம்’ எனத் தர்மசூத்ர நூல்கள் குறிப்பிடும் விரதமே என்றும், வருணன், குபேரன், ஐயனார் வழிபாடுகளுடன் தொடர்புடைய விரதமே என்றும் தெளிவாகத் தெரியவருகின்றன. குறிப்பாகத் திஷ்யம், திஸ்ஸம், தைஇய என்ற வழக்குகள் வருணன் வழிபாட்டுடன் தொடர்புடைய இயக்கர் குல அல்லது இலங்கைப் பூர்வகுடி மரபினரின் வழக்குகளாக இருந்து இந்தியச் சிந்தனை மரபில் ஏற்றுக்கொள்ளப்பட்டவையாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

இயக்கர் வழிபாடு, குறிப்பாகக் குபேரன் வழிபாடு தமிழகத்தில் முதன்மையான ஒரு வழிபாடாக இருந்திருக்குமா என்ற ஐயம் எழுவது இயல்பே. யக்ஷர் என்ற சொல்லுக்கு வேர்ச்சொல்லாகக் கருதப்படும் யஹ் என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு ‘இயக்கம்’ என்றே பொருள். கோள்களையும் விண்மீன்களையும் அவ்வவற்றுக்குரிய வழியில் செல்லும் வண்ணம் இயக்குகின்ற – கடவுகின்ற – பொருள் அல்லது ஆற்றல் என்ற கருத்தோட்டத்தின் அடிப்படையில் உருவான இயவுள், கடவுள் என்ற சொற்கள் இறைத் தத்துவத்தைக் குறிப்பதற்குரிய சொற்களாகச் சங்க இலக்கியங்களில் இடம்பெறுகின்றன. குறிப்பாக, இயவு என்ற சொல் வழி என்ற பொருளிலும் இயவுள் என்பது வழிநடத்திச் செல்லும் ஆற்றல் என்ற பொருளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. பிற யானைகளைத் தலைமைதாங்கி வழிநடத்திச் செல்லும் யானை, ‘இயவுள் யானை’ என அகநானூற்றில் (பா. 29) குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இயக்கர்கோன் வழிபாடு அதாவது, யக்ஷர் குல வருணன் - சோமன் வழிபாட்டுத் தொடர்பிலேயே தைந்நீராடல் மரபு சங்க காலத் தமிழகத்தில் நிலவியிருக்க வேண்டும் என நாம் முடிவுசெய்யலாம்.

அடிக்குறிப்புகள்:

[1] மறையும் மறையவர்கள் முதலிய ஆய்வுக் கட்டுரைகள், எஸ். இராமச்சந்திரன், எனிஇந்தியன் பதிப்பகம், சென்னை-17, 2007.

[2] இன்றும், அந்திப் பொழுதில் மேற்குத் திசை நோக்கி நின்று, வருணசூக்தம் சொல்வது பூணூல் அணிந்தவர்களின் சந்தியாவந்தனச் சடங்காக வழக்கிலுள்ளது.

[3] ‘அணிகலன் பெருக்கும் அக்ஷய த்ரிதியை’, மறையும் மறையவர்கள் முதலிய ஆய்வுக் கட்டுரைகள், எஸ். இராமச்சந்திரன், எனிஇந்தியன் பதிப்பகம், சென்னை-17, 2007.

[4] மிகப் பழமையான தமிழ்ப் பிராமிக் கல்வெட்டுகளில் குவீரன் என்ற வடிவமே காணப்படுகிறது. க்ஷ என்ற ஒலி குவ எனப் பிராகிருதத்திலும், தமிழிலும் ஒலிக்கப்பட்டதற்குப் பல எடுத்துக்காட்டுகள் உண்டு.

[5] p. 346 History of Dharamasastra, Vol V, Part 1., Pandurang Vaman Kane, Bhandarkar Oriental Research Institute, Poona, 411004, 1994. ‘ஸ்தாலீபாகம்’ சடங்கு பற்றி மெய்கண்டார் சந்தானத்தைச் சேர்ந்த மறைஞா சம்பந்தர் குறிப்பிட்டுள்ளார் எனத் தெரிகிறது. பார்க்க: பக். 1849, தமிழ்ப் பேரகராதி, சென்னைப் பல்கலைக்கழகம், 1982.

[6] முழுநிலவு என்பது வடதிசைக்குரிய சோமன் என்ற தெய்வமாகவும் மதிமறைவு என்பது தென்திசைக்குரிய யமன் என்ற தெய்வமாகவும் உருவகிக்கப்பட்டன என்பது வேதங்கள் குறித்த ஆய்வாளர்களின் முடிபு ஆகும். வேதங்களில் யமன் என்பவன் முதன்முதலில் இறந்ததன் மூலம், இறப்பு என்றால் இத்தகையதே எனப் பிறருக்கு வழிகாட்டிய ஒருவனாகவே குறிப்பிடப்படுகிறான். பார்க்க: pp 57-130, Vedic Mythological Tract, R. N. Dandekar, Ajantha Publishers, Delhi, 1979.

[7] தையொரு திங்களும் தரைவிளக்கித் தண்மண்டலமிட்டு மாசி முன்னாள்
ஐயநுண்மணற் கொண்டு தெருவணிந்து அழகினுக்கலங்கரித்து அனங்கதேவா
- எனத் தொடங்கும் நாச்சியார் திருமொழி கண்ணனைக் கணவனாகப் பெறுவதற்காக மன்மதனை வேண்டித் தொடங்குகின்றது. இப்பாசுரம்,

உருவுடையார் இளையார்கள் நல்லார் ஓத்து வல்லார்களைக் கொண்டு வைகல்
தெருவிடை எதிர் கொண்டு பங்குனி நாள் திருந்தவே நோற்கின்றேன் காமதேவா (மேற்படி பாசுரம் பா. 6)
- என்று தொடர்வதால் இந்நோன்பு பங்குனி உத்தரத்துடன் முடிவுற்றது எனத் தெரிகிறது.

[8] இக்கலித்தொகைப் பாடலில் மகளிர் மணலில் வீடு கட்டி விளையாடுவதும், மணலில் சிறுமுத்தன் எனப்படும் பாவை உருவம் செய்து, அதனை அலங்கரித்து, அதற்குச் சோறூட்டிப் பிற பெண்டிருடன் விளையாடி மகிழ்வதும், பிறர் வீடுகளுக்குச் சென்று பாடல்கள் பாடிப் பரிசு பெறுவதும் குறிப்பிடப்படுகின்றன. இச்செயல்பாடுகள் பக்தி இலக்கியக் காலத்துப் பாவை நோன்பில் உரிய வகையில் உட்கிரகிக்கப்பட்டன. இதனைப் பற்றித் தமிழறிஞர்கள் விரிவாக ஆராய்ந்துள்ளனர்.

[9] தென்மேற்குப் பருவமழை பொழிகிற மேலைக் கடற்கரைப் பகுதியில், ஐப்பசி - கார்த்திகை மாதங்களை சரத்காலமாகக் கொள்கிற மரபு உண்டு. ஞானசம்பந்தரின் மயிலைப் பதிகத்தில், “ஐப்பசி ஓண விழாவும் அருந்தவர்கள் துய்ப்பனவும் காணாதே போதியோ பூம்பாவாய்” என்ற இவ்வரிகளில் இம்மரபும் பதிவு பெற்றுள்ளது.

[10] 1978ஆம் ஆண்டில் நான் நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடியில் பணிபுரிந்தபோது மீனவர்களிடையே வழக்கிலுள்ள அம்பாப் பாடல்களைச் சேகரித்து, அதனடிப்படையில் சென்னையிலுள்ள சமஸ்கிருதக் கல்லூரியில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டு ஓர் ஆய்வுக்கட்டுரை வாசித்தேன். வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா போன்ற ஒரு பாடல் வகையே ‘அம்பா’ என்றும், மீனவர்களின் ஓடப்பாடல் அல்லது நீர்ப்பாடலான ‘அம்பா’ மரபை அடிப்படையாகக் கொண்டே திருப்பாவை, திருவெம்பாவைப் பாடல்கள் தோன்றியிருக்க வேண்டுமென்றும் அக்கட்டுரையில் வாதிட்டேன். அக்கட்டுரை பதிப்பிக்கப்படவில்லை.

[11] வகர, யகரங்கள் போன்றே ரகரமும் உடம்படு மெய்யாகப் பயன்படும் வழக்கம் திராவிட மொழிகள் சிலவற்றில் காணப்படுவதுண்டு.

[12] “கற்றான்காணி..... திருவம்பாவை நாள் பத்துக்கு” கல்வெட்டு, இதழ் 66, பக்கம் 16, ஏப்ரல் 2005, தொல்லியல் துறை, சென்னை-8.

[13] பெருங்கடல் தெய்வம் நீர் நோக்கித் தெளித்தென்
திருந்திழை மென் தோள் மணந்தவர் (கலித்தொகை பா 131:1-2)
கரியமலர் நெடுங்கண் காரிகை முன் கடல்தெய்வம் காட்டிக்காட்டி அரியசூள் பொய்த்தார் (சிலம்பு, கானல்வரி: சார்த்துவரி 1) பூக்கமழ் கானலில் பொய்ச்சூள் பொறுக்கென்று மாக்கடல் தெய்வநின் மலரடி வணங்குதும் (முகமில்வரி 4)

[14] 27 நட்சத்திரக் கணங்களுள் கார்த்திகை தொடங்கி எண்ணும்போது விசாகம் 14ஆவதாக வரும். புத்தர் பரிநிர்வாணம் அடைந்த நாள் வைகாசி விசாகமாகும். இந்நிகழ்வைக் குறிப்பிடும்போது நட்சத்திரக் கணங்களுள் நடுவில் இருக்கின்ற நட்சத்திர நாள் என்று மணிமேகலை குறிப்பிடுகின்றது. தனக்கு முன்னர் 13 நட்சத்திரக் கணமும் தனக்குப் பின்னர் 13 நட்சத்திரக் கணமும் இருக்கின்ற வகையில் அமைவதே நடுவிலுள்ள நட்சத்திரக் கணம் ஆகும். இது கார்த்திகையைத் தொடக்கமாகக் கொள்ளும் சோதிடக் கணிப்புக்கு மட்டுமே பொருந்துவதாகும். மணிமேகலை, புத்தரைப் ‘புத்தஞாயிறு’ என்று குறிப்பிடும் மரபினையே முதன்மைப்படுத்துகிறது.

[15] The Zend-Avesta, F. Max Muller, Motilal Banarsidass, New Delhi.

[16] மலைகள் (குல பர்வதங்கள்) எட்டு என்றும் கடல்கள் ஏழு என்றும் குறிப்பிடும் வழக்கமுண்டு. எட்டாவதாக இருப்பது கரும்புறக் கடல் என்பது வைணவ மரபாகும்.

(நன்றி: தமிழினி, ஜனவரி 2009.)

sr@sishri.org



SISHRI Home