அச்சிட வசதியான வடிவம் Printer Friendly Format
நாகராஜாவும் நாகரம்மனும்
எஸ். இராமச்சந்திரன்

கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான கோட்டாறு, தற்போது நாகர்கோவில் என வழங்கப்படுகிறது. நாகர்கோவில் நகருக்கு இப்பெயர் வரக் காரணமாய் அமைந்துள்ள நாகர் கோவிலில் இரண்டு பிரதானமான சன்னிதிகள் உள்ளன. அவற்றுள் ஓலைக் கூரையிலமைந்திருக்கும் சன்னிதியில் நாகக் கற்சிலை உள்ளது. மற்றொரு சன்னிதி, கருங்கற்களால் விமான வடிவில் அமைக்கப்பட்டுள்ள நாகராஜா சன்னிதியாகும். இச்சன்னிதியில், தலைக்குமேல் ஐந்தலை நாகப்படத்துடன் கூடிய ஆண் தெய்வத்தின் சிற்பம், இரு தேவியரின் சிற்பங்களுடன் காணப்படுகிறது.

இத்தெய்வத்தைத் தற்போது அனந்த கிருஷ்ணன் என வழங்குகின்றனர். அதாவது அனந்தன் எனப் புராணங்களில் குறிப்பிடப்படும் ஆதிசேடனின் பாம்புப் படநிழலில் நின்றருளும் கிருஷ்ணன் என்ற பொருளில் வழங்குகின்றனர்.

ஆனால், இச்சன்னிதிக்குரிய துவஜஸ்தம்பப் (கொடிக்கம்பப்) பீடத்தில் ஆதிசேடனின் வாகனமான ஆமை சித்திரிக்கப்பட்டுள்ளதால் இத்தெய்வம் அனந்தன் அல்லது ஆதிசேடனே எனத் தெரிகிறது.1 நாகராஜா என்ற பெயரும் ஆதிசேடனையோ, ஆதிசேடன் அம்சமாகிய பலதேவனையோதான் குறிக்கும். கிருஷ்ணனைக் குறிக்காது.

கி.பி. 16ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தைச் சேர்ந்த திருவிதாங்கூர் மன்னர்களின் கல்வெட்டுகள் தனிக் கற்பலகைகளில் பொறிக்கப்பட்டு இக்கோயிலின் வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. நாகராஜா (அனந்த கிருஷ்ணன்) சன்னிதியும் இக்காலத்திற்குப் பின்னர்தான் கருங்கற்களால் எழுப்பப்பட்டிருக்க வேண்டும் என்பது இதனால் தெளிவாகிறது.

தனிக் கற்பலகைகளில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளில் காணப்படும் ஒரு குறிப்பு நமது கவனத்தை ஈர்க்கிறது. கி.பி. 1505 மற்றும் 1516ஆம் ஆண்டுகளுக்குரிய இரு கல்வெட்டுகளில் நாகர், நாகராஜா ஆகிய இரு தெய்வங்களுக்கும் வழங்கப்பட வேண்டிய அமுதுபடி (நிவேதனம்) பற்றிய விவரங்கள் கூறப்பட்டுள்ளன.2 காலைச்சந்தி, உச்சிச்சந்தி, இராக்காலம் ஆகிய மூன்று பூசைகளிலும் சேர்த்து மொத்தம் பதினாறு நாழி அரிசிச் சோறு இரு தெய்வங்களுக்கும் நிவேதனம் செய்யப்படுகிறது. அதாவது சரிசமமாக எட்டு நாழி அரிசி நாகர்க்கும், எட்டு நாழி அரிசி நாகராஜாவுக்கும் நிவேதனம் செய்யப்படுகிறது.

ஆனால், இந்தப் பதினாறு நாழி அரிசியினை இரு தெய்வங்களுக்கும் பங்கிட்டுப் படைப்பதில் நேர வேறுபாடு காணப்படுகிறது.

நாகராஜாவுக்குரிய இரவுநேர அமுதுபடியாகிய இரு நாழி அரிசியும் உச்சிக்கால அமுதுபடியாகிய நானாழி அரிசியுடன் சேர்த்து அத்தெய்வத்துக்கு உச்சிக்காலத்திலேயே படைக்கப்பட்டுவிடுகிறது. நாகர்க்கோ உச்சிக்கால அமுதுபடியாகிய நானாழி அரிசி உச்சிக் காலத்திலும், இரவுக்கால அமுதுபடியாகிய இரு நாழி அரிசி இரவுக் காலத்திலும் தனித்தனியாகப் படைக்கப்படுகிறது. நாகராஜவுக்கு மட்டும் இரவில் உணவு படைக்காமல் பகலிலேயே இரவுக்கால உணவையும் சேர்த்துப் படைத்துவந்த காரணம்தான் என்ன?

நாகராஜா என்று கல்வெட்டுகளில் குறிப்பிடப்படும் தெய்வத்தை வழிபட்டவர்கள் சமண சமயத்தவராவர். இத்தெய்வத்தின் சிலை கடுசாக்கரை அல்லது நவபாஷாணத்தால் ஆனதென்பதால் இச்சிலைக்கு எந்நேரமும் கவசம் அணிவிக்கப்படுவதாலும், அபிஷேகம் போன்றவை நடைபெறுவதில்லையாதலாலும் இச்சிற்பத்தினை முழுமையாகப் பார்த்தவர்கள் குறைவே.

ஆடையற்ற நிர்வாண நிலையில் சித்திரிக்கப்பட்டுள்ள இத்தெய்வம் கரண்ட மகுடத்துடனும் மகுடத்துக்குமேல் ஐந்தலை நாகப்படத்துடனும் மனித உருவிலும் காட்சியளிக்கிறது. அபய-ஊரு ஹஸ்தங்களுடன், அரைஞாண் மட்டுமே பூண்டுள்ளது இவ்வுருவம். இது ஓர் அபூர்வமான கலைப் படைப்பாகும். நாகராஜனை சமண தீர்த்தங்கரர் பார்சுவநாதரின் யக்ஷனாகச் சமண நூல்கள் குறிப்பிடுகின்றன.

ஆயினும் நாகராஜன், தனது தலைவரான பார்சுவநாதரைப்போலத் திகம்பர நிலையில் காட்சியளித்ததாகச் சமண நூல்கள் குறிப்பிடவில்லை. எப்படியிருப்பினும், சமண மரபுப்படி3 திகம்பரக் கோலத்தில் காணப்படும் இத்தெய்வம், சமண மரபுகளில் ஒன்றான, 'ராத்ரிபோஜன விரமணம்' எனப்படும் இரவில் உண்ணாமை விரதத்தையும் கடைப்பிடிக்க வேண்டுமல்லவா?4

எனவேதான், நாகராஜா இரவு உணவையும் உச்சிப் பொழுதிலேயே உண்டுவிடுவதாகக் கருதி, இரவு நேர அமுதுபடிப் (நிவேதனப்) பங்கினையும் உச்சிக் காலத்திலேயே சேர்த்துப் படைத்துள்ளனர்.

கி.பி. 1517ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த பூதல வீர உதய மார்த்தாண்டவர்மன், இக்கோயிற்பூசை முறைகளில் மாற்றங்களை அறிமுகப்படுத்துகிறான். நாகராஜாவுக்கும் இரவுக்காலப் பூசை நடத்தச் செய்தது இவன் அறிமுகப்படுத்திய மாற்றமே5. இதன்பின்னர், நாகராஜாவை வைணவர்கள் பலதேவனின் வடிவமாக, 'நாகர் திருவனந்தாழ்வார்' என்ற பெயரில் போற்றி வழிபடத் தொடங்குகின்றனர். கி.பி. 1589ஆம் ஆண்டில் கருங்குள வளநாட்டுக் கும்பி குளத்துத் திருக்குருகைப் பெருமாள் என்பவர், நாகராஜா சன்னிதியைக் கருங்கல்லால் எழுப்புவதற்குக் காரணகர்த்தாவாக இருந்துள்ளார். நாகராஜா சன்னிதியின் வடபுறச் சுவரில் பொறிக்கப்பட்டுள்ள ஒரு கல்வெட்டின் மூலம் இதனை நாம் உணர முடிகிறது.6

நெல்லை மாவட்டம் இராதாபுரம் வட்டத்தில், கோட்டைக் கருங்குளம் என்ற ஊருக்கருகில் கும்பிகுளம் என்ற ஊர் உள்ளது. இவ்வூரின் தெற்கே, குறவன்குளம் என வழங்கப்படும் குளத்தின் படுகையில் ஒரு கல்வெட்டுத்தூண் நிறுத்தப்பட்டுள்ளது.7 இக்கல்வெட்டு, கி.பி. 1595ஆம் ஆண்டைச் சேர்ந்தது. 'கும்பி குளம் தம்பிரான் தோழன் திருகுருக்கைப் பெருமாள்' கற்பித்த பெருவழி தர்மத்தைப் பற்றி இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. அதாவது நாகர்கோவில், திருச்செந்தூர் முதலிய திருத்தலங்கட்கு யாத்திரை மேற்கொள்வார், (அரிதேசி, பரதேசிகள்) வழியில் தர்மக் கஞ்சியருந்தித் தமது களைப்பை நீக்கிக் கொள்வதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. இக்கல்வெட்டுத் தூணில் ஆமை, மயில் ஆகிய உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

மயில் திருச்செந்தூர் முருகனின் வாகனம் என்பதாலும், ஆமை நாகர்கோவில் நாகராஜாவின் வாகனம் என்பதாலும் இவ்விரு உருவங்களும் இக்கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளன எனலாம். மேலும், திருக்குருகைப் பெருமாளின் முழுப்பெயர் 'தம்பிரான் தோழன் திருக்குருகைப் பெருமாள்' எனக் குறிப்பிடப்படுவதால், சைவ வைணவப் பாகுபாடு கருதாத வைதிக மரபினைப் பின்பற்றியவர் இவர் எனத் தெரிகிறது.8 இக்கருத்தினை அடிப்படையாகக்கொண்டு நாம் சிந்தித்தால் நாகராஜாவிற்கு இக்கால கட்டத்தில் வைதிக சமய அங்கீகாரம் முழுமையாகக் கிடைத்துவிட்டது என்பதைப் புரிந்து கொள்ளலாம். நித்திய நைமித்திக வழிபாடுகளிலும், திருத்தலப் பயணம் மேற்கொள்வோரின் காம்ய வழிபாடுகளிலும் வைதிகச் சாயல் வேரூன்றத் தொடங்கிவிட்டது என்பதனை நாம் உணர முடிகிறது.

கி.பி. 1643ஆம் ஆண்டில் நாகராஜர் சன்னிதி, 'சீகிட்டிணன் கோயில்' என்றே கருதப்பட்டது என்றும் ஒரு கல்வெட்டால் நாம் அறிய முடிகிறது9. இத்தகைய மாற்றங்கள் ஏற்பட்ட பின்னரும், சமணத் தெய்வம் வைணவச் சார்பு பெற்றுவிட்ட பின்னரும், நாகராஜாவைச் சமண சமயத்தவர் தொழுது வந்துள்ளனர். கிருஷ்ணனை நேமிநாதரின் மைத்துனர் எனச் சமண சமய நூல்கள் குறிப்பிடுவதால் சமணர்கள் வைணவர்களுடன் முரண்படாமல் ஒத்துப் போயிருக்கக்கூடும்.10

இந்நிலையிலும், நாகர் எனக் குறிப்பிடப்படும் ஓலைக்கூரைச் சன்னிதியிலுள்ள நாகப்பாம்புத் தெய்வத்தின்பால் பக்திகொண்ட உள்ளூர் மக்கள், நாகருக்கே முதன்மையளித்து வழிபட்டனர். நாக தெய்வ வழிபாட்டுப் (பூசைப்) பணியில் தொடர்புள்ள உவச்சர்களும் நாகரையே போற்றினர். கி.பி. 1645ஆம் ஆண்டில் உள்ளூர்ப் பெருமக்கள் பலர் சேர்ந்து நாகர்க்கு மகரதேராண (திருவாசி) விளக்கு செய்து வழங்கியுள்ளனர்.11 19ஆம் நூற்றாண்டில் (கி.பி. 1876) நாகர்கோயில் தேரடி இசக்கியம்மையின் கோயிலுக்குக் கன்னார் (வெண்கலக் கொல்லர்) குலப் பெண்மணி சிவகாமியம்மை என்பவர் செப்பு விளக்கு வார்ப்பித்துக் கொடுத்துள்ளார். அச்செப்பு விளக்கில் ”நாகனங்க துணை” எனப் பொறிக்கப்பட்டுள்ளது.12 பொதுவாக, நாகத்தைப் பெண் தெய்வமாகக் கருதும் மரபே தமிழகத்திலும் கேரளத்திலும் வழக்கிலுள்ளது. ஆலப்புழை மாவட்டத்திலுள்ள மண்ணறைச் (புற்றுச்) சாலையில் உள்ள நாகக் கோயிலில் வயது முதிர்ந்த நம்பூதிரிப் பெண்மணியே பூசாரியாக உள்ளார். கேரளத்தில் வாழும் புள்ளுவர் இனப் பெண்டிரே நாக தெய்வம் பற்றிப் பாடிப் பிச்சையேற்பர். இத்தகைய செய்திகள் 'விஸ்வ விஞ்ஞான கோசம்' என்ற மலையாளக் கலைக் களஞ்சியத்தில் கூறப்பட்டுள்ளன என்று திரு. உன்னிகிருஷ்ணன் நாயர் அவர்கள் (நாகர்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரியில் பணியாற்றி ஓய்வுபெற்ற மலையாளப் பேராசிரியர்) கூறுகிறார்.13 எனவே, நாகர்கோவில் மக்களால் முதன்மையாக வழிபடப்பட்டுவரும் நாகர் கோவில், நாகநங்கை அல்லது நாகரம்மன் கோயிலே என்பது புலனாகும். நாகத் தெய்வச் சன்னிதியில், பழமையான சப்தமாதர் (தாய்மார் எழுவர்) சிற்பத் தொகுதி இருப்பதும்,14 இத்தெய்வமே கிராமத் தெய்வ வழிபாட்டு நம்பிக்கைகளுடன் பின்னிப் பிணைந்த நாகரம்மன் என்பதைத் தெளிவுபடுத்தும்.

கி.பி. 16ஆம் நூற்றாண்டில் செய்யப்பட்ட அனந்தன் (நாகராஜா), நாகினி (தேவி) செப்புத் திருமேனிகள் நாகர்கோவில் ஆலய நிர்வாகத்தின் பொறுப்பிலுள்ளன. நாகினி செப்புத் திருமேனி பீடத்திலிருந்து கழன்றிருப்பதால், 19ஆம் நூற்றாண்டில் இத்திருமேனியைப் பீடத்துடன் இணைப்பதற்காகச் செப்புக் கம்பி வளையம் ஒன்று செய்தளிக்கப்பட்டுள்ளது. இவ்வளையத்தில், 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தைச் சேர்ந்த எழுத்தமைதியில், ”கும்பினிச் சுபைதார் திம்மராசா அவல்தாற் னாயக்கன் சிப்பாயிகளுக்கும் நாகராசா துணை” எனப் பொறிக்கப்பட்டுள்ளது.15 இதிலிருந்து ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினியின் நிர்வாகத்தில் திருவிதாங்கூர்ப்பகுதியின் சுபேதாராக இருந்த திம்மராசா என்பவரும், அவருக்குக்கீழ் ஹவில்தார், நாயக், சிப்பாய்கள் ஆகிய பதவிகளில் இருந்தோரும் நாகராசா கோயிலுடன் தொடர்புள்ள இத்திருமேனியைப் பீடத்துடன் இணைக்கும் வளையத்தினைச் செய்தளித்துள்ளனர் எனத் தெரியவருகிறது. அரச அமைப்புகள் மற்றும் நிர்வாகத் துறையினரின் ஆதரவு நாகராஜாவுக்கும், பொதுமக்களின் ஈடுபாடு நாகரிடத்தும் தொடர்ந்து இருந்து வந்துள்ளன என்பது இப்பொறிப்புகளால் தெளிவாகின்றது.

அடிக்குறிப்புகள்:

1. நேரில் பார்வையிட்டு அறியப்பட்டது.

2. கன்னியாகுமரி மாவட்டக் கல்வெட்டுகள்-தொகுதி, 3 தொடர் எண் 1968/292 இன் வாசகங்கள்:
”காலைசந்தி பாயாதத்துக் கமுதுபடி நானாழீ... உச்சிச் சந்திக்கு நாகர்க் கமுதுபடி நானாழி நாகராசாவுக்கு அமுதுபடி ஆறுநாழி இராக்கால(ம்) நாகர்க்கமுதுபடி இரு நாழி”

தொடர் எண் 1968/285ன் வாசகங்கள்:
”நாகர்க்கும் நாகராசாவுக்கும் ..... உஷா பூசைக்கு அமுதுபடி நானாழி ஆகவும் உச்சிச் சந்திக்கு அமுதுபடி குறுணி இருநாழி ஆகவும் இராக்காலம் பூசைக்கு அமுதுபடி இரு நாழியாகவும்”

3. நாகர் என்ற சொல் ‘நக்ன' (நிர்வாண) என்ற சொல்லிலிருந்து தோன்றியதாக ஒரு கருத்து உண்டு. “நக்க சாரணர் நாகர்” என இப்பழங்குடியினரை மணிமேகலை குறிப்பிடுகிறது. ஆனால், பலதேவன் அத்தகைய நக்கசாரணன் அல்லன்.

4. ராத்ரி போஜன விரமணம் பற்றி மோகன்லால் என்பார் Aspects of Jainism என்ற நூலில் விரிவாகக் கூறியுள்ளார். இமயத்திலுள்ள பத்ரிநாத் கோயிலில் பூசைப்பணி புரியும் ராவல், இரவு உணவு உண்ணக்கூடாதென்ற விதி உள்ளது. பத்ரிநாத் சிவாலயம் சமண சமயக் கோவிலாக இருந்தது என்பதற்கு இதுவே சான்றெனக் கருதப்படுகிறது.

5. கன்னியாகுமரிக் கல்வெட்டுகள் - தொகுதி 3, தொடர் எண் 1968/276.

6. மேற்படி நூல், தொடர் எண் 1968/279, வரிகள் 6 முதல் 10 வரை.

7. இக்கட்டுரையாசிரியரால் இக்கல்வெட்டு கண்டறியப்பட்டது. பின்னர், இந்திய அரசு தொல்லியல் பரப்பாய்வுத் துறை கல்வெட்டாய்வாளர் திரு. கருப்பையா அவர்களுக்குத் தெரிவித்துப் படியெடுக்கப்பட்டது.

8. மாறனலங்காரம் என்ற அணியிலக்கண நூல் இயற்றிய திருக்குருகைப் பெருமாள் இதே காலகட்டத்தைச் சேர்ந்தவராயினும் அவருடைய இயற்பெயர், ஊர் முதலியன வேறெனக் கருதப்படுகின்றன.

9. கன்னியாகுமரிக் கல்வெட்டுகள் - தொகுதி 3, தொடர் எண் 1968/278.

10. 20ஆம் நூற்றாண்டின் தொடக்கம்வரை இக்கோயில் வழிபாட்டில் சமணர்க்குத் தொடர்பிருந்ததனை டி.ஏ. கோபிநாதராவ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். கி.பி. 16ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில், ”நாகர் கோவிலிற்பள்ளியுடைய நாராயணன் நயினான் குணவீர பண்டிதனும் சீவகருடையான் கமலவாகன பண்டிதனும்” என இரு சமணப் பெரியோர் இக்கோயிலின் நிர்வாகத்தில் தொடர்புடையோராக இருந்தனர் என்ற குறிப்பு காணப்படுகிறது. 19ஆம் நூற்றாண்டின் இறுதிவரை, குமரி மாவட்டத்தில் நாகர்கோவிலிலும், சிதரால் என வழங்கப்படும் திருச்சாரணத்து மலைபகவதியம்மன் கோவிலிலும் சமணர்களே 'ஸ்தானிகர்' பதவி வகித்துவந்தனர். இச்சமணர்கள் பிராம்மணர்களுக்குச் சமமாகக் கருதப்பட்டார்கள் என்றும், இவர்கள் வைதிக சமயப் பிராம்மணர்களின் வீட்டில் உணவருந்த அனுமதிக்கப்படுவர் எனினும், தமது வீட்டில் வைதிக சமயப் பிராம்மணர்களை உணவருந்த அனுமதிக்க மாட்டார்கள் என்றும் தாம் கேள்விப்பட்ட செய்திகளைத் திரு. கோபிநாதராவ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

11. கன்னியாகுமரிக் கல்வெட்டுகள் - தொகுதி 3, தொடர் எண் 1968/282. இக்கல்வெட்டில் (வரிகள் 69-70) குலசேகரப் பெருமாள் கொன்றைமாலை என்ற பெயருடையவர் 25 பணம் அளித்ததாகக் கூறப்பட்டுள்ளது. இவரது உருவச் சிற்பம், நாகராஜா சன்னிதி முகமண்டபத் தூணில் கல்வெட்டுடன் சித்திரிக்கப்பட்டுள்ளது. அக்கல்வெட்டின் காலம் கி.பி. 1641 ஆகும். எனவே, கி.பி. 1641இல் நாகராஜா சன்னிதி முகமண்டபம் கட்டப்பட்டிருக்க வேண்டும்.

12. நாகர்கோவில் ஆலய நிர்வாகத்தினரின் பொறுப்பிலுள்ள செப்புப் பாவைவிளக்கு ஒன்றில் இவ்வாசகம் ‘நாகநங்கை' என்பது ‘நாகனங்க' எனத் தவறாகப் பொறிக்கப்பட்டுள்ளது. நேரில் படித்தறியப்பட்டது. (கோயிலின் பெயர் நாகேந்திரசுவாமி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.)

13. கட்டுரையாசிரியரிடம் நேரில் கூறப்பட்ட செய்தி. நாகப்பாம்பின் படம், பெண்ணுறுப்பின் தோற்றத்தையொத்துக் காட்சியளிப்பதால் நாகத்தைப் பெண்ணாகக் கருதினர்போலும். தமிழகக் கிராமப்புறங்களில் நாகத்தினை 'ஆவுடையாச்சி' என்றே வழங்குகின்றனர் என ஆய்வாளர் திரு. ஹரிராமன் தெரிவிக்கிறார். ஆவுடை என்பது பெண்ணுறுப்பைக் குறிக்கும். இது ‘ஔட்யாண' (ஒட்டியாணத்தால் மறைக்கப்படும் பகுதி) என்ற சமஸ்கிருதச் சொல்லின் தமிழ்த் திரிபாக இருக்கலாம். (ஔட்யாண > ஆவுடையான் > ஆவுடை.)

14. நேரில் பார்வையிடப்பட்டது.

15. நேரில் பார்வையிடப்பட்டது.

[“ஆய்வு வட்டக் கட்டுரைகள் - I” தொகுப்பில், (தொகுப்பாசிரியர்: வெ. கிருஷ்ணமூர்த்தி, ஆய்வு வட்டம், சென்னை - 26) 1995ஆம் ஆண்டு வெளியான கட்டுரையின் செம்மைப்படுத்தப்பட்ட வடிவம்.]

sr@sishri.org


SISHRI Home