You are printing this article from South Indian Social History Research Institute's web site: www.sishri.org
To avoid copyright violations, please get permission from the author(s) before reproducing this article in any form
மாதொரு பாகரின் ஆதிமூலம்
எஸ். இராமச்சந்திரன்

அர்த்த நாரீஸ்வரர் என்றும், பெண்ணமருந் திருமேனி என்றும், ஏழை பங்காளன் என்றும் கற்பனை நயத்துடன் வழங்கப்படுகிற மாதொரு பாகர் வடிவம் முதன்மையான சிவ மூர்த்தங்களுள் ஒன்றாகும். அம்மையப்பர் என்ற கருத்தோட்டமும் லிங்க - யோனி அல்லது லிங்க - ஆவுடை1 வடிவமும் சிவநெறியின் அடிப்படையான கூறுகளாக அங்கீகரிக்கப்பட்டுவிட்டமையால் மாதொருபாகர் என்பது சிவ நெறியோடு இணைந்து தோன்றியதாகவே கருதப்பட்டு வருகிறது. ஆனால் மிகப் பழமையான தமிழ் இலக்கிய - இலக்கணக் குறிப்புகளைப் பரிசீலிக்கும்போது, வேறொரு சித்திரமே தோன்றுகிறது. எடுத்துக்காட்டாக, ‘கண்ணி கார்நறுங்கொன்றை' எனத் தொடங்கும் புறநானூற்றுக் கடவுள் வாழ்த்துப் பாடலில்,

பெண்ணுரு ஒரு திறனாகின்று அவ்வுருத்
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்


என்ற வர்ணனை இடம் பெற்றுள்ளது. “தேவியைத் தன் உடலின் ஒரு பகுதியில் இடம்பெறச் செய்வது இறைவனின் இயல்பு; அவ்வாறின்றித் தன் உடலுக்குள் மறைத்து வைத்தலும் உண்டு” என்பது இதன் பொருள். சிவபிரான், பெண்ணுருவைத் தன்னுடலினுள் மறைத்து வைப்பது என்பது, ‘தேறு நீர் சடைக்கரந்து' எனக் கலித்தொகைக் கடவுள் வாழ்த்துப் பாடலிலும், ‘கங்கை வார் சடைக்கரந்தார்' என அப்பர் தேவாரத்திலும் இடம்பெறுகிற கங்காதரமூர்த்தி வடிவத்துடன் மட்டுமே பொருந்துவதாகும். மேலும் சிவபிரானின் தேவிக்குரிய பெயர்களான பார்வதி, மலைமகள், கிரிஜா போன்றவை கங்கைக்கும் உரியவை. எனவே கங்கை நதியை - கங்கை என்பது நதிகளுக்குரிய பொதுப் பெயரெனக் கொண்டால், நதியை - தன் உடலில் ஐக்கியப்படுத்திக் கொள்ளும் வருணன் என்ற வேத கால இறைவனே உண்மையான மாதொரு பாகன் என நாம் ஊகித்துப் புரிந்துகொள்ள முடிகிறது. நம் ஊகம் சரியானதுதானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்குச் சில பழமையான குறிப்புகளை மறுபரிசீலனை செய்வது தேவையாகிறது.

நதிகளுக்கிடையே வருணன்

அதர்வண வேதம் முதல் மண்டலத்தின் இறுதி சுலோகத்தில் “நதிகளைப் போற்றுகிறோம்; நதிகள் தமது கருவில் அக்கினியைச் சுமக்கின்றன; நதிகளுக்கிடையே வருணன் குனிந்த பார்வையுடன் செல்கிறான்; மனிதர்களின் வாய்மை, பொய்மை ஆகியவற்றைக் கண்காணித்துக் கொண்டே செல்லும் வருணனைப் போற்றுகிறோம்” என்ற துதி இடம்பெற்றுள்ளது.2 நதிகள் பெண்கள்; அவை ஆடவர்களால் ஆளப்படுபவை; அவை சுயமாக இயங்கும் ஆற்றல் அற்றவை; ‘ரிதம்' என்ற பிரபஞ்ச ஒழுங்கின் தலைவனான வருணன் நதிகள் செல்ல வேண்டிய பாதைகளை3 வகுத்து, உரிய பருவங்களில் உரிய நெறிகளில் அவை இயங்குமாறு செய்கிறான். மலைகளிலிருந்து சமவெளிகளை நோக்கியும் இறுதியாக ஆழிக்குள்ளும் சென்று சேரும்வண்ணம் நதிகளைக் கடவுகின்ற கடவுள் வருணனே என்ற கருத்து, உருவக வடிவில் மேற்குறித்த சுலோகத்தில் இடம்பெற்றுள்ளது. பகல் நேரத்தில் ஞாயிறு என்ற கண்ணின் மூலமும், இரவில் உடுக்கணங்கள் என்ற ஒற்றர்கள் மூலமும் வருணன் உலக மாந்தர்களின் பாவ புண்ணியங்களைக் கண்காணித்து வருகிறான் என்ற வர்ணனை வேதப்பாக்களில் பல இடங்களில் இடம்பெற்றுள்ளது. எனவே உலகத்து உயிர்களையும், கோள்களையும் ஆற்றுப்படுத்துகிற ஆற்றலின் வடிவமான வருணனின் ஆளுமைக்குக் கட்டுப்பட்டு அவனுடைய உடலின் இடப்பகுதியில் நதிகள் இடம்பெற்றிருக்கின்றன என்ற படிமம், அதர்வண வேதச் சிந்தனை மரபின் தொடர்ச்சியே. அதாவது இடம் என்பது தன்னளவில் இயக்கமற்றது, வலம் என்பதே வலிமை; இயக்குகிற ஆற்றல்; ஆறு (வழி, பாதை) என்பது வலவனான் வகுக்கப்படுவது. ஆற்றின் - அறத்தின் - நெறியில் உயிர்களைச் செலுத்துபவனும் அவ்வலவனே.4

மேலே எடுத்துக்கூறப்பட்ட அதர்வண வேத சுலோகத்தில் “நதிகள் தமது கருவில் அக்கினியைச் சுமக்கின்றன” என்ற வர்ணனை இடம் பெற்றுள்ளது. வருணன் மகன் அக்கினி என்பது பாரசீக சமயமான ஜொராஸ்ட்ரிய சமயத்திலும் வலியுறுத்தப்பட்டுள்ள, வழிபாட்டுணர்வு சார்ந்த ஒரு பார்வையாகும்.5 முருகனுக்கு வழங்குகிற ‘காங்கேயன்' என்ற பெயர், அவன் கங்கையின் மகன் என்ற பொருளுடையதே. “ஆல் கெழு கடவுட்புதல்வ மால்வரை மலைமகள் மகனே” எனத் திருமுருகாற்றுப்படை முருகனை முன்னிலைப்படுத்தி விளிக்கிறது. ஆல், ஆலம் என்ற சொற்கள் நீரெனப் பொருள்படும். எனவே வருணனுக்கும் கங்கைக்கும் பிறந்தவன் முருகன் என்பது, முருக வழிபாட்டுப் பரிணாம வளர்ச்சியின் தோற்றுவாய் நிலையினைத் துலக்க முயன்றால் தெரியவருகிற உண்மையாகும். “ஐவருள் (பஞ்ச பூதங்களுள்) ஒருவனான அக்கினி தேவன் தன் கையில் ஏற்றுக்கொண்ட, கார்த்திகைப் பெண்டிர் அறுவரால் பெறப்பட்ட, கங்கையாற்றின் சரவணப் பொய்கையில் அமர்ந்த குழந்தை” என்ற திருமுருகாற்றுப்படை வர்ணனை (“ஐவருள் ஒருவன் அங்கையேற்ப அறுவர்ப் பயந்த ஆறமர் செல்வன்”) இப்பரிணாம வளர்ச்சியின் பிற்கால வளர்நிலையாகும். முருகன், நெருப்பின் ஆற்றலைத் தன்வசம் கொண்ட போர்க்கடவுள் என்பது இலக்கியங்களிலும் சிற்பங்களிலும் தெளிவுறச் சித்திரிக்கப்பட்டுள்ளது. முருகனை ‘நதிபுத்திரன்' எனப் பிற்காலக் கவிஞரான அருணகிரிநாதர் தமது கந்தரனுபூதியில் (“நதி புத்திர ஞான சிகாதிப அத் திதி புத்திரர் வீறடு சேவகனே”) குறிப்பிடுகிறார் எனில், அர்த்த நாரீஸ்வரரை “நம் கடம்பனைப் பெற்றவள் பங்கினன்” என அப்பர் பெருமான் தமது தென்கடம்பைப் பதிகத்தில் குறிப்பிடுகிறார். பக்தி இலக்கியக் காலகட்டத்தில் வருணனின் அடிப்படை இயல்புகள் பல, சிவபெருமானால் ஈர்த்துத் தன்மயமாக்கிக் கொள்ளப்பட்டன. அந்நிலையில்தான் சிவன் கங்காதரராக உருவெடுக்கிறார். கி.பி. 7ஆம் நூற்றாண்டில் தமிழகத்தையாண்ட மகேந்திர பல்லவன், திருச்சிராப்பள்ளியில் தான் எடுப்பித்த குடைவரையில் கங்காதர சிவன் உருவத்தைக் கற்பாறையில் புடைப்புச் சிற்பமாகச் செதுக்குவித்தான். மட்டுமின்றி, அச்சிற்பம் குறித்த சமஸ்கிருதக் கல்வெட்டொன்றையும் பொறிக்கச் செய்தான். நதிப்பிரியனாகிய சிவன், காவிரி நங்கைமீதும் தனது கவனத்தைச் செலுத்திவிடக்கூடும் என்பதால் கிரி கன்னிகையாகிய கங்கை, சிவனுடைய சடையிலிருந்து கொண்டு, காவிரி பல்லவனுக்குரியவள் என்று சிவனுக்கு நினைவூட்டிக் கொண்டிருப்பதாக அந்த சமஸ்கிருத சுலோகம் குறிப்பிடுகிறது.

அரசர்கள் நதிகளின் கணவராகத் தம்மைக் குறிப்பிட்டுக் கொள்வது புதுமையானதன்று. சிலப்பதிகாரம் கானல்வரியில், “திங்கள் மாலை வெண்குடையான் சென்னி செங்கோலது வோச்சிக் கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி” என்றும், “கருங்கயற்கண் விழித்தொல்கி நடந்த வெல்லாம் நின் கணவன் திருந்து செங்கோல் வளையாமை அறிந்தேன் வாழி காவேரி” என்றும் சோழன் காவிரியின், கங்கையின் கணவனாகவே உருவகிக்கப்பட்டுள்ளான். அதே வேளையில் தமிழ்ச் சமூக வரலாற்றில் புதிதாக உருவாகி வந்த வேளாளர் குலத்தவர், “பரப்பு நீர்க் காவிரிப் பாவை தன் புதல்வர்” என்று சிலப்பதிகாரத்தில் (10:148) குறிப்பிடப்பட்டிருப்பது நம் கவனத்துக்குரியதாகிறது. சைவ சமயத்தின் - குறிப்பாகச் சொல்வதானால் காளை வாகனத்தையுடைய, கங்கை நதியைத் தன் சடையில் தாங்கிய, சிவபெருமான் என்ற பெருந்தெய்வத்தின் பரிணாம வளர்ச்சி என்பது நதி நீர்ப் பாசனத்தையும், ஏருழவையும் அடிப்படையாகக் கொண்ட வேளாண்மை விரிவாக்கத்துடன் இணைந்து நிகழ்ந்ததே. இந்தப் பின்புலத்தில் பார்க்கும்போதுதான், தொல்காப்பியம் முதன்மையான தெய்வங்களுள் ஒருவனாகக் குறிப்பிடுகிற வருணனின் அடிப்படை இயல்புகள் பல - நெய்தல் உலகமாகிய தென்புலத்தின் தலைமைப் பதவி உட்பட - எவ்வாறு சிவபெருமானுக்குரியவை ஆயின எனப்புரியும். மாதொரு பாகர் என்ற கருத்தோட்டமும் இவ்வாறுதான் சிவநெறிக்குள் சென்றடைந்திருக்க வேண்டும். ஆணாதிக்கச் சமயங்களான சமண, பெளத்த சமயங்களை எதிர்கொண்டு வளர வேண்டிய நிர்ப்பந்தத்திலிருந்த சைவ சமயத்திற்கு, “பெண்ணின் நல்லாளொடும் இருந்த பெருந்தகை” என்ற படிமமும், தன் மேனியில் பாதியைப் பெண்ணுக்கு அளித்த பெருந்தன்மை மிக்க தெய்வம் என்ற படிமமும் மிகச் சிறந்த மீள் கண்டுபிடிப்புகளாகப் பயன்பட்டன. வருணன் - நதிக்கன்னியர் கூட்டணி, வீரபத்திரருடன் சித்திரிக்கப்படும் சப்தமாதர் என்ற சிற்பவியல் கருத்தோட்டத்துக்கு அடிப்படையாக அமைந்திருப்பது இதனுடன் இணைத்துச் சிந்திக்கத்தக்கதாகும்.

சக்தியே வலிமை

பாகவத மரபு எனப்பட்ட மாயோன் வழிபாட்டு மரபில் மா அல்லது மாய்6 எனப்பட்ட திருமகளுக்கு முதன்மையான இடமளிக்கப்பட்டது. திருமகள், திருமாலின் வலப்புற மார்பில் இடம்பெற்றிருப்பதாகவே பக்தி இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. “வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு” எனப் பெரியாழ்வாரின் திருப்பல்லாண்டும் (பா. 2), “மலர்மிசைத் திருவினை வலத்தினில் அமைத்தவன்” என மாயோன் பாணியும்7 குறிப்பிடுகின்றன. திருமாலைப் ‘பெண்டு' எனக் கூறுவதுண்டு. “அரியலால் தேவியில்லை ஐயன் ஐயாறனார்க்கே” என்பது அப்பர் தேவாரம். எனவே, திருமால் வழிபாட்டு மரபில், சக்திக்கு பெண்ணுக்கு உடலின் வலப்புறத்தில் இடமளிக்கப்பட்டதில் வியப்பில்லை. ஆனால் ஆணாதிக்க முத்திரையுடன் பதிவுபெற்ற ஆகம நெறிகளில் (லக்ஷ்மி நரசிம்மர் போன்ற மூர்த்தங்களில்) திருமாலைத் திரு இட எந்தையாகச் சித்திரிப்பதே வலியுறுத்தப்பட்டது. அதே வேளையில், வலப்புறம் பெண்ணுருவம் இடம்பெற்றுள்ள அர்த்த நாரீஸ்வரர் சிற்பங்களும் குறைந்த எண்ணிக்கையில் கண்டறியப்பட்டுள்ளன.8 இவ்வாறு சிவன் உடலின் வலப்புறம் பார்வதி தேவியைச் சித்திரிப்பது சைவ சாக்த நெறியின் ஆதிக்கத்தை உணர்த்தும்.

அடிக்குறிப்புகள்:

1) ஆவுடை அல்லது ஆவுடையான் என்பது தமிழ்ச் சொல்லாகத் தோன்றவில்லை. மேகலை என்ற இடையணி உட்யாண் (ஒட்யாணம்) என்று வழங்கிற்று. ஒட்யாணத்தால் மறைக்கப்படும் அல்குற்பகுதி, ‘ஔட்யாண' எனப்பட்டது. ஔட்யாண என்ற வடமொழிச் சொல்லே ஆவுடையான் என்றும் ஆவுடை என்றும் திரிந்ததெனத் தோன்றுகிறது.

2) p. 20, Attarv Veda - Diamond Pocket Books (p) Ltd. 2715, Daryaganj, New Delhi - 110002.

3)ஒழுங்கான நெறி, ஒழுங்கு என்ற பொருளில் முறையே route, routine ஆகிய பிரெஞ்சு - ஆங்கிலச் சொற்கள் உள்ளன. இவை ‘ரிதம்' என்ற கருத்தோட்டத்துடன் தொடர்புடையவை. பாசண்டமொழி என்ற பெயருடைய குஜராத்திப் பார்சி மொழியில் ‘ரித' என்பது ‘அர்ர' என வழங்கிற்று. ஆறு, அறம் என்ற சொற்கள் இச்சொல்லுடன் நெருங்கிய ஒலியொப்புமையுடையனவாக உள்ளன. ‘அறு' (வரையறு) என்பது இவற்றின் மூல வேர்ச் சொல்லாக இருக்கலாம்.

4)தக்ஷன், தக்ஷிணன் ஆகிய சமஸ்கிருதச் சொற்கள் வலவன் என்ற பொருளுடயவை. இவற்றின் வேர்ச் சொல்லான ‘தக' என்பது நீர் என்ற பொருளுடையது.

5) “கழகக்கந்தன் என்கிற பரிஷத் முருகன்” என்ற கட்டுரையில் இது குறித்து விளக்கியுள்ளேன். (பார்க்க: “மறையும் மறையவர்கள் முதலிய ஆய்வுக் கட்டுரைகள்” - பதிப்பு: எனி இந்தியன் பதிப்பகம், சென்னை - 600017, 2007.)

6) புறநானூறு 7:5; பரிபாடல் 1:3. ‘மகாமாயி' என்ற கருத்தோட்டம் இதனுடன் தொடர்புடையதாகும்.

7) சிலப்பதிகாரம் கடலாடு காதை வரி 35க்கான அடியார்க்கு நல்லார் உரை மேற்கோட் பாடல். பார்க்க: பக். 189, சிலப்பதிகார மூலமும் அரும்பதவுரையும் அடியார்க்கு நல்லார் உரையும், உ.வே. சா. நூலகப் பதிப்பு, 1978.

8) திருவையாறு, திருமழபாடி ஆகிய ஊர்களிலுள்ள சிவாலயங்களில் கி.பி. 12ஆம் நூற்றாண்டுக்குரியனவாகக் கருதத்தக்க, வலப்புறம் பெண் வடிவத்தை ஏற்ற அர்த்த நாரீஸ்வரர் சிற்பங்கள் உள்ளன.

(நன்றி: தமிழினி, ஆகஸ்டு 2009.)SISHRI Home