இக்கட்டுரையை அச்செடுக்க To print this article
திராவிட இயக்கப் பகுத்தறிவு
ப்ரவாஹன் (ஆய்வாளர், தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்)
[“மண் மொழி” இதழ் 19-20இல் (செப்டம்பர் - டிசம்பர் 2007) இராசேந்திர சோழன் எழுதிய ‘பகுத்தறிவின் மூட நம்பிக்கை' கட்டுரை குறித்த விவாதம்.]

‘பூனைக்கு யார் மணி கட்டுவது' என்றிருந்த நிலையில், “பகுத்தறிவின் மூடநம்பிக்கைகள்” குறித்த விவாதத்திற்கு வழிகோலியதில் மகிழ்ச்சி, பாராட்டுகள். இத்தகைய விவாதத்தை நிகழ்த்த வேண்டும் என்றதுமே, உங்களை இந்துத்வவாதி, இந்து மதமே சாதி, அதனால் நீங்கள் சனாதனவாதி என்பதாக சேற்றைவாரி இறைக்கின்ற பணியைச் ‘செவ்வனேசெய்ய' ஒரு கூட்டம் உண்டு. அதுதான் ‘பகுத்தறிவு மூடநம்பிக்கை'யில் ஆழ்ந்திருக்கும் / ஆழ்த்தப்பட்டிருக்கும் கூட்டம். திராவிட இயக்கம் அவர்களின் கோயில்; அதன் கருவறையில் இருக்கும் பெரியார் அவர்களின் கடவுள். இதே பாணியில், மார்க்ஸ் மூலவர், பெரியார் உற்சவ மூர்த்தி என்று சொல்கின்ற இன்னொரு பிரிவும் உண்டு. இவ்விரு சாராரையும் விட சமூகம் மிகப் பெரியது, சமூக மாற்றம் அதைவிட முக்கியம்; எனவே அத்தகையப் ‘பகுத்தறிவு மூடநம்பிக்கையாளர்'களாக இருக்க விரும்புவோரின் ‘விமர்சனத்தை'ப் பொருட்படுத்தாதீர்கள்.

மதம் அல்லது கடவுள் நம்பிக்கையைப் பொருத்தவரை, மார்க்ஸ் சொன்னதுதான் சரி. ஆனால் அது பற்றிய புரிதல் இங்கு இல்லை - கிளிப்பிள்ளைச் சீடர்களிடம் அதை எதிர்ப்பார்க்கக் கூடாது - என்பதுதான். புறநிலைமைகள்தான் மனித சிந்தனையை வடிவமைக்கின்றன; புறநிலைமைகளில் ஏற்படுகிற மாறுதல்கள் மனித சிந்தனையில் பிரதிபலிக்கின்றன என்பது மார்க்சியத்தின் அடிப்படைப் பாடம். இந்த அடிப்படையில் இருந்தே மதம் குறித்து “மதம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் நிம்மதிப் பெருமூச்சு, அது இதயமற்ற உலகின் இதயம். உணர்ச்சியற்ற சூழலின் உணர்ச்சி, மதம் மக்களை மயக்கும் அபின்” என்றார் மார்க்ஸ். அதாவது இந்த உலகில் மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவு வெறும் ரொக்கப்பட்டுவாடா மட்டுமே என்றாகிவிட்டது. இந்த நிலையில் மனிதனுக்கு ஆறுதலாக இருக்கின்ற மதம், அவனை மயக்கத்தில் ஆழ்த்துகிறதேயன்றி தீர்வல்ல என்பதை அழகாகச் சொல்லி இருக்கிறார். மதத்தை அவன் விட்டொழிக்க வேண்டுமானால் புறநிலைமைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும்; அதாவது இந்த உலகம் இதயமுள்ளதாக ஆக்கப்படவேண்டும். அவ்வாறு ஆக்கப்பட்டுவிட்டால் ஆறுதலுக்காக அவன் மதத்திடம் தஞ்சம் புக வேண்டியதில்லை என்பதுதான். ஆனால், ‘பகுத்தறிவின் மூடநம்பிக்கையாளர்'களோ, இந்த உலகில், மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவு ரொக்கப்பட்டுவாடா என்றிருக்கின்ற நிலையிலேயே அவன் மதத்தையும் கடவுளையும் விட்டொழித்துவிட வேண்டும் என்று விரும்புகின்றனர். இது வருமானம் இல்லாத ஒருவன் மூன்று வேளையும் சத்துள்ள உணவு உண்ணவேண்டும் என எதிர்ப்பார்ப்பதைப் போன்றது. யதார்த்தம், மனித விருப்பங்களால் மட்டுமே வடிவமைக்கப்படுவதல்ல.

"ஒருவேளை இந்து மதம் பெரும்பான்மை மதமாகவும் பிற மதங்கள் சிறுபான்மையாகவும் இருப்பது மற்றும் பிற மதங்களில் இல்லாத பிறப்பு அடிப்படை ஏற்றத்தாழ்வு இந்து மதத்தில் இருப்பது” ஆகியன இந்து மதத்தைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்துவதற்குக் காரணமாக இருக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளீர்கள். பிறப்பு அடிப்படைக்கும் இந்து மதத்திற்குமான தொடர்பு குறித்த தங்களின் புரிதலுடன் கருத்து மாறுபாடு உள்ள போதிலும் தற்போதைக்கு அதை அப்படியே வைத்துக்கொண்டு பேசுவது அவசியம் எனக் கருதுகிறேன்.

"சாதி ஒழிப்பு என்கிற சிக்கலான, கடினமான பணிக்குள் கால் பதிக்காமல், சும்மா பராக்கான, பொழுதுபோக்கான, நகைச்சுவையும் கிண்டலும் கலந்து கைகொட்டிச் சிரிக்கிற எளிமையான செயல் திட்டத்துக்குள் தங்கள் பகுத்தறிவையும் மூடநம்பிக்கை எதிர்ப்பையும் பறை சாற்றிக்கொண்டிருக்கிறார்கள்” என்ற தங்களின் கூற்று முற்றிலும் உண்மை. ஆனால் விஷயம் என்னவெனில், இத்தகைய எளிய செயல் திட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டது வெறும் தற்செயலா அல்லது திட்டமிடப்பட்டதா என்பதுதான். இதைப் புரிந்துகொள்ள தமிழக வரலாற்றை நுணுக்கமாகப் பார்க்கவேண்டும்.

தற்போது தமிழகத்தில் கோலோச்சிவரும் பகுத்தறிவை ‘திராவிட இயக்கப் பகுத்தறிவு' என்று சொல்வதே சரி. பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இந்தியா இருந்த நிலைமையில், துபாஷிகளாக - இருமொழியாளர்களாக - இருந்து, அதிகார வர்க்கத்தின் அனைத்துப் பதவிகளையும் பார்ப்பனர்கள் ஆக்கிரமித்திருந்த நிலையில் திராவிட இயக்கம் தோற்றங் கொண்டது. இந்நிலையில் தோன்றிய திராவிட இயக்கம் தமிழ்ச் சமூகம் அனைத்தையும் பிரதிநிதித்துவம் செய்வதைப் போல, பார்ப்பனர் தவிர்த்த அனைவருமே தமிழர்கள் என்பதாக, அதாவது பார்ப்பனர் மட்டும் தமிழரல்ல என்பதாக, பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் (அல்லது ஆரியர் - திராவிடர்)$ என்று பிரித்தது. சமகாலத்தில், வட இந்தியாவில் அம்பேத்கர் அவர்கள் சமூகத்தை, சாதி இந்துக்கள் என்றும் தீண்டப்படாதார் என்றும் பிரித்தார். சமூகத்தை திராவிட இயக்கம் பிரித்ததற்கும் அம்பேத்கர் பிரித்ததற்கும் இடையிலான கூர்மையான வேறுபாட்டை எவரும் எளிதில் புரிந்துகொள்ள முடியும். தமிழகத்தில் பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் என்று பிரிக்கப்பட்டதற்கான அடிப்படை என்ன? சாதி என்பது தமிழர்களுக்குக் கிடையாது; பார்ப்பனர்களே சாதியைக் கொண்டு வந்தவர்கள் என்பதாகச் சித்தரிக்கும் முயற்சியாகவே இது இருந்தது. இது உண்மைக்கு மாறானது மட்டுமல்ல; சதி நோக்கம் கொண்டதும் கூட. தமிழகத்தில் பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் என்று பிரித்ததன் மூலம் சாதி, சதி போன்ற சமூகத் தீமைகளுக்குப் பார்ப்பனர்களைக் காரணங்காட்டிவிட்டு, தொடர்ந்து தாம் தமது சாதி ஆதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்வதுதான்.

இந்து மதம் பார்ப்பானுடையது, அது சாதியை போதிக்கிறது. எனவே, பார்ப்பான் தான் சாதிக்குக் காரணம் என்ற நிலையை மேற்கொண்டு, பார்ப்பன எதிர்ப்பை முழங்கிவிட்டால் சாதிக்கு எதிராக இருப்பதாகப் பொருள் என்பதாகப் ‘படம் காட்டி', உள்ளுக்குள் தங்களின் சாதி/அரசியல் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொண்டவர்கள்தான் திராவிட இயக்கத்தின் சித்தாந்த மூலவர்களாக, வழிகாட்டிகளாக இருந்தனர். அவர்களின் நிலைப்பாட்டைத் தெளிவாக்கும் எடுத்துக்காட்டுகள் இதோ:

“நான் விவரித்துக்கொண்டிருக்கும் காலத்திற்கு, குறைந்தது ஐந்து அல்லது ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்னர் தமிழகத்திற்குள் குடியேறத்தொடங்கிய பார்ப்பனர்கள், தங்களின் சாதி முறையை தமிழர்களின் தலையில் கட்ட முற்பட்டனர். தொல்காப்பியன் என்ற பெயர்கொண்ட ஒரு பார்ப்பனரால் கி. மு. முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட, தற்போதும் வழக்கில் உள்ள முற்பட்ட தமிழ் இலக்கண நூலில், அறிவர் அல்லது “துறவி”கள் பற்றி அடிக்கடியும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், சமூகத்தின் வகுப்புகள் குறித்து அவர் விவரிக்கின்ற அத்தியாயத்தில், நூலாசிரியர் அறிவர் பற்றி எதுவும் குறிப்பிடுவதை விட்டுவிட்டு, புனித நூல் (பூனூல்) அணிந்த பார்ப்பனரை முதல் சாதியாக வைக்கிறார். வீரர்கள் என்னாது, ஏதோ சேர, சோழ பாண்டியன் என்று மூன்றே அரசர்கள் ஒரு சாதியாகிவிட முடியும் என்பது போல, மிகுந்த எச்சரிக்கையுடன், அரசர்கள் எனப் புனித சாதியாகச் சொல்கிறார்; வணிகத்தைக் கொண்டு வாழ்ந்த அனைவரையும் மூன்றாவது சாதியாகச் சொல்கிறார். அரசர்களோ அல்லது வணிகர்களோ புனித நூல் அணிந்திருந்தார்களா என்று அவர் சொல்லவில்லை. பிறகு வேளாளர்களை மட்டும் தனிமைப்படுத்தி, நிலத்தை உழுவது தவிர அவர்களுக்கு ஒரு தொழிலுமில்லை என்கிறார். இங்கே அவர் வேளாளர்களை சூத்திரர் என்று சொல்லவில்லை, ஆனால், சாதாரண வேளாளர்களை சூத்திரர்களாகக் கருதவேண்டும் என்றும், அரசர்களாக இருந்த வேளாளர்களை க்ஷத்ரியர்களாக கெளரவிக்கவேண்டும் என்றும் மறைமுகமாக, உட்கிடக்கையாகச் சுட்டுகிறார். இதுதான் தங்களின் சாதி அமைப்புக்குள் தமிழர்களைக் கொண்டுவர பார்ப்பனர்கள் செய்த முதல் முயற்சி. ஆனால், தமிழகத்தில் க்ஷத்ரியர், வைசியர் மற்றும் சூத்திர சாதிகள் இல்லாததனால் அவர்களது முயற்சி வெற்றிபெற சாத்தியமில்லாது போயிற்று. மேலும், தன்னை க்ஷத்ரியன் என்று சொல்லிக்கொள்ளுகின்ற ஒரு படையாச்சி வீட்டிலோ அல்லது வைசியன் எனுந் தகுதிக்குரிய ஒரு வணிகர் வீட்டிலோ, இன்றைக்கு வரையிலும் வேளாளர்கள் உணவருந்தவோ அல்லது தண்ணீர் குடிக்கவோ மாட்டார்கள். (The Tamils, Eighteen Hundred Years Ago, V.Kanakasabhai, Pub: The South India Saiva Siddhanta Works Publishing Society, Tinnevelly, Ltd. 2nd edn. Sep., 1956, p.116.)

அதாவது சாதியைக் கொண்டு வந்தவன் பார்ப்பான் என்று சொல்லி அவனைக் கண்டிப்போம்; ஆனால் வேளாளர்களாகிய நாங்கள் ஒரு படையாச்சி வீட்டிலோ, அல்லது செட்டியார் வீட்டிலோ தண்ணீர் குடிக்கவோ உணவருந்தவோ மாட்டோம் என்பதும், தொல்காப்பியன் சொல்லாத, ‘அரசர்களாக இருந்த வேளாளர்களை க்ஷத்ரியர்களாகக் கௌரவிக்க வேண்டும்' என்பதும் இவரது நிலைப்பாடு.

மற்றொருவர் சொல்வதாவது:

“ஆரியர் வருவதற்கு முன்னமே தமிழர்க்குத் தொழில் வேற்றுமை பற்றி இயற்கையாயிருந்த அந்தணர், அரசர், வணிகர், பதினெண்டொழிலாளர்* என்னும் மக்கட் பாகுபாடே, மநுவினாலோ அல்லதவன் வழிவந்த வேறெவராலோ நாற்சாதியாக மாற்றப்பட்டு இருக்குவேதப் பத்தாம் மண்டிலத்தின்கண் நுழைக்கப்படலானமை தெற்றெனப் புலனாகின்றது. இனி இருக்குவேதப் புருட சூத்தத்தில், தொழிலான் மட்டுமின்றிப் பிறப்பினாலும் பார்ப்பனர்க்கு ஏனையெல்லாச் சாதியாரினும் பார்க்க மிக்கதோர் உயர்வு சொல்லப்பட்டிருத்தலை உற்று நோக்குங்கால், அப்பதிகத்தைப் படைத்து அதனுள் நுழைத்தவர் ஒரு திராவிட ஆரியப் பார்ப்பனரே யாவரென்பது துணியப்படுகின்றது. ஏனென்றால் இஞ்ஞான்றும் ஆரியப் பழக்க வழக்கங்கள் மிகுந்துள்ள வடநாட்டில் உறையும் பார்ப்பனர்கள் ஊன் உணவு கொள்பவராய் இருத்தலின், அவர் தம்மினத்தவர் அல்லாத மற்றை வகுப்பினரை இழிவுபடுத்தக் காணோம். அவர் ஒரே கூடத்திற் றம்மவர் அல்லாத மற்றை இனத்தவர் காண இருந்து அவர் காண உணவு கொள்ளுதலையும் யாம் வடநாடு சென்ற ஞான்று நேரே கண்டிருக்கின்றேம். மற்றுத் திராவிட ஆரியக் கலப்பிற் றோன்றிய பார்ப்பனரோ, ஏனை வகுப்பினர் அனைவரையும் ‘அடிமைகள்' ‘வைப்பாட்டி மக்கள்' எனப் பொருள்படுஞ் ‘சூத்திரர்' என்னும் இழிசொல்லால் இழித்துப் பேசி, அவரைத் தொடுதலும் ஆகாது, தாம் உணவருந்துங்கால் அவர் தம்மைக் காண்டலும் ஆகாது என ஒரு பெருங்கட்டுப்பாடு வகுத்துக் கொண்டு தாமே இம்மாநிலத் தேவர்கள் எனத் தம்மைத் தாமே உயர்த்துச் சொல்லித் தமக்குப் பிறப்பினாலேயே பெரும் பெருமை தேடுபவரா யிருக்கின்றனர். (பக்.52, தமிழர் மதம், மறைமலையடிகள், பூம்புகார் பதிப்பகம், சென்னை 108, முதல் பதிப்பு 2003.)

இவரைப் பாருங்கள், பார்ப்பனர்கள், வேளாளர்களை சூத்திரர் என்று சொல்லிவிட்டனர் என்பதனால் தமிழர் அனைவரையும் சூத்திரர் என்று சொல்லிவிட்டதாக விஷயத்தை மாற்றிவிட்டார்.

தவிரவும், சாதிகளை நாங்களே தோற்றுவித்தோம் என்று இவர் அளிக்கும் வாக்குமூலம் இதோ:

"தமிழகத்தில் முதன்முதல் உழவுத் தொழிலைக் காணும் நுண்ணறிவும், அதனாற் கொலைபுலை தவிர்த்த அறவொழுக்கமும், அதனாற் பெற்ற நாகரீகமும் உடைய தமிழ் மக்கள் எல்லாரினுஞ் சிறந்து விளங்கித் தம்மினின்று அந்தணர், அரசர் எனும் உயர்ந்த வகுப்பினர் இருவரையும் அமைத்துவைத்து, அறவொழுக்கத்தின் வழுவிய ஏனைத் தமிழ் மக்களெல்லாந் தமக்கும் தமதுழவுக்கும் உதவியாம்படி பதிணென் டொழில்களைச் செய்யுமாறு அவர்களை அவற்றின் கண் நிலைபெறுத்தித் தமிழ் நாகரீகத்தைப் பண்டு தொட்டு வளர்த்துவரலாயினர்." (வேளாளர் நாகரிகம்)

இவ்வாறு சாதியை நாங்களே உருவாக்கினோம் என்கிற இவர், ‘அறவொழுக்கத்தில் தாழ்ந்தவர்'களாகச் சொல்லும் மற்ற பதிணென் சாதிகளை பலபட்டடைச் சாதிகள் என்கிறார். அவர்கள் கைக்கோளர், தச்சர், கொல்லர், கம்மாளர், தட்டார், சுன்னார், செக்கார், மருத்துவர், குயவர், வண்ணார், துன்னர், ஓவியர், பாணர், கூத்தர், நாவிதர், சங்கறுப்பர், பாகர், பறையர் ஆகியோராவர். இதில் வேடிக்கை என்னவெனில், இவர் கூறும் ‘பலபட்டடை சாதிகளான' பஞ்ச கம்மாளர்களும், வேட்கோவர் எனப்பட்ட குயவர்களும், மறையவர்கள் எனப்பட்ட பறையர்களும், மருத்துவ குலமான நாவிதர்களும் இன்னும் சில சாதிகளும், தமிழ்ச் சமூகத்தின் ஏடறிந்த வரலாற்றுக் காலமான சங்க காலத்தில் வேளாளர்களை விட உயர்ந்த சாதிகளாக இருந்தன என்பதுதான். அப்படி வேளாளர்களை விட உயர்ந்த சாதிகளாக இருந்தவர்களை, ஒரே அடியில் வேளாளர்களுக்குக் கீழாகக் கொண்டுவந்து தமது ஆதிக்கத்தின் நிலைநிறுத்திக் கொள்வதுதான் இவர்களின் நோக்கம். இதுதான் வேளாளர் அரசியல்.# இந்தக் கருத்தியல்தான் திராவிட இயக்கத்தின் சித்தாந்த அடிப்படையே தவிர சாதி ஒழிப்பல்ல என்பது வெளிப்படை.

மேம்போக்காக இது இவர்களின் தனிப்பட்ட கருத்தேயன்றி ஒட்டுமொத்த திராவிட இயக்கத்தின் கருத்தியலல்ல என்று சொல்ல விரும்புபவர்கள் நடைமுறை வரலாற்றைக் கண்ணுறுமாறு வேண்டுகிறேன். திராவிட இயக்கம் தனது உயிர் மூச்சான கொள்கைகளில் ஒன்றாகச் சொன்னதுதான் ‘வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்'. தமிழ்நாட்டில் மக்கள்தொகை அடிப்படையில் காணும் போது, இரண்டு சாதிகள் மட்டுமே முதன்மையான பங்கு வகிப்பவை. அதாவது வன்னியர்கள் எனப்படும் பள்ளி குலத்தவர்களும், பறையர்களும்தான். 1891 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள்தொகையில் வன்னியர்களின் தொகை கிட்டத்தட்ட 17 விழுக்காடும், அவர்களுக்கு அடுத்தபடியாக பறையர் சமூகத்தவரின் தொகை 16 விழுக்காடுமாகும். வேறெந்த சாதிகளும் இவ்வளவு அதிக விழுக்காடு கொண்டவையல்ல. ஆனால், திராவிட இயக்கத்திலும், திராவிட முன்னேற்றக் கழகத்திலும், இவர்களின் அரசிலும் எந்த அளவுக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கடைப்பிடிக்கப்பட்டது? அரசு நிறுவனங்களில் இவர்களுக்கு உரிய விழுக்காடு கிடைக்கவிடாது பார்ப்பனர்கள் தடுத்துவிட்டனர் என்று குற்றஞ்சாட்டும் திராவிட இயக்கத்தவர்கள், தமது இயக்கத்திலும், கட்சியிலும் வன்னியர் மற்றும் பறையர் சமூகத்திற்குக் கொடுத்தது எவ்வளவு?

சாதி ஒழிப்பு என்கிற சிக்கலான பணிக்குள் கால் பதிக்காது வெறுமனே பராக்காக, பொழுதுபோக்காக கடவுள் மறுப்பு, மூட நம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரம் செய்வதன் அடிப்படையை மேற்படி மேற்கோள்கள் தெளிவுபடுத்தி இருக்கும். அல்லது நேரடியாகச் சொல்வதாயின் பார்ப்பனர் - வேளாளர் சாதி ஆதிக்கப் போட்டியும், வேளாள சாதி வெறியுமே சாதி ஒழிப்பு எனும் சிக்கலான பணிக்குள் கால் பதிக்காது இருப்பதன் காரணம்.

அதாவது, தாம் சூத்திரர்கள் என்பதனால், ஒட்டு மொத்தத் தமிழரையும் சூத்திரராக்கி, அவர்களுக்குத் தலைமை தாங்கி, அக்காலத்தில் இருந்த வெள்ளைக்கார, கிறித்தவ எஜமானர்களிடத்தில் தமக்கு உரிய இடத்தையும்/அங்கீகாரத்தையும் பெறுவதே வேளாளர்களின் இலட்சியமேயன்றி உண்மையான சாதி ஒழிப்பு அல்ல. அதனால்தான் திராவிட இயக்கப் பகுத்தறிவு, இந்துக் கடவுளையெல்லாம் பார்ப்பனக் கடவுளாகச் சித்தரித்து, அவற்றை மட்டும் இழித்தும் பழித்தும் பேசி, கிறித்தவ வெள்ளை எஜமானர்களை மனங்குளிரச் செய்து, தம்மின் நோக்கத்தை சாதித்துக்கொள்ள வேண்டியிருந்தது. எனவே ‘திராவிட இயக்கப் பகுத்தறிவு' இப்படி இருப்பதில் வியப்பொன்றுமில்லை.

புராண இதிகாச மறுப்பு: இவர்களின் பகுத்தறிவின் மற்றோர் அம்சம், இந்து மதப் புராணங்கள் இதிகாசங்கள் போன்றவற்றை முற்றிலும் கட்டுக்கதை, கற்பனை என்று போதிப்பது, இந்து மதத்தில் மட்டுமே இப்படிப்பட்ட புராண இதிகாசங்கள் இருப்பதாகச் சித்தரிப்பது. பார்ப்பனர்களே இத்தகையப் புரட்டுக்காரர்கள் என்று சொல்லவிழைவது. உண்மையில் உலகின் பழைமையான சமூகங்கள் பலவற்றிலும் இத்தகையப் புராண இதிகாசங்கள் உண்டு. அவற்றில் பல்வேறு பிற்சேர்க்கைகள், மிகைகள், பிறழ்வுகள் இருப்பினும் அவை வரலாற்று சம்பவங்களின் அடிப்படையைச் சித்தரிப்பவை. அண்மையில் கூட கிரீஸ் நாட்டில் ஒரு குகை கண்டுபிடிக்கப் பட்டது. ரோமுலஸ் - ரீவ்ஸ் வாழ்ந்த குகையாக அது இருக்கலாம் என அறிஞர்கள் கருதுகின்றனர். இந்த ரோமுலஸ் மற்றும் ரீவ்ஸ் ஆகியோருக்கு ஒரு ஓநாய் பாலூட்டி வளர்த்ததாகப் புராணக் கதைகள் கிரேக்கத்தில் உண்டு.

அதுபோலவே, மேலோட்டமாக, தங்களின் ‘அறிவியல்' பார்வையைக் காட்டிக்கொள்ளும் பொருட்டு, ‘மந்திரமா - தந்திரமா' போன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் இவர்கள், மேலை நாட்டு அறிஞர்கள் பலரும் தத்தம் புராண இதிகாசங்களுக்கு, வரலாற்று பூர்வ விளக்கம் கொடுப்பதை, அவற்றை தொல்பொருள், இன்னபிற ஆதாரங்களுடன் இணைத்து விளக்கமளிப்பதைக் கண்டுங்காணாது இருக்க முற்படுவர். அப்படி விளக்கம் சொல்லத் தொடங்கினால் இவர்களின் ‘கட்டுக்கதை' அம்பலமாகிவிடும். எடுத்துக்காட்டாக, தற்போது ராமன் தொடர்பான - ராவணன் தொடர்பான பிரச்சனை. ராமனை ஆரியனாகவும் ராவணனை திராவிடனாகவும் சித்தரித்து, ராமனுக்கு ராம்லீலா நடத்தப்படுவது போல ராவணனுக்கு ராவணலீலா நடத்துகின்றனர். ராமாயணம் கதை என்பதும் ராவணன் மட்டும் உண்மை என்பதும் அவர்களின் நிலைப்பாடு. தவிரவும் மேலை நாட்டு அறிஞர்கள் போல ஆய்வில் இறங்கினால் ராமன், ஆரியன் அல்லன் என்பதும், ராவணன், பார்ப்பனன் என்பதும் தெரியவரும். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு பார்ப்பனக் குடும்பத்தினர் ராவணனை தங்களின் முன்னோன் என்று சொல்லி அவனுக்குக் கோயில் வைத்திருந்ததையும், அதை சங் பரிவாரங்கள் கடுமையாக எதிர்த்ததையும் செய்தித் தாள்களின் வழியே அறிந்தோம். இத்தகைய வரலாற்று விவரங்கள் இவர்களின் பார்ப்பன எதிர்ப்பு அரசியலுடன் முரண்படும்; அத்தகைய சங்கடத்தைத் தவிர்த்து விடலாம் என்பதனால் புராணங்கள் பற்றி, இதிகாசங்கள் பற்றிய வரலாற்று ஆய்வுகளை அப்படியே நிராகரித்துவிடுவார்கள்.

இவ்வாறாக எப்போதுமே இரட்டை நிலை என்கிற முரணுக்குள் சிக்கி இருப்பதுதான் ‘திராவிட இயக்கப் பகுத்தறிவின்' வரம்பு.

அடிக்குறிப்புகள்:

$ தமிழ் இலக்கியங்களில் சொல்லாததையெல்லாம் சொல்லி ஆரிய - திராவிட இன வெறிப் பிரச்சாரம் செய்யப்பட்டதைத் தனது “சிலப்பதிகாரச் செய்திகள்” (அடியும் முடியும் (இலக்கியத்திற் கருத்துகள்), குமரன் பதிப்பகம், சென்னை. இரண்டாம் பதிப்பு 2001, பக்.219-224) எனும் கட்டுரையில் கைலாசபதி விரிவாக விளக்கியுள்ளது வருமாறு:

“தென்னாட்டவர் வடவாரியரை வென்றடிமை கொண்ட ஐதீகம் சிலப்பதிகாரத்திற் கூறப்படாதிருப்பினும் கடந்த முக்கால் நூற்றாண்டுக்குள் அத்தகைய ஒருகதை எப்படியாவது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் என்பதுறுதி. தமிழ்நாட்டிலே தோன்றிய இன இயக்கம் இத்தகைய ஐதீகங்கள் இன்றி ஒருநாள் உயிர் வாழ்ந்திருக்கமாட்டா.

கண்ணகிக்குக் கற்சிலை வடிக்க விரும்பிய செங்குட்டுவன் இமயத்திலிருந்து கல்லெடுத்துவந்தான் என்ற கதையை, அன்று நிகழ்ந்த ‘இனப்போராக'க் கொண்டு தமிழினத்தின் வரலாற்றுக் காப்பியமாகச் சிலப்பதிகாரத்தைப் பலர் போற்றி வருகின்றனர். .... சிலப்பதிகாரத்தை இன்றைய இன எழுச்சிக்கு ஏற்ற கருவியாகப் பயன்படுத்துவோர் கூற்றுக்குப் பின்வரும் உதாரணம் போதும், நூலிற் காணப்படுவதாகக் கூறும் செய்தியையும் தமது கருத்துரையையும் கலந்து கூறுகிறார் ஓர் எழுத்தாளர்:

“பத்தினிப் படிமத்துக்குக் கல்லெடுப்பது ஒன்றே நோக்கமெனின் சேரன் செங்குட்டுவன் படையெடுத்து வடநாடு நோக்கிச் செல்லவேண்டா; தன்னுடைய வடநாட்டு நண்பர்கள் வாயிலாக அந்தச் செயலை முடித்துக் கொள்ள இயலும். நூற்றுவர் கன்னர் என்கிற நட்பரசர் அவ்வாறே தெரிவிக்கிறார். அப்போது செங்குட்டுவன் தன் வடநாட்டுப் படையெடுப்புக்கு உரிய காரணத்தைச் சொல்லுகின்றான்: தமிழராற்றலைப் பழித்தவர்க்குப் ‘பாடங் கற்பிக்க'வே சினங்கொண்டு சேனை செல்வதாகச் சேரன் செப்புகின்றான் .... தமிழர்க்கு ஒரு பழிவரின் - அதனைத் துடைப்பது தமிழர் ஒவ்வொருவர் கடனுமாகும். ‘என்னையா இகழ்ந்தனர்? அவனைத்தான் பழித்தனர்' என்ற மனப்பான்மை ஒற்றுமையின்மையின் இன்னொரு சார்பாகும். பகைவர் கண்முன்னர்த் தமிழர் ஒன்றுபட்டுத் தோன்றுதல் வேண்டும். தமிழினத்துக்கு வந்த பழி ஒவ்வொரு தமிழனுக்கும் வந்த பழி. இங்ஙனம் எண்ணியவன் செங்குட்டுவன்.... ‘நான்' என்ற இனத் தொகுப்புணர்ச்சி காண்பது அருமையாக இருக்கிறது. சிலப்பதிகாரச் செங்குட்டுவன் நமக்கு வழிகாட்டுகிறான்.” (குருசாமி, ம.ரா.போ. சிலப்பதிகாரச் செய்தி, சென்னை 1955, பக் 100-102)

ஆசிரியர் ‘நமக்கு' என்பது யாரைக் குறிக்கிறது என்னும் கேள்வி எழுவது இயல்பே. தமிழகத்திலும் ஈழத்திலும் தமிழரசு விழைபவரின் குரல் ஏறத்தாழ இவ்வாறுதான் இருக்கும். இயக்கத்தின் மூலம் தமிழ் மக்களைத் தேர்தலுக்காகவோ அன்றி பிற காரணங்களுக்காகவோ ‘ஒன்றுபடுத்த' விரும்பும் அரசியல் சார்புடையோர் இவ்வாறுதான் பேசுவர்; முழங்குவர். இக்கண்ணோட்டத்தின் அடிப்படையிலேயே சிலப்பதிகாரத்தை ‘ஒற்றுமைக் காப்பியம்' என்றும் சிலர் வழங்குவர். மேலே காட்டிய மேற்கோளில் ‘தமிழர் ஒவ்வொருவர்' என்ற தொடரை ஆசிரியர் பயன்படுத்துவதும் வாதத்திற்குரியது. ஒவ்வொரு தமிழனுக்கும் வந்த பழி என்று செங்குட்டுவன் கருதினான் என்று எவ்வாறு நிரூபிப்பது? முடியுடை மூவேந்தரையும், மாசாத்துவான், மாநாய்கன் போன்ற நிதிக் கிழவரையும் பிரதம பாத்திரங்களாகக் கொண்டு, ‘பெரிய இடத்து' விஷயத்தைப் பேசுகிற புலவர் படைத்த “பெருமன்னன்” ‘ஒவ்வொரு தமிழனை'யும் கருத்திற்கொண்டான் என்பது காலமுரணாகும். ஆனால் இனம், மொழி என்றவற்றின் அடிப்படையில் தமிழரை ஒன்றுபடுத்த முனையும் இயக்கத்தினர் தமக்கு உறுதுணையாகச் சிலப்பதிகாரத்தைப் பிரச்சாரஞ் செய்யும் பொழுது இத்தகைய செய்திகளையே பிரசாரஞ் செய்ய வேண்டியவராகின்றனர்.

பொதுவாகத் தமிழர் ஒற்றுமையைப் பற்றி சிலர் கூறுவதைப் போலவே, “முடிகெழுவேந்தர் மூவர்க்கும் உரியது” என்ற பதிக அடி சேர, சோழ, பாண்டிய நாடுகள் மூன்றும் இணைந்து ஒற்றுமைப்பட்ட அகண்ட தமிழகத்தை இலட்சியமாக எடுத்துரைத்தது என்று மொழிவாரி ஆராய்ச்சிக் கருத்தைச் சிலம்பின் மூச்சாய்க் கொள்வாரும் உளர். இவர்கள் யாவரும் தற்காலப் பிரதேச அரசியற் கொள்கைகள் சிலவற்றின் வழிவரும் இன, மொழி இயக்கக் குரல்களையே ஒலிக்கின்றனர் என்று சொல்லல் பொருத்தமாகும். சிலப்பதிகாரம் ஒரு இன எழுச்சிக் காப்பியம் என்று கூறினால் அது இளங்கோ அடிகளுக்குப் பொருள்படுமோ? தெரியாது.

இது பற்றி தமிழறிஞர் சாமி. சிதம்பரனார் கூறியது மனங்கொளத்தக்கது:

“தமிழ் மன்னர்களுக்குள் அடிக்கடி போர் நடந்தது போலவே, சில சமயங்களில் தமிழ்நாட்டு மன்னர்களுக்கும் வடநாட்டு வேந்தர்களுக்கும் போர் நிகழ்ந்திருக்கின்றது. தமிழ்நாட்டு வேந்தர்களுக்குள் சண்டை நடக்கக் காரணம் என்னவோ, அக்காரணங்கள்தாம் வடநாட்டு மன்னர்களுக்கும் தமிழ்நாட்டு மன்னர்களுக்கும் சண்டை நடக்கக் காரணமாயிருந்தன. இச்சண்டைக்குக் காரணம், மொழியோ, மதமோ, பண்பாடோ அல்ல என்பது உறுதி. செங்குட்டுவனுக்கும் வடவேந்தர்களுக்கும் நடந்த போர் பண்பாட்டுப் போர் என்று சிலப்பதிகாரத்தில் ஓரிடத்திலும் காணப்படவில்லை. இவ்வுண்மைகளை மறப்பவர்கள் - அல்லது மறைப்பவர்கள்தான் சிலப்பதிகாரத்தை ஆரியர் - தமிழர் வேற்றுமைக்கு ஆதரவாகக் கொள்ளுவார்கள்.” (சிலப்பதிகாரத் தமிழகம், பக். 177-181)

சாமி. சிதம்பரனார் போன்ற சிலர் இளங்கோ எடுத்துரைத்த உண்மைகளை அறிய முயன்றபோதும், பெரும்பாலானோர் தமக்குகந்தவற்றையே சிலம்புச் செய்திகளாகக் கூறிவந்துள்ளனர்.

* வேளாளர் என்று வரவேண்டிய இடத்தில் அதை விடுத்து பதிணென் தொழிலாளர்களைப் புகுத்திவிட்டார் பாருங்கள்.

# இந்த வேளாளர் அரசியலின் தொடர்ச்சிதான் இன்றைக்கு தை மாதம் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்று சங்க இலக்கியச் சான்றுக்கு மாறாக, அறிவியலுக்கு மாறாக அறிவிக்க வைத்தது.

(நன்றி: மண்மொழி, வெளியீடு 22, 2008 மே-ஜூன், மண்மொழி வெளியீட்டகம், காந்தி நகர், மயிலம் - 604304, விழுப்புரம் மாவட்டம், தொலைபேசி: +91-4147-241256)

pravaahan@sishri.org

SISHRI Home