இக்கட்டுரையை அச்செடுக்க To print this article
பார்ப்பான் x பறையன் - ஒரு பகுத்தறிவுப் பார்வை
ப்ரவாஹன் (ஆய்வாளர், தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்)
காலச்சுவடு அக்டோபர் 2008 இதழில் ஸ்டாலின் ராஜாங்கம் எழுதியுள்ள பறையன் எனும் சொல் மீதுள்ள பகை கட்டுரை குறித்து:

பறையன் என்ற சொல் ஆங்கில அகராதிகளில் சாதி அடிப்படையைக் கொண்ட சொல்லாகத்தான் குறிப்பிடப்பட்டுள்ளது, எனவே ‘சாதியடிப்படையைக் குறிக்கும் சொல் என்று அறியாமலே பயன்படுத்தப்படுவதாகச்' சொல்வது ஒரு அபத்தம். இன்றைக்கு அரசியல் தளத்தில் அடிக்கடியும் தலித் மக்களை சிறுபான்மையரோடு சேர்த்துப் பேசுவது; கிறித்தவர்களாக மாறிவிட்டவர்களுக்கு இடஒதுக்கீடும் ஏனைய சலுகைகளும் கோருவது ஒரு போக்காகும். இந்நிலையில் இச்சொல்லை அகராதிகளில் வைத்திருப்பது தொடர்பாக பரிசீலிக்க வேண்டுவது அவசியம். ஜே. ஏ. துபுவா (1770-1838) பறையன் என்பதாக இழிபொருளில் பயன்படுத்தியிருப்பதை ராஜ் கௌதமன் சொல்லி இருக்கிறார். அவர் ஒரு கிறித்தவப் பாதிரி என்பது கவனத்திற்குரியது. பொதுவாக, தலித்-சிறுபான்மையினர் கூட்டணி என்று பேசும் போது கவனப்படுத்தப்படும் ஒரு விஷயம் என்னவெனில், தலித் மக்களை சாதிக் கொடுமையிலிருந்து உய்வித்தவர்கள் ஐரோப்பியக் கிறித்தவர்களே; அவர்கள் வந்திராவிடில் இன்னமும் மத்தியகால சாதிக் கொடுமைகள் அவர்கள் மீது திணிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்; சாதிக் கொடுமையினாலேயே தலித் மக்கள் மதம் மாறினர் என்பதாக பரப்பப்பட்டுள்ள கட்டுக் கதை உறுதி செய்யப்படுவதுதான். இது ஒரு கட்டுக்கதை என்று நான் சொல்வது, ஒரு பச்சைப் பொய்யை நான் கூறுவதாக பலருக்கும் வியப்பைத் தரலாம். உண்மையை அறிய விருப்பம் கொண்டோர் லண்டன் மிஷனரி சொஸைட்டியின் பழைய ஆவணங்களைப் புரட்டுங்கள். (அவசியம் என்று நான் கருதுகையில் நானே அவற்றை எடுத்துக்காட்டுவேன்) அதைச் செய்வீராயின் சாதிக் கொடுமையினாலேயே மதம் மாறினர் என்ற ‘கட்டுக்கதை' அம்பலத்திற்கு வந்துவிடும். உண்மையில் இன்றைக்கு ‘பறையன்' என்ற சொல்லைப் பயன்படுத்துபவர்களின் முதன்மையான ஆதார நூல் அகராதியே. அந்த அகராதி ஐரோப்பியக் கிறித்தவர்களாலேயே வெளியிடப்படுகின்றது. பறையர் தொடர்பான வரலாற்று விஷயங்களைக் குறிப்பிட்டு ஒரு கடிதம் தயாரித்து, ஒரு தலித் அமைப்பின் மூலமாக அகராதி எந்த நாட்டிலிருந்து வருகிறதோ அந்நாட்டு தூதரிடமே சுமார் இரண்டாண்டுகளுக்கு முன்னர் கொடுக்கப்பட்டுள்ளது; எனினும் அதன் அடுத்தப் பதிப்பிலும் அது நீக்கப்படவில்லை. மேலும், அதற்கான பொருள் விளக்கத்தில், மற்றவர்கள் கருதுவது போல, ‘தென்னிந்தியாவில் தீண்டப்படாதாராகக் கருதப்படும் ஒரு சாதி' என்றுகூட சொல்லாது, அகராதி தயாரிப்பாளரின் கருத்தாகவே ‘தீண்டத்தகாதார்' என்றே சொல்லப்பட்டுள்ளது.

சமூகத்தை மேலிருந்து கீழாகப் பார்க்கின்ற அணுகுமுறையை ஐரோப்பியர்கள் இந்தியாவில்தான் வரித்துக்கொண்டனர் என்று சொல்வதன் அடிப்படை என்ன? ஐரோப்பிய நாடுகளில் அதற்கு முன்னர் எழுதப்பட்ட வரலாறுகளெல்லாம் அடித்தட்டு மக்களின் பார்வை நிலையிலிருந்து எழுதப்பட்டவையா?

மேலும், இப்படியான ஒரு சொல், பார்ப்பனர்களால் அகராதியில் ஏற்றப்பட்டது என்பதாக அயோத்திதாசரின் கருத்தைச் சுட்டிக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. முதற்கண், அயோத்திதாசர் சாதி ஒழிய வேண்டும் என்று நினைத்தவரல்ல; அவரது கோருதல் என்னவெனில் பறையர்களாகிய நாங்களே உண்மையான பார்ப்பனர்கள்; தற்போதுள்ள பார்ப்பனர்கள் ‘வேஷ பார்ப்பனர்கள்' என்பதுதான். இத்தகைய அவரது நிலைப்பாடு காரணமாக, அவரிடம் பார்ப்பனத் துவேஷம் இருந்ததே தவிர பகுத்தறிவு இல்லை. அவரை ஒரு பௌத்தராகக் கருதிக் கொண்டால், பௌத்தம் சாதியை ஊக்குவிக்கவில்லை என்று சொல்லமுடியாது. அவர் பௌத்தத்தைப் பின்பற்றியவர் எனில், அருந்ததியர்கள் மீது அவர் கொண்டிருந்த காழ்ப்புணர்ச்சி, சாதி ரீதியாக அவர்களை இழித்தும் பழித்தும் பேசியது போன்றவற்றுக்கு விளக்கமளிக்க முடியாது போகும்.

அயோத்திதாசரின் பார்ப்பன துவேஷத்தை வெளிப்படுத்துகின்ற ஒரு முக்கிய விஷயத்தைக் காண்போம். பறையர்களை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் பாப்பார மைனா x பறை மைனா போன்ற இருமைகள் கட்டமைக்கப்பட்டது குறித்து கட்டுரையாளர் அயோத்திதாசரைக் குறிப்பிட்டு எழுதியுள்ளார். பார்ப்பான், பறையன் ஆகிய இரு சொற்களுமே சங்க காலத்தில் மதிப்புக்குரியனவாக இருந்தன. ‘ன்' விகுதியைக் கொண்டு இவற்றை இழிவழக்காகப் பார்க்க வேண்டியதில்லை; ஏனெனில், ‘பாணன் ‘பறையன்' துடியன் கடம்பன் இந்நான்கல்லது குடியுமிலவே' என்ற புறநானூற்று வரியும், ‘மாமுது ‘பார்ப்பான்' மறைவழி காட்ட' என்ற சிலப்பதிகார வரியும் மதிக்கத்தக்கனவாகவே பதிவாகியுள்ளன. ஆனால் தற்காலத்தில் பறையன் என்ற சொல் இழிவழக்காகக் கருதப்படுவதைப் போலவே ‘பார்ப்பான்' என்ற சொல்லும் இழிவழக்காகக் கருதப்படுகிறது; அதிலும் குறிப்பாக திராவிட இயக்கம் மற்றும் பெரியாருக்குப் பிறகு ‘பார்ப்பான்' என்ற சொல் ஒரு இழி சொல்லாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான அடிப்படை 13-14 ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டது. அதே கால கட்டத்தில்தான் பறையர்கள் முழுமையாக தீண்டத்தகாதோராக ஆக்கப்பட்டுள்ளனர் என்பதும் கவனத்திற்குரியது. இந்த காலகட்டத்தில் ஆதிக்கத்திற்கு வந்த சக்திகள் யார் என்பதைக் கருத்தில் கொண்டு பார்த்தால் பாப்பார x பறை என்ற இருமைகளை எவர் கட்டமைத்திருப்பர் என்பது புலனாகும். உண்மையில் பார்ப்பனர்களை உயர்த்தியும் பறையர்களைத் தாழ்த்தியும், பார்ப்பனர்கள் இந்த இருமைகளைக் கட்டமைத்திருப்பார்கள் என்றால் இழிவழக்காகிவிட்ட ‘பாப்பார' என்ற சொல்லை அவர்கள் பயன்படுத்தி இருக்கமாட்டார்கள்; பிராமணர் என்றோ அந்தணர் என்றோ சொல்லி இருப்பர். எனவே இது பிராமண வகுப்பினரை உயர்வாகக் கற்பிக்கின்ற ஒன்றாகக் கருதக்கூடியதல்ல.

தமிழக வரலாற்றில் சைவ வேளாளர் ஆதிக்கம் என்பது 13-14 ஆம் நூற்றாண்டில் இருந்து உறுதிப்பட்டுவிட்டது என்று சொன்னால் அது மிகையல்ல. இவர்கள்தான் கன்யாகுமரி மாவட்டத்திலும் இன்னபிற பகுதிகளிலும் சாணார் எனப்படும் சான்றோர்களை, தீண்டாமையைவிடக் கொடிய ‘காணாமை' நிலைக்குத் தள்ளியவர்கள் என்பது வரலாறு. இவர்கள்தான் பார்ப்பனர்களை தங்களுக்குப் போட்டியாகக் கருதியவர்கள் என்பதும் வரலாறு. ‘நூலெனிலோ கோல்சாயும், நுந்தமரேல் வெண்சமராம், . . . நாலாவன் நல்வழிக்குத் துணையுமாவான்' என்ற பிற்கால ஓளவைப் பாட்டு, தொல்காப்பியம் குறிப்பிடும் இலக்கணத்திற்கு நேர் எதிர் நிலைக்குச் சமூகம் வந்துவிட்டதைக் காட்டுகிறது.

இவ்வாறு சைவ வேளாளர் ஆதிக்கம் பெற்றுவிட்ட மிகப்பிற்காலத்தில் வேளாளர்கள் தலைமையில், பங்களிப்பில் உருவான சென்னைப் பல்கலைக்கழகத்தின் (இதற்கு முதலியார் பல்கலைக்கழகம் என்ற துணைப் பெயரும் உண்டு) Tamil Lexicion, தமிழர்கள் யார் என்பதற்கு ‘பறையனொழிந்தவர்கள்' என்று எழுதப்பட்டிருப்பதிலிருந்தே (தொகுதி III, பக்கம் 1757) தீண்டாமையை யார் கற்பித்திருப்பர் என்பதை எளிதில் ஊகித்துவிடலாம். அதை பார்ப்பனர்களும் கடைப்பிடித்தனர் என்பது வேறு விஷயம்.

E=MC2 என்பதை ஐன்ஸ்டீன் கண்டுபிடித்ததால்தான் அணுகுண்டு தயாரிக்கப்பட்டது, அதன் அழிவுகளுக்கெல்லாம் அவரே காரணம் என்பதாக சில குற்றஞ்சாட்டியதைப் போல, பாகுபாடு கற்பிக்கப்பட்டது, அதைக் கற்பித்தவர்கள் பலன்பெறும் பிரிவினர் என்ற வாதம், அதன் தர்க்க நீட்சியில் அபத்தத்தில் முடியும் என்பது ஒருபுறமிருக்க, பறையர்கள் இந்துக்கள் அல்லர் என்பது போல, ‘ஆதிக்க இந்து சாதியினர்' என்றும் ‘இந்துக்கள் வெளிப்படுத்திய வெறுப்பு' என்றும் சொல்வது அயோத்திதாசரின் பார்ப்பனத் துவேஷப் பார்வையின் நீட்சியே தவிர மற்றதல்ல. ‘ஆதிக்க சாதி' என்று சொல்லாது ‘ஆதிக்க இந்து சாதி' என்று சொல்ல வேண்டிய அவசியம் என்ன? இந்து மதம் பார்ப்பானுடையது என்பதாக சொல்லுகின்ற பார்வையே அது. இது கிறித்தவர்கள் பரப்பிய ஐரோப்பிய மையவாதக் கண்ணோட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. மேலும் பறையர்களை பௌத்தர்களாகச் சித்திரிப்பது தொடர்ந்து நிகழ்ந்துவருகிறது. இதில் வேடிக்கை என்னவெனில் பௌத்தமும் ஜைனமும் வலியுறுத்துகின்ற ஊழ்வினைக் கோட்பாடுதான் சாதி ஏற்றத்தாழ்வுகளுக்கு மிகப் பொருத்தமான தத்துவார்த்த நியாயம் கற்பிக்கிறது. இந்து மதத்தின் இரு முக்கியப் பிரிவுகளான சைவமும் வைணவமும் சிவன் அல்லது திருமாலின் அடியாராகி விட்டால் இப்பிறவியிலேயே முக்தி உண்டு என்கின்றன. ஆனால் பௌத்தமும் ஜைனமும் ஊழ்வினையின் படி மறுபிறப்பு என்கின்றன என்பது கவனத்திற்குரியது.

பறையர்கள்,‘சாதியமைப்புக்கு வெளியே நின்றவர்கள்' என்பதாக அயோத்திதாசர் சொல்வதன் அடிப்படை என்ன? குறிப்பாக, தமிழ்ச் சமூகத்தில் சமூகத்திற்கு வெளியே இருந்தவர்கள் என்போர் பாலை நிலக் குடிகளே. அவர்களே தீண்டத்தகாதோர் அல்லர் என்ற அடிப்படை உண்மையைக்கூட பார்க்கத் தவறுவது, கண்டுகொள்ளாது விடுப்பது முற்றிலும் உள்நோக்கம் கொண்டது. அல்லது குறைந்த பட்சம் ஏற்கெனவே உருவாக்கப்பட்டுள்ள கருத்தியலின் தாக்கத்திலிருந்து சொல்வதாகும். மிகக் குறிப்பாக பறையர்களின் கடந்த காலம் குறித்து கல்வெட்டுச் சான்றுகளைக் கொண்டு, த.தங்கவேல், ஜெ.சிதம்பரநாதன் ஆகியோருடன் இணைந்து நானும் கல்வெட்டியல் ஆய்வாளர் சங்க மாநாட்டில் வாசித்த கட்டுரைக்குப் பின்னும் இவ்வாறு எழுதுவது உள்நோக்கத்தையே காட்டுகிறது.

சாதியமைப்பின் காலம் சில நூற்றாண்டுகளே என்ற ஒரு அபத்தத்தை எப்படித்தான் சொல்ல முடிகிறது என்று தெரியவில்லை. தமிழர்கள் எல்லோரும் ஒரே சாதியாக, கொள்வினை கொடுப்பினையுடன் இருந்ததாக ஒரே ஒரு சான்றையேனும் சில நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட இலக்கியங்களில் இருந்து காட்டமுடியுமா இவர்களால்? ‘கண்ணுக்குப் புலப்படாத ஆதிக்கச் சக்திகள்' இப்படிச் சொல்லிக்கொண்டிருப்பதன் நோக்கம், பார்ப்பனர்களைச் சொல்லித் தம் ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்வதுதான்.

(காலச்சுவடு டிசம்பர் 2008 இதழின் எதிர்வினை பகுதியில் கண்ணுக்குப் புலப்படாத ஆதிக்கச் சக்திகள் என்ற தலைப்பில், சில நீக்கங்களுடன் வெளியிடப்பட்டுள்ள கட்டுரை.)

pravaahan@sishri.org


SISHRI Home