இக்கட்டுரையை அச்செடுக்க To print this article
முதற் குலோத்துங்க சோழன் சுங்கம் தவிர்த்தது ஏன்?
எஸ். இராமச்சந்திரன் (ஆய்வாளர், தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்)
முதற் குலோத்துங்க சோழன் (1070-1120) சுங்கம் தவிர்த்த சோழன் என்ற சிறப்புப் பெயருடையவன் ஆவான். ஒட்டக்கூத்தரால் இயற்றப்பட்ட மூவர் உலா,

“புவிராசராசர் மனு முதலோர் நாளில்
தவிராத சுங்கம் தவிர்த்தோன்”


- என இவனைப் புகழ்கிறது. “சுங்கம் தவிர்த்து இருள் நீக்கி உலகாண்ட குலோத்துங்க சோழ தேவன்” எனக் கல்வெட்டுகளும் குறிப்பிடுகின்றன.

சுங்கம் என்ற சொல் சுல்கம் என வடமொழியில் வழங்கிற்று. இது உல்கு என்ற வடிவில் சங்க இலக்கியங்களிலும் திருக்குறளிலும் குறிப்பிடப்படுகின்றது. வணிகப் பொருள்கள், குறிப்பாக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நுகர்வுப்பொருள்கள் மீது விதிக்கப்படும் வரியே உல்கு அல்லது சுங்க வரி என்று கருதப்படுகிறது.

“கழுதைச் சாத்தொடு வழங்கும் உல்குடைப் பெருவழி” எனப் பெரும்பாணாற்றுப்படையும் (வரி 80-81), “உல்குசெயக் குறைபடாது.. நீரினின்று நிலத்தேற்றவும் நிலத்தினின்று நீர்ப் பரப்பவும் அளந்தறியாப் பல பண்டம் வரம்பறியாமை வந்தீண்டி” எனப் பட்டினப்பாலையும் (வரி 125-132) குறிப்பிடுவதிலிருந்து இக்கருத்து சரியானதே எனத் தெரிகிறது.

இவ்வாறு நெடுங்காலமாக (ஒட்டக்கூத்தரின் வார்த்தைகளில் சொல்லப்போனால் சோழர்களின் குலமான சூரிய குலத்தின் முதல்வனான மனுவின் காலம் முதலாக) வசூலிக்கப்பட்டுவந்த சுங்க வரியைக் குலோத்துங்க சோழன் நீக்கினான் என்பது மிகுந்த பெருமைக்குரிய ஒரு செயலாகக் கருதப்பட்டுள்ளது எனத் தெரிகிறது. ஆனால், இத்தகைய ஒரு வரியினம் நீக்கப்பட்டதால் அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பினைக் குலோத்துங்க சோழன் எவ்வாறு ஈடுகட்டினான் என்பது குறித்த விவரம் ஏதும் சோழர் காலக் கல்வெட்டுகளில் நேரடியாகவோ மறைமுகமாகவோ குறிப்பிடப்படவில்லை. சோழர் வரலாற்றை ஆய்வு செய்த அறிஞர்களான கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி, தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆகியோரும் இப்பிரச்சினை குறித்துத் தெளிவுபடுத்தவில்லை. எனவே, சற்று மாறுபட்ட கண்ணோட்டத்தில் இப்பிரச்சினையை அணுகித் தீர்வு காண்பதற்கு முயற்சி மேற்கொள்ளலாம் எனக் கருதுகிறேன்.

எகிப்து நாட்டைச் சேர்ந்த யூசுப் அல் கரதாவி என்ற இஸ்லாமிய இறையியலாளர் சற்றொப்ப 25 ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்லாமிய நம்பிக்கைகளில் ஒரு புதிய போக்கினை உருவாக்குவதற்கான முயற்சியை மேற்கொண்டார். இஸ்லாத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் வாழும் நாடுகள், நம்பிக்கை இல்லாதவர்கள் வாழும் நாடுகள் (தார் அல் ஸலாம், தார் அல் ஹரப்) என்ற இரண்டு விதமான நாடுகள் அல்லது மக்கள் தொகுதிகள்தாம் உலகத்தில் உள்ளன என்று பெரும்பாலான இஸ்லாமிய இறையியலாளர்கள் நம்புகின்றனர். “தார் அல் சுல்ஹ்” என்ற ஒரு பிரிவுக்கும் இஸ்லாமிய நம்பிக்கையில் இடமுண்டு என்ற கோட்பாட்டினை உருவாக்கக் கரதாவி முயன்றார். இந்த விவரம் குறித்து அண்மையில் ஒரு கட்டுரையில் படிக்க நேர்ந்தது. தார் அல் சுல்ஹ் என்ற அரபு மொழித் தொடருக்கு “இஸ்லாமியர்கள், ஒப்பந்த அடிப்படையில் உறவு கொண்டு இயங்கும் நாடு” என்பது பொருளாகும். அதாவது, இஸ்லாத்தைப் பின்பற்றாத ஒரு நாட்டில் வாழ நேர்கின்ற இஸ்லாமியர்களின் மத நம்பிக்கைகளையும் சுதந்திரத்தையும் பாதுகாக்கின்ற பொறுப்பு அந்த நாட்டின் அரசுக்கு உண்டு. அதே வேளையில் அந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய கடமை இஸ்லாமியர்களுக்கு உண்டு. இந்த ஒப்பந்தத்தை மீறாத வகையில் இஸ்லாமியர்கள் இயங்க நேர்கிற நாடு தார் அல் சுல்ஹ் ஆகும் என்பதே கரதாபி அவர்களின் வரையறை ஆகும்.

மேற்குறித்த வரையறையில் சுல்ஹ் என்ற அரபு (எகிப்திய?) மொழிச் சொல் ஆழ்ந்த ஒரு பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதே பொருளினை உல்கு அல்லது சுல்கம் (சுங்கம்) என்ற சொல்லுக்கும் நாம் பொருத்திப்பார்த்தால் குலோத்துங்க சோழன் குறித்த வரலாற்றுச் செய்திக்குப் புதிய பரிமாணம் கிடைக்கிறது. வெளிநாடுகளிலிருந்து பொருள்களைக் கொணர்ந்து உள்நாட்டில் விற்கின்ற வணிகர்களை வழிப்பறிக் கொள்ளையர் போன்றோரின் தாக்குதலிலிருந்து பாதுகாப்பதற்கும் அவர்களின் வணிகப் பரிவர்த்தனைகள் எவ்வித இடையூறுமின்றிச் சுமுகமாக நடைபெறுவதற்கும் பொறுப்பேற்கும் ஓர் அரசு அந்தப் பணிக்காக ஒப்பந்த அடிப்படையில் வணிகர்களிடமிருந்து வசூலிக்கின்ற தொகையே சுங்க வரியாகும். பெரும்பாலும் அரச குலப் படை வீரர்கள் அல்லது குடிகாவல் நடைமுறைகளில் பயிற்சி பெற்றுத் தேர்ந்த படைவீரர்களே இப்பணியினை மேற்கொண்டனர். (இப்படை வீரர்கள் ஊதியம் பெறுகின்ற பணியாளர்களாக இல்லாமல் இறையிலி மானிய நிலங்களைப் பெற்று அதிகாரத்துடன் வாழ்ந்துவந்த ஒரு குழுவினராக இருந்திருக்க வேண்டும்.) இத்தகைய படைவீரர்களின் பாதுகாவலையும் மீறி வணிகப் பொருள்கள் சூறையாடப்பட்டுவிட்டாலோ, வணிகர்களுக்கு ஊறு நேர்ந்துவிட்டாலோ அரசு, வணிகர்களுக்குரிய நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என்பதும், வணிகர்களின் வணிக நடவடிக்கைகள் அரசின் பிற கொள்கைகளுக்கும் உள்நாட்டுச் சட்ட திட்டங்களுக்கும் முரணாக அமையாத வகையில் இருந்திடவேண்டும் என்பதுமே இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையான ஷரத்துகளாக இருந்திருக்க வேண்டும்.

முதற் குலோத்துங்க சோழன் தந்தை வழியில் சாளுக்கிய குலத்தையும், தாய் வழியில் சோழ குலத்தையும் சேர்ந்தவனாவான். மரபுக்கு முரணாகச் சோழ நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றிய குலோத்துங்கன், பூர்விகச் சோழ அரச குடும்பத்திற்கு விசுவாசமாக இருந்த அரச குலப் படைவீரர்களின் அதிகாரத்தைக் குறைக்கின்ற வகையிலும் பொருளாதார வலிமை படைத்த வணிகக் குழுக்களுக்குப் பெரும் சலுகைகள் கிட்டுகின்ற வகையிலும் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளான் என்பதில் ஐயமில்லை. குலோத்துங்கன் ஆட்சிக்கு வந்தவுடன் நடைபெற்ற வலங்கை இடங்கைப் பூசல்களுக்கும் இதுவே காரணமாகலாம். அரச குலப் படைகளின் மானிய நிலங்களை அரசர்களிடமிருந்து கையகப்படுத்தியோ, வணிகர்களுக்குப் பாதுகாப்புப் படையாகச் செயல்பட்டுவந்த அரச குலப் படைகளைக் கலைத்துவிட்டோ, அவர்களை வணிகர்களிடமிருந்து ஊதியம் பெறுகின்ற படைகளாக மாற்றி ஆணையிட்டோ ஏதோ ஒரு வகையில் வணிகர்களின் பாதுகாப்புப் பொறுப்புக்காக அரசு ஏற்றிருந்த செலவினங்களைக் குலோத்துங்க சோழன் முற்றிலுமாகத் தவிர்த்துள்ளான் என நாம் ஊகிக்கலாம். இவ்வாறு சுங்க வரி வசூல் செய்வதன் மூலம் ஈடுசெய்யப்பட்டு வந்த ஒரு செலவினம் இப்போது முற்றிலுமாகத் தவிர்க்கப்பட்டுவிட்டதால் சுங்க வரி வசூல் செய்வது தேவையற்ற ஒன்றாக ஆகிவிட்டது.

வணிகர்கள் அரச குலப் படை வீரர்களையே தம்முடைய பணி மக்களாக வைத்துப் பராமரிக்க விரும்பினால் - அதற்கு அப்படை வீரர்களும் சம்மதித்தால் - வணிகர்களே அவர்களுக்கு ஊதியம் வழங்கித் தங்களுடைய காவற்படையினராக அவர்களைத் தொடர்ந்து பயன்படுத்தி வரலாம் அல்லது கூலிச் சேவகர்களான புதிய படைவீரர்களை நியமித்தும் அவர்களைப் பராமரிக்கின்ற செலவினைத் தாங்களே ஏற்று “நமக்கு நாமே” என்பது போலவும் தங்களுடைய வணிக நடவடிக்கைகளைக் காத்துக்கொள்ளலாம். இத்தகைய நடவடிக்கை வணிகர்களுக்கும் உகந்ததாகவே அமைந்திருக்கும் என்பதிலும் ஐயமில்லை. ஏனென்றால், சமூக அந்தஸ்தும் பாரம்பரியப் பெருமையும் மிகுந்த அரச குலப் படைவீரர்கள் வணிகர்களுக்கு அளிக்கின்ற பாதுகாப்புக்காக வணிகர்கள் கட்டாயமாகச் செலுத்தவேண்டிய கட்டணமே சுங்க வரியாகும். மாறாக வணிகர்கள் தாங்களாகவே தம்முடைய பணியாளர்களுக்கு வழங்குகின்ற கூலி போன்றதே சுங்க வரிக்கு மாற்றாக வணிகர்கள் தற்போது ஏற்றுக்கொள்ள நேர்கிற புதிய செலவினமாகும். மற்றொரு வகையில் பார்க்கப்போனால், சுங்க வரி வசூலிக்கின்ற உரிமையை ஓர் அரசு தன் கையில் வைத்திருக்கிறதென்றால் வணிகர்களின் நடவடிக்கைகளைக் காக்கின்ற கடப்பாடு அந்த அரசைச் சார்ந்தது என்று பொருள். காப்பீடு (Insurance) என்ற கருத்தோட்டத்துடன் இதனை ஒப்பிடலாம். சுங்கம் தவிர்த்த செயல்பாடு என்பது அரசு ஏற்றிருந்த இந்த கடப்பாட்டுச் சுமையிலிருந்து அரசினை விடுவித்துவிட்டது. எனவே, இது குலோத்துங்கனின் அரசுக்கும் சாதகமான ஒன்றாகவே அமைந்தது.

முதல் குலோத்துங்கனின் அரசியல் செயல்பாடுகளைப் பற்றியும், அவற்றின் விளைவுகள் பற்றியும் எனது “வலங்கை மாலையும் சான்றோர் சமூகச் செப்பேடுகளும்” என்ற நூலில் (உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, சென்னை, 2004) ஒரு குறிப்பிட்ட கோணத்தில் ஆராய்ந்துள்ளேன். இது குறித்து மேலும் விரிவாகவும் ஆழமாகவும் ஆராயப்படவேண்டும். குலோத்துங்க சோழனின் சுங்கம் தவிர்த்த செயல்பாடும் இத்தகைய ஆழமான ஆய்வுக்குரிய ஒன்றே என்பதால் இந்த ஆய்வு முடிவினை வரலாற்று அறிஞர்களின் முன்னிலையில் வைக்கிறேன்.

(நன்றி: கல்வெட்டு - காலாண்டிதழ், அக்டோபர் 2008, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை-600008.)

sr@sishri.org

SISHRI Home