இக்கட்டுரையை அச்செடுக்க To print this article
புதிய கண்டுபிடிப்பு: சோழர் காலக் காளாபிடாரி (பத்ரகாளி) சிற்பம்
கோ. தில்லை கோவிந்தராஜன் (ஆய்வாளர், தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்)
தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டையை அடுத்துள்ள பசுபதிகோயில் அருகில் கி.பி. 850- 900ஆம் ஆண்டைச் சேர்ந்த சோழர் காலக் காளாபிடாரி (பத்ரகாளி) சிற்பம் ஒன்றைக் கண்டறிந்துள்ளோம்.

ஓய்வுபெற்ற பள்ளித் தலைமை ஆசிரியர் கலாநிதி, வடக்குமாங்குடி தலைமை ஆசிரியர் அ. சுப்பையா, வெண்ணுகுடி ஆசிரியர் பழனிச்சாமி மற்றும் பாலசுப்பிரமணியன், க. பத்மநாபன், ஓவிய ஆசிரியர் சங்கர் ஆகியோரைக் கொண்ட ஆய்வுக் குழுவினர் என் தலைமையில் பசுபதிகோயில் பசுபதீஸ்வரர் கோயிலுக்கு எதிரே உள்ள தோப்பில் ஆய்வு செய்து காளாபிடாரி சிற்பத்தைக் கண்டுபிடித்தோம்.

தஞ்சையை ஒட்டிய பகுதியில் காளாபிடாரி வழிபாடு சிறப்பாக இருந்தது என்பதை நிருபதொங்க பல்லவர் காலத்தைச் சேர்ந்த கண்டியூர் காளாபிடாரி, முத்தரையர் சுவரன் மாறனால் உருவாக்கப்பட்ட நியமத்துக் காளாபிடாரி கோயில்கள் பற்றிக் குறிப்பிடும் கண்டியூர் மற்றும் செந்தலைக் கல்வெட்டுகளால் அறியமுடிகின்றது.

இப்பசுபதிகோயில் காளாபிடாரியைப் பற்றிப் புள்ளமங்கை கோயிலில் உள்ள கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. உத்தம சோழனின் 2ஆம் ஆட்சி ஆண்டுக் கல்வெட்டிலும், சுந்தர சோழனின் மூத்த மகனும், முதலாம் இராஜராஜனின் சகோதரனுமாகிய ஆதித்த கரிகாலனின் 5ஆம் ஆட்சி ஆண்டுக் கல்வெட்டிலும் நடுவிற்சேரி திருமணிமண்டகமுடைய காளாபிடாரி எனக் குறிப்பிடப்படுகின்றது. நடுவிற்சேரி என்ற ஊர் தற்போது நல்லிச்சேரி என வழங்கப்படுகிறது. தற்போது இச்சிற்பம் நல்லிச்சேரிக்கும் புள்ளமங்கைக்கும் இடையில் காணப்படுகிறது. இந்த இடத்தில் கோயில் ஒன்று இருந்து அழிந்திருக்கவேண்டும். இக்கோயிலே மேற்குறித்த கல்வெட்டுகளில் குறிப்பிடப்படும் ‘நடுவிற்சேரி திருமணிமண்டகமாக’ இருக்க வேண்டும். குடிப்பெயர்வு காரணமாகவோ, ஆட்சி மாற்றங்கள் காரணமாகவோ இக்கோயிலில் வழிபாடு முற்றிலும் நின்றுபோய் இக்கோயிலுக்குரிய நிலங்களின் மேலாண்மையும் கைமாறிப்போய் இக்கோயில் முற்றிலும் கைவிடப்பட்டு அழிந்திருக்கவேண்டும். எப்படியோ இந்த அழகிய சிற்பம் அழிவின் விளிம்புவரை சென்று அதிசயமாகத் தப்பிப் பிழைத்துள்ளது.

இச்சிற்பம் நான்கரை அடி உயரத்தில் பத்மபீடத்தில் சுகாசனத்தில் அமர்ந்த நிலையில் உள்ளது. வலது முன்கை உடைந்துள்ளது. இடது முன்கை தொடைமீது வரதஹஸ்தத்தில் உள்ளது. வலது பின்கையில் சூலமும், இடது பின்கையில் கபாலமும் உள்ளன. மார்பினில் குறுக்கே கபாலயக்ஞோபவீதம் (மண்டையோடுகளால் ஆன பூணூல்), ஜடாபாரம், அதில் சர்ப்பமெளலி, காதுகளில் பைதற் பிணக்குழை காட்டப்பட்டுள்ளன. “துளைஎயிற்று உரகக் கச்சுடை முலைச்சி” எனச் சிலப்பதிகாரம் கூறுவதுபோல மார்பினில் பாம்பினைக் கச்சையாக அணிந்துள்ள நிலையில் காளாபிடாரி உள்ளார். சோழர் காலத்தில் காளாபிடாரி வழிபாடு சிறப்பான நிலையில் இருந்தது என்பது இச்சிற்பத்தின் மூலம் தெரியவருகிறது.

சோழர்களின் குல தெய்வம் காளியே என்பதும், காளியை ஊர்த்துவ தாண்டவம் ஆடி வென்றதன் மூலம் நடராஜர் (ஆடவல்லான்) என்ற பட்டத்தைச் சிவபெருமான் பெற்றுவிட்டதாலேயே தில்லை சபாபதி (நடராஜர்) சோழர்களின் குல தெய்வமாக ஆகிவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

thillai@sishri.org


SISHRI Home