What we wrote...
வழக்குரைக்கும் மணிமேகலையும் தண்டிக்கத் துடிக்கும் தமிழ்க் காவலர்களும்
எஸ். இராமச்சந்திரன் (ஆய்வாளர், தென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்)
"துப்பட்டாவில் படபடக்கும் தமிழ்க் கலாசாரம்” என்ற லீனா மணிமேகலையின் கட்டுரைக்கு (தினமணி 18/12/2007) எதிர்வினையாக வந்துள்ள கடிதங்களைப் படிக்கும்போது தமிழ்க் கலாசாரக் காவலர்களின் படபடப்பு மட்டுமல்ல பதற்றமும் துலக்கமாகத் தெரிகிறது. பெண்மொழி குறித்த பெரிய சர்ச்சை சில ஆண்டுகளுக்கு முன் எழுந்தபோது குட்டி ரேவதி, சல்மா, சுகிர்த ராணி, இளம்பிறை போன்றவர்கள் பெண்மொழிக்கு ஆதரவாகப் பேசினர் என்றும் அப்போதெல்லாம் லீனா மணிமேகலை ஆதரவாகக்கூட குரல் எழுப்பவில்லை என்றும் தனக்கு அவமரியாதை நடக்கும்போது மட்டும் எதிர்ப்புத் தெரிவிப்பது சுயநலத்தின் குரலாகத்தான் பதிவாகும் என்றும் கவிதா என்பவர் தமது கடிதத்தில் (19/12/2007) குறிப்பிட்டுள்ளார். பிரச்சினையின் தன்மையை வைத்து எதிர்வினை புரிவதே முறையான செயல்பாடாக இருக்குமே தவிர தங்களுடைய தனிப்பட்ட ஆதங்கங்களை வெளிப்படுத்துவது பொருத்தமற்றதாகும். லீனா மணிமேகலையின் குரலில் நியாயம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டுமே தவிர கலாசாரக் காவலர்களின் பக்கம் சேர்ந்துகொண்டு அவரைத் தாக்குவது பிரச்சினையின் தீவிரத்தை நீர்க்கச் செய்வதாகவே கருதப்படும்.

தி. ஜெயக்குமார் என்பவர் தெருவிலே நடக்கவும் கோயிலிலே நுழையவும் சமீப காலங்களில்தான் விமோசனம் கிடைத்திருக்கிறது நம் சமூகத்தில் என்றும், சமூகம் விதித்திருந்த தடைகளிலிருந்து மீளுவது முக்கியமா ஒரு கல்லூரி விதித்திருக்கும் ஆடைக் கட்டுப்பாட்டை மீறுவது முக்கியமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் (19/12/2007). தெருவிலே நடக்கவும் கோயிலிலே நுழையவும் என்று இவர் குறிப்பிடுவது பெண்கள் சமூகத்தையா, தாழ்த்தப்பட்ட சமூகத்தவர்களையா என்று தெளிவுபடுத்தப்பட வேண்டும். இரண்டும் வெவ்வேறு விதமான பிரச்சினைகள். இரண்டும் ஒரே பிரச்சினையின் இரு வேறு முனைகள் என்று பொருள்கொள்ளும் விதத்தில் எழுதுவது திரிபு வாதமாகும். ஒரு வேளை சபரி மலைக் கோயிலில் தற்சமயம் நடந்துவரும் பிரச்சினையை இதனுடன் தொடர்புபடுத்துகிறாரா என்பது தெரியவில்லை. அப்படியாயின் அது முற்றிலும் பெண்களின் மாதவிலக்கு குறித்த பழங்குடியின அச்சத்தின் எச்சம். நெடுந்தொலைவு காட்டு வழியில் நடைபயணம் மேற்கொள்ள வேண்டியிருந்த பழங்காலத்தில் ரத்த வாடையை மோப்பம் பிடித்துப் புலி, யானை போன்ற காட்டு விலங்குகள் மனிதர்களைத் தாக்கிவிடக்கூடும் என்ற அச்சமும் இத்தகைய தடைக்குப் பின்புலமாக இருந்திருக்கக்கூடும். சபரி மலைக் கோயில் வாசலுக்கு அருகிலேயே கார்களும், பஸ்களும் சென்றுவிடக்கூடிய அளவிற்கு வசதிகள் பெருகிவிட்ட இந்த 21ஆம் நூற்றாண்டில் அந்த அச்சம் தேவைதானா என்பது மிகச் சரியான கேள்வியே. ஆனால் அந்தப் பிரச்சினையையும் லீனா மணிமேகலை எழுப்பியுள்ள பிரச்சினையையும் முடிச்சுப்போடுவது அபத்தமானதாகும்.

இந்த எல்லாக் கடிதங்களுக்கும் மகுடம் சூட்டுவது போல அமைந்திருக்கிறது கு.அ. செல்வநாதனின் கடிதம் (20/12/2007). “கல்லூரிகளில் தேவைப்பட்டால் கல்வியோடு துப்பட்டாவையும் விற்கத் தயார். காரணம், கல்லூரி வாசல் தேடி அலைபவர்களுக்கு அது அவசியம் தேவைப்படும்” என்று இவர் எழுதியுள்ளார். இவருக்கு லயோலா கல்லூரி நிர்வாகத்தின் மீது என்ன கோபமோ தெரியவில்லை - அங்கு துப்பட்டா விற்கப்படுவதில்லையே தவிர கல்வி விலை பேசி விற்கப்படுகிறது - என்று பொருள்பட எழுதிவிட்டார். அதே நேரம் கல்லூரி வாசல் தேடி அலைபவர்கள் என்று அவர் குறிப்பிடுவது லீனாவை இழிவுபடுத்த வேண்டுமெனத் துடிக்கும் அவரது ஆத்திரத்தையே காட்டுகிறது. லீனா லயோலா கல்லூரியினரின் காட்சி ஊடகத் துறையினரால் கருத்தரங்கில் பேசுவதற்கு அழைக்கப்பட்டிருந்தார். லயோலா கல்லூரி நிர்வாகத்தினர் அழைக்கப்படுபவர்களை உரிய மரியாதையுடன் நடத்தத் தெரிந்தவர்களாக இருந்திருந்தால் இப்படிப்பட்ட உடையுடன்தான் வரவேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிட்டிருக்க வேண்டும். அந்தக் கண்ணியம் லயோலா கல்லூரி நிர்வாகத்தினரிடம் இல்லை. கல்லூரி நிர்வாகத்தினர் என்று மட்டுமல்ல. பல இடங்களில் ‘எஜமானர்கள்’ இவ்வாறு நடந்துகொள்வதற்குக் காரணமே எங்களுடைய ராஜ்ஜியத்தில் நாங்கள் வைத்ததுதான் விதி, எங்கள் ராஜ்ஜியத்திற்குள் நுழைபவர்கள் அவர்களாகவே இங்கு நடைமுறையிலுள்ள விதிகளை விசாரித்துத் தெரிந்துகொள்ள வேண்டுமே தவிர அந்த விதிகளை விளக்கிச் சொல்ல வேண்டிய கடமை எங்களுக்கு இல்லை என்ற ஆணவ மனப்பான்மையே லயோலா கல்லூரி நிர்வாகத்தினரின் நடத்தைக்குக் காரணமாகும். இத்தகைய ஆணவத்தைப் பாவம் லீனா மணிமேகலை எதிர்பார்த்திருக்கமாட்டார். அதனால்தான் அவருக்குத் ‘தமிழ்நாட்டில்’தான் இருக்கிறேனா அல்லது தாலிபானின் ஆப்கானிஸ்தானில் இருக்கிறேனா என்ற இடக் குழப்பம் ஏற்பட்டுத் தலை சுற்றியிருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு சானியா மிர்சா எதிர்கொள்ள நேர்ந்த மிரட்டல்கள், கலாசார அதட்டல்கள், பண்பாட்டுச் சட்டாம்பிள்ளைத்தனங்கள் போன்றவற்றைத்தான் இப்போது லீனா மணிமேகலை தினமணியின் மூலம் எதிர்கொள்ள நேர்ந்திருக்கிறது. கே.சி. கணேசன் என்பவர் லீனா மணிமேகலை தமிழ்ப் பெண்தானா என்பதே சந்தேகமாக உள்ளது என்றும் தமிழர் பண்பாட்டில் பெண்மைக்கு அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற நான்கு வகைக் குணங்கள் இலக்கணமாகக் கூறப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார். “நாணமும் அச்சமும் நாய்களுக்கு” என்றும் “நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள், திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவதில்லையாம்” என்றும் மகாகவி பாரதி குறிப்பிட்டிருக்கிறாரே. பாரதி கண்ட அந்தச் செம்மை மாதர் செந்தமிழ் மாதராக இருக்கமுடியாது என்றுகூட கே.சி. கணேசன் போன்றவர்கள் கூறுவார்கள் போலும்.

வி. ஆர்த்தி என்பவர் லீனா மணிமேகலை விரும்பும் சுதந்திரத்தின் எல்லை மேலும் விரிவடைந்து மேலாடை(!) அணியாமல் வந்தால் அதனைச் சிறந்த தனிமனித உரிமை என்று எடுத்துக்கொள்ளலாமா என்று அபத்தமாகக் கேள்வி எழுப்பியுள்ளார் (21/12/2007). இத்தகைய கேள்விகளில் அறியாமையைவிட ஆத்திரமும் லீனா மணிமேகலையை இழிவுபடுத்தவேண்டுமென்ற ஆவேசமும்தான் தொனிக்கின்றன. உடை என்பது கண்ணியக் குறைவானதாகவும் ஆபாசமானதாகவும் இருக்கக்கூடாது என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம். தங்களுடைய பாரம்பரிய அழகியல் - அரசியல் கண்ணோட்டம் மட்டுமே பொதுமைப்படுத்தப்பட வேண்டும், சட்டமாக்கப்பட வேண்டும் என்று எண்ணுவது ஃபாசிச மனப்பான்மையாகும்.

படபடக்கும் தமிழ்ப் பண்பாட்டுப் பாதுகாவலர்கள் ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும். ஆடை என்ற தமிழ்ச் சொல் இலை - தழை எனப் பொருள்படும் அடகு அல்லது அடை என்ற சொல்லிலிருந்து தோன்றியதாகும். இலை தழையையே உடுத்திவந்த பண்பாட்டு நிலை முற்றிலும் மாற்றம் அடைந்துவிட்டபோதிலும் ஆடை என்ற சொல் தொன்மையான பண்பாட்டு நிலையின் எச்சமாக இன்றும் நீடிக்கிறது. சேலை என்ற சொல்கூட சீரை (மரவுரி), செயலை (அசோக மரத் தளிர்) போன்ற ஒரு சொல்லின் திரிபாகவே தெரிகிறது. சேலைக்காகக் கூப்பாடு போடுபவர்கள் முதலில் இந்த வரலாற்றைத் தெரிந்துகொள்வது நல்லது. துணி, துண்டு, அறுவை போன்ற பழந்தமிழ்ச் சொற்கள்கூட துண்டிக்கப்பட்ட அல்லது அறுக்கப்பட்ட விலங்கின் தோல் உடையாகப் பயன்பட்ட கதையைத் தமக்குள் பொதிந்து வைத்துக்கொண்டுதான் இருக்கின்றன. ஏன், துப்பட்டா என்ற சொல்கூட ‘த்வீபட’ (இருபுறமும் படம் வரையப்பட்ட துணி) என்ற சொல்லின் திரிபே ஆகும். இன்றைக்கும் அச்சொல் அதே பொருளிலா பயன்படுத்தப்படுகிறது?

நாகரிகம் - அநாகரிகம் என்பவையெல்லாம் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு விதமாகவே வரையற்றுக்கப்பட்டுள்ளன. மேலாடையே அணியாமல் ‘தொய்யில்’ என்ற வண்ண அலங்காரத்தால் மார்பகங்களை மறைப்பது(!)கூடச் சங்க காலத்தில் வழக்கில் இருந்ததுண்டு. எனவே, தமிழ்ப் பண்பாடு என்று ஒன்றைப் பொதுமைப்படுத்தி ஒற்றைப் பார்வையில் பார்ப்பதே அரைகுறையான புரிதலில் விளைவதாகும். மாற்றுக் கருத்துகளை எதிர்கொள்ள நேரும்போது பதற்றமடைவதும், பதில் கூற முடியாதபோது அதட்டல் போட்டு மாற்றுக் கருத்தை அடக்க முனைவதும் பாஸிஸம் (bossism) மட்டுமல்ல ஃபாசிசமும் (fascism) ஆகும். “அரசோ ஆணையோ நிறுவனமோ, ஏன் தனி மனிதனோ உறவோ வாழ்க்கைத் துணையோ சிநேகிதனோகூட எதன் பேராலோ அதிகாரத்தைச் செலுத்தும்போது அதனை ஏன் என்று கேள்வி கேட்கமுடியாத பூஞ்சைக் காளான்களாக நம்மை உருவாக்கிக்கொள்வதற்கு கல்வி அவசியமே இல்லை” என்று லீனா மணிமேகலை மிகச் சரியாகவே குறிப்பிட்டுள்ளார். “பேசாமல் மாடு மேய்க்கப் போகலாம்” என்ற வரியை அவர் தவிர்த்திருக்கலாம். ஏனென்றால், மாடு மேய்ப்பது கெளரவக் குறைவான தொழிலல்ல. மட்டுமின்றி, மாடுகள் இந்தப் பண்பாட்டுக் காவலர்கள் போலப் ஃபாசிஸ்டுகள் அல்ல.

Not yet published.

SISHRI Home