இக்கட்டுரையை அச்செடுக்க To print this article
குறிஞ்சிக் கந்தரும் கலிங்கப் பாணரும்
எஸ். இராமச்சந்திரன் (ஆய்வாளர், தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்)
ஒரிஸ்ஸா மாநிலத்தில் தற்போது நடைபெற்று வருகின்ற இந்து - கிறிஸ்துவ மோதல்கள் காரணமாக அம்மாநிலத்திலுள்ள கொந்தமால் மாவட்டம் செய்திகளில் இடம்பிடித்துள்ளது. (இம்மாவட்டத்தின் தலைநகரான ‘புல்பானி' என்ற ஊரின் பெயராலும் இம்மாவட்டத்தைக் குறிப்பிடுவதுண்டு.) இப்பகுதியில் பெரும்பான்மை இந்து சமயத்தைப் பின்பற்றுகின்ற ‘கந்த' (ஒரிய மொழி உச்சரிப்புத் தாக்கத்தால் கொந்த என்று உச்சரிக்கப்பட்டு ஆங்கிலேயர்களால் கோந்த், கோண்டு என வழங்கப்பட்ட) அட்டவணைப் பழங்குடியினர்க்கும் (scheduled tribes) பெரும்பான்மை கிறிஸ்துவர்களாக மாறிவருகிற ‘பாண' அட்டவணைச் சாதியினருக்கும் (scheduled caste) இடையேதான் மோதல்கள் நடந்துவருகின்றன. 'கந்த' பழங்குடியினர், பெங்கோ, குயி, குவி போன்ற திராவிட மொழிகளைப் பேசிவருகின்றனர். ‘பாண' சாதியினர் ஒரியா மொழியையே தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். கந்த பழங்குடியினருள் மலைப்பகுதிகளில் வாழ்வோர் ‘மலைய கந்த' என்றே அழைக்கப்படுகின்றனர். நீண்டகாலமாகப் பாண சாதியினர், மலைய கந்தர்களின் பணி மக்களாக இருந்துள்ளனர். இவ்விரு சாதியினருக்குள் மண உறவு இல்லை. பாணர்கள், சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் (பாணன் பறையன் துடியன் கடம்பன் இந்நான்கல்லது குடியுமில்லை - புறம். 335) பண்தேர்ச்சி மிக்க சாதியினரே. இவ்விரு சாதியினர் பற்றி மானிடவியல் - மொழியியல் துறைகள் சார்ந்த ஆய்வாளர்களால் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழிலக்கிய - வரலாற்று ஆய்வாளர்களால் ஆய்வு எதுவும் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை.

கி.மு. 2ஆம் நூற்றாண்டில் கலிங்கத்தை ஆண்ட சேதியரசன் மகாமேகவாகன காரவேலன், உதயகிரி - கந்தகிரி என்று வழங்கப்படும் மலைப்பகுதியிலுள்ள 'ஹத்தி கும்பா' (ஆனைக் குகை) என்ற குடைவரையில் தன்னுடைய வெற்றிகளைப் பறைசாற்றும் கல்வெட்டினைப் பொறித்து வைத்துள்ளான். தமிழ்நாட்டுக் கூட்டணி எனப் பொருள்படுகின்ற ‘த்ரமிர தேச சங்கதம்' பற்றி இக்கல்வெட்டுதான் குறிப்பிடுகிறது. காரவேலன் அக்கூட்டணியை முறியடித்துப் பாண்டிநாடு வரை சென்று முத்துக் குவியலைக் கவர்ந்து வந்த வீரச்செயல் இக்கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது. காரவேலன், புராணங்களில் குறிப்பிடப்படும் சேதி அரச வம்சத்தவன் ஆவான். (மகாபாரதத்தில் இடம்பெறும் சிசுபாலன் சேதி வம்சத்தவன்.) இம்மன்னனுக்கும் ‘மலைய கந்த' குடியினர்க்கும் தாய் வழியிலோ, தந்தை வழியிலோ உறவு இருந்திருக்க வேண்டும். சங்ககாலத் தமிழகத்தில் திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்த மலையமான்களைச் சேதிபர் என்றும் மலையமான்களின் ஆட்சிப் பகுதியைச் சேதி மண்டலம் என்றும் குறிப்பிடும் வழக்கம் உண்டு. இம்மரபு சற்றுப் பிற்பட்டதாயினும் இது காரவேலனின் தமிழகப் படையெடுப்புக் காலத்தில் நிகழ்ந்த தொடர்பின் விளைவாகலாம். பாண்டி நாட்டின் மீது காரவேலன் நிகழ்த்திய தாக்குதல் சங்க இலக்கியங்களில் பதிவு பெற்றிருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் திருவிளையாடற் புராணத்தில் மெய்க்காட்டிட்ட படலத்தில், வடபுலத்திலிருந்து படையெடுத்து வந்த சேதிபன் என்கிற கிராதர் கோமானைக் (கிராதர் என்று மலைக் குறவர்களைக் குறிப்பிடுவதுண்டு) கொந்தக வேளாளர் குலத்தைச் சேர்ந்த பாண்டியர் படைத்தலைவன் எதிர்கொள்ள நேர்வது குறிப்பிடப்படுகிறது. இது காரவேலனின் படையெடுப்பு தொடர்பான பதிவே எனத் தோன்றுகிறது.

அண்மையில் நண்பர் ஒரிஸ்ஸா பாலசுப்பிரமணியன் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது, கந்தமால் பழங்குடிகள் மீதான ஆய்வுகளைப் பற்றி விசாரித்தேன். அவர் தம்மிடமிருந்த The cultural heritage of Ganjam (பதிப்பு: வியாசகவி ஃபகீர்மோகன் ஸ்மிருதி சம்ஸத், புவனேஸ்வரம், 2004) என்ற நூலைக் கொடுத்துதவினார். மேலும், சென்னை எழும்பூரிலுள்ள அரசு அருங்காட்சியகத்தில் மானிடவியல் பிரிவின் காப்பாட்சியராக உள்ள முனைவர் சி. மகேஸ்வரன் அவர்களால் 'A descriptive study of Kui language' என்ற நூல் எழுதப்பட்டு, ஆந்திர மாநிலம் குப்பத்திலுள்ள திராவிடப் பல்கலைக்கழகத்தால் பதிப்பிக்கப்படவுள்ள செய்தியையும் குறிப்பிட்டார். The cultural heritage of Ganjam நூலில் Female infanticide among the Khonds என்ற கட்டுரை (டாக்டர் நிகர் ரஞ்சன் பட்நாயக் என்பவரால் எழுதப்பட்டது) கந்த பழங்குடியினர் குறித்த அரிய செய்திகளை உள்ளடக்கிய கட்டுரையாகும். குறிஞ்சித் திணையின் உரிப்பொருளாகச் செவ்வியல் இலக்கியங்களில் இடம்பெறும் ‘களவு' என்பதன் வாழ்வியல் நடைமுறை எத்தகையது என்ற யதார்த்தத்தைப் புரிந்துகொள்வதற்கு அக்கட்டுரையே துணை செய்தது. சங்க இலக்கியங்கள் பாணர் மரபை அடித்தளமாகக்கொண்டு தோன்றியவையே எனினும் அவை ஆணாதிக்க அவைகளில் அரங்கேறிய செவ்வியல் இலக்கியங்களாதலால், அவற்றில் முழுமையான யதார்த்தத்தைக் காண முயல்வது இதுவரை தமிழறிஞர்களுள் பலர் புரிந்து வந்திருக்கிற தவறு என்பதை உணர முடிந்தது.

கந்த பழங்குடியினரிடையே களவொழுக்கம் இயல்பானது. திருமணத்துக்கு முன்னர் ஒரு பெண், தனது சமூகத்தைச் சேர்ந்த பல ஆடவர்களுடன் களவொழுக்கத்தில் ஈடுபடுவது பற்றி அச்சமூக ஆடவர்கள் பொருட்படுத்துவதில்லை. மணமுறிவு, மறுமணம் என்பவையும் இயல்பாக ஏற்கப்படுகின்றன. மணமகளின் பெற்றோர்க்கு எருமைகள், ஆடுகள் போன்றவற்றைக் (பரிசப் பணம் போன்று) கொடுத்து மணம் முடிக்கும் மரபே நடைமுறையிலுள்ளது. பங்குனி மாதத்துக்குச் சமமாகக் கணக்கிடப்படும் ‘சைத்தே பருபோ' (சித்திரைப் பருவம்) எனப்படும் புத்தாண்டு விழாவின்போது தமக்குள் விருப்பமுள்ள ஆடவரும் பெண்டிரும் களவொழுக்கத்தில் ஈடுபடுவதும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறெல்லாம் இருப்பினும் இச்சமூகத்தவரிடையே பெண் சிசுக் கொலையும் நடைமுறையிலுள்ளது. பெண்ணைச் சாதிப் பெருமிதத்தின் சின்னமாகப் பார்க்கும் உணர்வின் வெளிப்பாடுகளே ‘கற்பு' குறித்த வலியுறுத்தல்களும் இறந்த கணவனின் உடலுடன் மனைவியரை உடன்கட்டையேற்றும் முயற்சிகளும் ஆகும் என்ற மானிடவியல் பார்வைக்கு மாறுபட்ட ஒரு நிகழ்வாகக் ‘கந்த' பழங்குடியினரின் பெண் சிசுக் கொலை தோற்றமளிக்கிறது. ஆனால், மார்வின் ஹாரிஸ் தமது ‘பசுக்கள் பன்றிகள் போர்கள் சூனியக்காரிகள் முதலிய கலாசாரப் புதிர்கள் - பாகம் 2' (மொழிபெயர்ப்பு: துகாராம் கோபால்ராவ், எனி இந்தியன் பதிப்பகம், சென்னை - 600017) என்ற நூலில் குறிப்பிட்டுள்ள ஒரு விளக்கம் இப்புதிரினை விடுவிக்க உதவுகிறது.

தம் சமூகத்துப் பெண்டிர், பிற சமூகத்து ஆடவர்களால் சிறையெடுக்கப்படாமல் காப்பதற்குரிய வீரம் மிக்க ஆண் மகனைப் பெறுவதே உத்தமத் தாய்க்குரிய இலக்கணம் என்ற கண்ணோட்டமும், பெண்டிரின் எண்ணிக்கை விகிதாசாரம் கூடிவிட்டால் மணமுடிப்பதற்குரிய பெண்ணின் 'கிராக்கி' குறைந்துவிடுமாதலால் அவள் பிற சமூகத்தைச் சேர்ந்த ஆடவருடன் களவொழுக்கத்தில் ஈடுபடவோ, சிறையெடுக்கப்படுவதற்கு இணங்கவோ நேர்ந்துவிடலாம் என்ற அச்சமுமே பெண் சிசுக் கொலைக்கான காரணங்களாக இருக்க வேண்டுமென மார்வின் ஹாரிஸ் விளக்கமளித்துள்ளார். அவ்விளக்கம் ‘கந்த' பழங்குடியினர்க்கும் பொருந்துவதாகவே உள்ளது.

The cultural heritage of Ganjam நூலில், ஒரிஸ்ஸாவின் கடற்புரத்து மீனவர்களைப் பற்றிய ஒரு கட்டுரையும் இடம்பெற்றுள்ளது. தெலுங்கு மொழி பேசுகிற இம்மீனவர்கள் ‘நோலியா' என அழைக்கப்படுகின்றனர் என அறிய நேர்ந்தபோது, சங்க இலக்கிய ‘நுளையர்'களே இவர்கள் எனப் புரிந்தது.

முனைவர் சி. மகேஸ்வரன் அவர்களுடன் தொடர்புகொண்டு பேசியபோது கந்த பழங்குடியினரிடையே நரபலி கொடுக்கும் வழக்கம் நிலவியது பற்றி அறிய நேர்ந்தது. (நரபலிக் கூண்டு ஒன்று அவர்களிடமிருந்து பெற்றுவரப்பட்டுச் சென்னை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.) நிலமகளைக் குறிக்கும் ‘கரெ பொண்ணு' என்ற தெய்வத்துக்கு மயில், யானை முதலிய குறிஞ்சி நிலக் கருப்பொருள்களைக் குறிக்கும் பொம்மைகளை நிறுத்தி அவற்றின் முன்னிலையில் நரபலி கொடுக்கப்படுவது வழக்கம். பழந்தமிழிலக்கியங்களில் கந்தனின் வாகனங்களாக யானையும் மயிலும் குறிப்பிடப்படுவது, குறிஞ்சிக் கிழத்தியும் முருகனுடன் களவு மணம் பூண்டவளுமான ‘வள்ளி'யின் பெயர் நிலத்தில் விளையும் கிழங்கினைக் குறிப்பது நில மகளின் மகனான பெளமன் அல்லது பூமி புத்ரன் எனப்படும் செவ்வாய்க் கிரகத்தை முருகனுடன் தொடர்புபடுத்துவது போன்ற பல மரபு வழிப்பட்ட நம்பிக்கைகளுடன் கந்த பழங்குடியினரின் வழக்கங்கள் தொடர்புடையவையாக அமைந்துள்ளன.

இத்தகைய பல விவரங்களைத் தமிழறிஞர்கள் - குறிப்பாகத் திணைக் கோட்பாட்டின் தோற்றம், வளர்ச்சி பற்றி ஆராய்வோர் - ஆராய்வது தேவை. மேலும் மொழி, இனம் குறித்த ஆய்வுகள் சரியான பாதையில் மேற்கொள்ளப்படுவதற்கு அத்தகைய பல தரவுகள் துணைபுரியும். கந்த பழங்குடியினர், இன அடிப்படையில் இந்தோ ஆஸ்திரலாய்டு பழங்குடியினராக வகைப்படுத்தப்படுகின்றனர். ஆனால், இந்தோ ஆஸ்திரலாய்டு பழங்குடியினர்க்குரியதாகக் கருதப்படும் ‘முண்டா' மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழியைப் பேசுவதில்லை. திராவிட மொழிக் குடும்ப மொழிகளையே பேசி வருகின்றனர். இது எதன் விளைவு என ஆராயப்படவேண்டும். தமிழகக் குறிஞ்சித் திணைக் குறவர்கள், தற்போது வேடர் என்ற பெயரில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தவர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். தமிழ்ச் சமூக வரலாற்றின் நீரோட்டத்தில் குன்றக் குறவர்கள் ஒன்று கலந்தே நடைபயின்று வந்துள்ளனர். ஆனால் தோடர்கள் போன்ற பழங்குடியினர் தமது தனித்தன்மையைப் பெருமளவு காத்துவந்துள்ளனர். இத்தகைய பல வரலாற்று நிகழ்வுகளை அவற்றின் காரண காரிய விளைவுகளுடன் சேர்த்துப் புரிந்துகொள்வதற்கு அத்தகைய ஆய்வுகள் ஆதாரமாக அமையும்.

(ந்ன்றி: தமிழினி, அக்டோபர் 2008, 67, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை - 600014.)

sr@sishri.org

SISHRI Home