You are printing this article from South Indian Social History Research Institute's web site: www.sishri.org
To avoid copyright violations, please get permission from the author(s) before reproducing this article in any form
திருமகள் உற்பத்தி
எஸ். இராமச்சந்திரன்

மனித சமூகம் வேட்டையையும் உணவு சேகரிப்பையும் அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்த பண்பாட்டு நிலையினைப் பழங்கற்கருவிப் பயன்பாட்டுப் பண்பாட்டு நிலையெனத் தொல்லியலாளர்கள் வரையறுக்கின்றனர். அந்த நிலையிலேயே, குழுவினை வழிநடத்தும் ஆற்றலும் கூட்டு உற்பத்தியில் கிடைத்த பொருளை நியாயமாகப் பகுத்து வரையறுத்து வழங்கும் தலைமைப் பண்பும் உடைய ஒருவரைத் தலைவராக ஏற்று இயங்கும் வழக்கம் உருவாகிவிட்டது. கொற்றவையின் தோற்றம், வேட்டைச் சமூகத்தின் தலைமைப் பதவியையும் பூசாரிப் பணியையும் வகித்த பெண்ணின் ஆற்றலை அடிப்படையாகக் கொண்டதே. கொற்றவை என்ற பெண்பாற் பெயரே, கொற்றவன் என்ற ஆண்பாற் பெயரைவிட உணர்வுபூர்வமாகப் பதிவு பெற்றிருப்பது கவனத்துக்குரியது. பால்வரை தெய்வம் என்று தொல்காப்பியத்திலும் பகவதி என வடமொழிப் புராணங்களிலும் வழங்கப்படுகிற பெண் தெய்வத்தின் தோற்றம், கூட்டு உற்பத்தியைப் பகுத்து - பாகம் செய்து - வழங்கும் பணியை அடிப்படையாகக் கொண்டதே.

பால்வரை தெய்வம் என்பது உணவையோ, உற்பத்தி செய்யப்பட்ட செல்வத்தையோ பகிர்ந்தளிப்பது என்ற பொருள் விளக்கத்தினை, “தந்து நிரை பாதீடு உண்டாட்டுக் கொடை” என்ற தொல்காப்பிய வெட்சித் திணை நூற்பாக் குறிப்புடன் ஒப்பிட்டால் இந்தப் பின்புலம் தெளிவாகும். (Meira என்ற கிரேக்கச் சொல்லுக்குத் தொடக்க காலத்தில் ‘பங்கிடுதல்' என்பதே பொருள் என்றும், காலப்போக்கில் Meira என்பது விதியின் தேவதையாகப் பரிணமித்தது என்பதையும் கார்த்திகேசு சிவத்தம்பி சுட்டிக் காட்டியுள்ளார்.1)

பால்வரை தெய்வம் என்ற கருத்தோட்டமும் பக்தி என்ற கண்ணோட்டமும் சமூக அமைப்பின் மாற்றத்திற்கேற்ப உருத்தெரியாமல் மாறிப்போயின. பால் என்பது ஆண்பால், பெண்பால், மேற்பால், கீழ்ப்பால், நாற்பால் (நால் வர்ணம்) என்பன போன்று இயற்கையாக - விதிப்படி - பகுக்கப்பட்ட பிரிவினை என்ற கருத்து வேரூன்றி, ஊழ்வினை - நல்வினை, தீவினைக் - கேற்பப் பிறக்கும்போதே கிட்டுவது பால் என்ற கோட்பாடு உருவாயிற்று.2 பாகம், பாக்யம் என்ற சமஸ்கிருதச் சொற்களும் பால் என்ற கருத்தோட்டத்துடன் தொடர்பு உடையவையே. அந்த அடிப்படையில் நோக்கினால் பகவதி என்ற கருத்தோட்டமே பாக்யலக்ஷ்மி என்ற பெயர் உருவா வதற்கு மூலமாக அமைந்த கருத்தோட்டம் எனத் தெரிகிறது. சிற்பக்கலை மரபில் பகவதியை, அதாவது கொற்றவையைச் சங்கு சக்கரம் ஏந்திய விஷ்ணு துர்க்கையாகச்3 சித்திரிக்கும் மரபு, திருமால் வழிபாட்டு மரபாகிய பாகவத மரபேயாகும்.

சங்கு என்பது நீர்வாழ் உயிரினம். நவநிதிகளும் மண்ணுக்கடியிலிருந்து நீர் சூழ்ந்த நிலையில்தான் உருவாகின்றன. எனவே சங்கநிதி, முத்துச்சிப்பி முதலியன நீர்த் தெய்வமாகிய நாராயணனுடன் தொடர்புபடுத்தப்படுவது இயல்பே. அவ்வகையிலும் நாராயணனின் செல்வ வளம் கொற்றவைக்கு ஏற்றப்பட்டிருக்கலாம். சுருக்கமாகச் சொல்வதானால் அரசமைப்புகள் வேரூன்றிவிட்ட நாகரிக நிலையில் கொற்றவனின் அம்சங்கள் பலவற்றை ஏற்று, இரண்டாம் நிலையோடு அமைதியடைய நேர்ந்த பழங்கற்காலக் கொற்றவையின் பிற்கால நிலை இது என முடிவு செய்யலாம்.

பழங்கற் கருவிப் பயன்பாட்டுப் பண்பாட்டு நிலையையடுத்து வந்த புதிய கற்கருவிப் பயன்பாட்டுப் பண்பாட்டு நிலையில் நிலத்தைக் கிண்டிக் கிளறும் களைக்கொட்டு விவசாய முயற்சிகள் தொடங்கின. அந்நிலையில்தான் படைப்பு அல்லது செல்வம் என்பது குழுத் தலைவனின் உடைமை என்ற கருத்து வலிமையடைகிறது. விவசாய முயற்சிகளை நெறிப்படுத்துதல், சாண உரத்துக்கும் பொதி சுமப்பதற்கும் பயன்படத்தக்க வகையில் காளைகளை வசப்படுத்தி வீட்டு விலங்குகளாக்குதல் போன்ற பணிகளிலும் வேட்டையிலும் பிற குழுக்களுடனான பூசல்களிலும் தலைமை வகித்துத் தனது குழுவை வழிநடத்திய தலைவன் இந்திரன் எனப்பட்டான். அவனது ஆற்றலே திருமகளாகக் கருதப்பட்டது. வீரலக்ஷ்மி என்ற பிற்கால உருவகத்தின் மூலத் தோற்றம் இதுவே. இந்த ஆற்றல், தலைவனின் திரண்ட தோள்களிலும் பரந்த மார்பிலும் அடங்கியிருப்பதாகக் கருதப்பட்டது. “செருமிக்குப் புகலும் திரு ஆர் மார்பன்” எனச் செங்கண் மாத்து நன்னள் சேய்நன்னன் மலைபடுகடாத்தில் (வரி. 356) புகழப்படுகின்றான். போர் ஆற்றலைப் பறைசாற்றும் திருமகள் உறைகின்ற மார்புடையவன் என்பது இதன் பொருளாகும். திருமறு மார்பன் அல்லது ஸ்ரீவத்ஸன் எனத் திருமாலைக் குறிப்பிடுவது இப்பொருளிலேயே. ஆனால் தொடக்கத்தில் இது இந்திரனுக்குரிய ஆற்றலாக, சக்தியாகக் கருதப்பட்டது. இந்திரா என்பது திருமகளின் பெயர்கள் பலவற்றுள் முதன்மையானது. லக்ம, லக்ஷ்ம என்ற சொற்களுக்குக் குறியீடு என்பதே பொருள். தமிழில் இலக்கு என்பது இப்பொருளில் வழங்குகிறது. கருவைச் சுமக்கும் வயிறும் பாலூட்டும் மார்புகளுமே பெண்மையின் குறியீடுகளாகும். ஆண்மையின் அடையாளமாகிய லிங்கம் போன்றதே பெண்மையின் அடையாளமாகிய ‘லக்ம' என்பதும் வீர்யம் என்பது புறத்திணையில் தலைவனின் போர் ஆற்றலையும் அகத்திணையில் அவனது புணர்ச்சியாற்றலையும் குறித்தது. எனவே வீரலக்ஷ்மியின் மறுபக்கமே சந்தான லக்ஷ்மி என உருவகிக்கப்பட்டது என்று கொள்வதில் தவறில்லை.

படைப்பாற்றல் உடைய தெய்வங்களையெல்லாம் செல்வன் எனக் குறிப்பிடுவதுண்டு. ஆனால் திருமகள் உறையும் செல்வன் என்று சிறப்பாகக் குறிப்பிடப்படுபவன் இந்திரனே. “புள்ளணி நீள் கொடிச் செல்வன்” எனத் திருமாலும், “மூவெயில் முருக்கிய முரண்மிகு செல்வன்” எனச் சிவபெருமானும் குறிப்பிடப்பட்டிருப்பினும், “யானை எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வன்” என்று இந்திரன் மட்டுமே குறிப்பிடப்படுகிறான். (திருமுருகாற்றுப்படை, வரி. 148-159.) “யானையின் புறக் கழுத்திலே ஏறிய திருமகள் விளங்குகின்ற இந்திரனும்” என்று நச்சினார்க்கினியர் எழுதியுள்ள உரை, ஐயத்துக்கு இடமற்ற வகையில் திருமகள் இந்திரனுக்குரியவள் என்பதை உணர்த்திவிடுகிறது.4

இந்திரனின் தோளிலோ மார்பிலோ லக்ம (திருமறு) இடம்பெற்றிருந்த நிலை, உலகைக் காக்கின்ற வேந்தனாக மாயோன் உருவானபிறகு மாற்றமடைந்துவிடுகிறது. கெளதம ரிஷியின் சாபத்தின் காரணமாக உடல் முழுதும் பெண்மையின் அடையாளம் பெற்றவன் என்ற கதை உருவாகிவிடுகிறது. “ஐந்தவித்தான் ஆற்றல் அகல் விசும்புளார் கோமான் இந்திரனே சாலும் கரி” எனத் திருக்குறள் நீத்தார் பெருமை அதிகாரத்தில் குறிப்பிட நேர்வது இந்திர வழிபாட்டில் மட்டுமின்றி, சமூக அமைப்பிலும் நேர்ந்த பெரும் மாற்றங்களின் விளைவே.

புதிய கற்கருவிப் பயன்பாட்டுப் பண்பாட்டு நிலையில் நிலம் உடைமைப் பொருளாக மாற்றமடையவில்லை. எனவே, பயிர் வளத்துக்குக் காரணமான மழை மட்டுமே ‘திரு' என அடை யாளப்படுத்தப்பட்டது. “திருமழை தலைஇய இருள்நிற விசும்பு” என்றே மலைபடுகடாம் தொடங்குகிறது. “செல்வத்தையுண்டாக்கும் மழையைப் பெய்த இருண்ட நிறத்தையுடைய மேகத்தினது ஆகாயத்திடத்திலே” என நச்சினார்க்கினியர் உரை கூறியுள்ளார்.5 இக்கருத்தோட்டமே, தான்யலக்ஷ்மி என்ற பிற்கால உருவகத்திற்கு மூலமாகும். இடப்பெயர்ச்சி விவசாய வாழ்நிலையிலிருந்து சமூக அமைப்பு முன்னேறிய பின்னர், நிலம் உடைமைப் பொருளாக மாறுகிறது. அத்தகைய நிலையில் மன்னனான திருமாலின் மனைவியராக நிலமகளையும், திருமகளையும் குறிப்பிடுகிற வழக்கம் உருவாகிறது.

இந்திரனுக்கு மாற்றாக சந்திர குலத்தை - அல்லது சந்திர குலத்தின் உட்பிரிவாகச் சேர்க்கப்பட்ட யது குலத்தைச் - சேர்ந்த கண்ணனும், சூரிய குலத்தைச் சேர்ந்த இராமனும் உருவெடுத்துத் திருமாலின் அவதாரங்களாகச் சேர்க்கப்பட்டுவிட்ட நிலையில் திருமகள் திருமாலின் மனைவியாக, முழுமையான உடைமையாகச் சித்திரிக்கப்பட்டது இயல்பே. ஆயினும், இம்மாற்றத்துக்கு முதன்மையான உந்து சக்தியாக விளங்கியது வணிக வர்க்கத்தின் உருவாக்கமாகும். பல்வேறு நிலப்பகுதிகளில் கிடைக்கும் உலோக மூலதனங்களைப் பரிவர்த்தனை செய்வதையே முதன்மையான பணியாக மேற்கொண்டிருந்த வணிக வர்க்கம் ஒன்று சமூக - அரசியல் களங்களில் அறிமுகமானபோது குபேரன் என்ற தெய்வமே ‘ஸ்ரீ' அதாவது திருமகளின் உடைமையாளன் எனப் பொருள்படும் ஸ்ரேஷ்டி (செட்டி) எனப் பெயர் பெறுகிறது. குபேரனின் மனைவியாகப் பெளத்த நூல்களில் குறிப்பிடப்படும் ஹாரிதி என்ற பெண் தெய்வப் பெயர், ‘பொன்' எனப் பொருள்படும் ‘ஹரித' என்ற சொல்லுடன் தொடர்புடையதாகும்.6 ‘தனலக்ஷ்மி' என்ற உருவகத்துக்கு மூலமான ‘ஹாரிதி' என்ற கருத்தோட்டம், கால வளர்ச்சியில் குபேரனின் தங்கையாக்கப்பட்டு, ‘ஹரிணி' என்ற பெயரில் திருமாலின் மனைவியாக்கப்பட்டுத் திருமகளின் ஓர் அம்சமாக்கப்படுகிறது. ஹாரிதி என்ற பெயர் ‘வரு முலை ஆரித்தி' என்ற சங்க காலப் பெண்பாற் புலவர் பெயர் போன்ற வடிவங்களில் மட்டும் எஞ்சி நிற்கிறது.

அடிக்குறிப்புகள்:

1. பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் நாடகம், குமரன் பதிப்பகம், வடபழனி, சென்னை.

2. “பால்தர வந்த பழவிறல்தாயம்” - புறம் 75:2; “வாழி ஏற்புணர்ந்த பாலே” - புறம் 176:8, “உயர்ந்த பாலே” - புறம் 236:12; “பாலறிமரபின் பொருநர்” - தொல்.பொருள். புறத்திணை 16; “ஒன்றியுயர்ந்த பாலது ஆணையின் ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப” - தொல். பொருள். களவியல் 2.

3. “மாலவற் கிளங்கிளை” - சிலப்பதிகாரம், வேட்டுவரி:68.
பகவதி என்ற பெயரின் பின்னொட்டாக இடம்பெறுகிற ‘வதி' என்ற சொல், வதிதல் (உறைதல்) என்ற பொருளின் அடிப்படையில் தோன்றிய திராவிடச் சொல்லாக இருக்கலாம்.

4. பக். 56, பத்துப்பாட்டு முலமும் நச்சினார்க்கினியர் உரையும், உ.வே. சா. நூலகப் பதிப்பு, 1974.

5. பக். 604, பத்துப்பாட்டு முலமும் நச்சினார்க்கினியர் உரையும், உ.வே. சா. நூலகப் பதிப்பு, 1974.

6. ‘ஹரித' என்ற சொல்லின் நேர்ப்பொருள் ‘மஞ்சள் நிற உலோகம்' என்பதாகும். இது தமிழில் ‘கிளிச்சிறை' என்ற பெயரில் வழங்கிற்றென்றும், கொங்கு நாட்டுத் தங்கம் ‘கிளிச்சிறை'த் தங்கமே என்றும் கருதப்படுகின்றன. ஹரித என்ற சொல் ஜர்தா, ஜர்த், கர்த், கல்த் என்றெல்லாம் திரிந்து கோல்டு (Gold) என்ற வடிவில் ஆங்கிலத்தில் வழங்குகின்றதென்று ராகுல சாங்கிருத்யாயன் ‘ரிக்வேத கால ஆரியர்கள்' என்ற நூலில் விளக்கியுள்ளார்.

(நன்றி: தமிழினி, ஏப்ரல் 2009.)

sr@sishri.org



SISHRI Home