வரலாற்று நோக்கில் தமிழ்ச் சமூகமும் கள்ளும்
எஸ். இராமச்சந்திரன் (ஆய்வாளர், தென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம், சென்னை)

தமிழக முதல்வர் மு. கருணாநிதி தவணை முறையில் சில புரட்சிக் கருத்துகளைச் சொல்லி வருகிறார். சேது சமுத்திரத் திட்டம் தற்போது பெரும் சர்ச்சைக்கு நிலைக்களனாகியுள்ளது. இந்த சர்ச்சையில் தீவிரமாக இறங்கி எதிரணியினருக்குச் சவால் விட்டுவரும் கருணாநிதி “ராமன் எந்தப் பொறியியல் கல்லுரியில் படித்துப் பட்டம் பெற்றான்” என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். ராமாயணம் ஒரு கற்பனைக் கதை என்றும், ராம-ராவண யுத்தம் என்பதே ஆரிய-திராவிடப் போர்தான் என்று பண்டித நேருவே குறிப்பிட்டுவிட்டார் என்றும் பேசியுள்ளார். இவற்றின் தொடர்ச்சியாக ராமன் ஒரு குடிகாரன் என்று வால்மீகியே குறிப்பிட்டுள்ளார் என்றும் பிரச்சினையைக் கிளப்பியுள்ளார். பண்டித நேரு “DMK is a fantastic nonsense” என்றும் கூடத்தான் குறிப்பிட்டுள்ளார். எனவே, நேருவின் வார்த்தைகளில் தம் கருத்துக்கு சாதகமானதை மட்டும் தேடியெடுத்துக் கருணாநிதி பயன்படுத்தியுள்ளார்.

வால்மீகி ராமனைக் குடிகாரன் என்று குறிப்பிட்டுள்ளதாக இவர் கூறுவது எந்த அளவுக்குச் சரியென்பதைப் பார்ப்போம். இப்போதைக்கு கருணாநிக்கு ஒரு கேள்வி: ராவணனை புலஸ்திய கோத்திரத்து பிராம்மணன் என வால்மீகி குறிப்பிட்டுள்ளார். இதைக் கருணாநிதி ஏற்றுக்கொள்கிறாரா? இதற்கு அவரிடமிருந்து மெளனம்தான் பதிலாகக் கிடைக்கும்.

ராமனை முழு முதற் கடவுளாக வால்மீகி சித்திரிக்கவே இல்லை. ஏனென்றால் வால்மீகி என்ற மகாகவி ராம காவியத்தை எழுதும்போது இந்திய நாட்டின் பல பகுதிகளில் பல மொழி வழக்குகளில் வாய்மொழிப் பாடல்களாக நிலவிவந்த ராமன் கதையின் பல்வேறு வடிவங்களைத் திரட்டி ஒழுங்கான ஒரு வடிவமைப்பில் தந்தவர் வால்மீகி. எனவே வால்மீகிக்கு ராமனை தெய்வமாக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏதுமில்லை. சரியாகச் சொல்வதானால் எந்தப் பலவீனமும் இல்லாத ஒரு முழுமையான மனிதனாக (திராவிட இயக்கத்தாரின் வார்த்தையில் ஆரியனாக) ராமனையும், முழுமையான அநீதியின் வடிவமாக ராவணனையும் சித்திரிக்க வேண்டிய (திராவிட இயக்க ஆதிக்க சக்திகள் வறட்டுத்தனமாக ராவணனை திராவிடன் என்று சொல்வதுபோன்ற) நிர்ப்பந்தம் ஏதும் அவருக்கு இருந்ததில்லை. வால்மீகியின் கண்ணோட்டத்தில் சத்திரிய ராமனும் பிராம்மண ராவணனும் இன்றைய ஒழுக்கக் கோட்பாடுகளின் அடிப்படையில் நாம் சித்திரிப்பதைப் போல மது விலக்கைக் கடைப்பிடித்தவர்கள் அல்லர். இந்த இரண்டு வர்ணத்தவர்களுள் ஒருவரை உயர்த்தியும் ஒருவரைத் தாழ்த்தியும் பேச வேண்டிய சமூக நிர்ப்பந்தம் வால்மீகிக்கு இருந்ததில்லை. ஏனென்றால் வால்மீகி இந்த இரு வர்ணங்களுள் ஒன்றைச் சேர்ந்தவரில்லை.

மது அருந்துகிற வழக்கத்தைப் பொருத்தவரை, தேவர்களைக் குறிக்கின்ற சுரர் என்ற சொல் சுரா பானம் அருந்துகின்றவர் என்ற பொருளிலும், அசுரர் என்றால் சுரா பானம் அருந்தாதவர் என்ற பொருளிலும் உருவான சொற்களே என்பதில் ஐயமில்லை. கலித்தொகை நறவினை (கள்ளினை) வரைந்தோர், வரையாதார் என இவ்விரு பிரிவினையும் குறிப்பிடுகிறது. அந்த அடிப்படையில் பார்த்தாலும் திராவிட இயக்கத்தார் பேராசைப்படுவது போல ராவணன் ஓர் அசுரன் (மது அருந்தாதவன்) அல்லன். தமிழக வேந்தர்களைப் பொருத்தவரை ராஜராஜன் போன்ற சோழ வேந்தர்களும் சரி, சுந்தரபாண்டியர் போன்ற பாண்டிய மன்னர்களும் சரி, தேவன் என்ற பட்டத்தைத்தான் தங்கள் பெயருடன் சேர்த்துச் சூடிக்கொண்டார்கள். (‘தேவமார்’ என்ற சாதிப்பட்டத்துடன் சேர்த்து இப்பட்டத்தைக் குழப்பிக்கொள்ள வேண்டாம்.) கி.பி. 13ஆம் நூற்றாண்டுக்கு முன்பு வரை தேவன் என்பது சுரன் அல்லது வானுலகத்தவன் அல்லது தெய்வத்துக்கு இணையானவன் என்றுதான் பொருள்படுத்தப்பட்டுப் பட்டாபிஷேகத் திருப்பெயராகச் சூட்டிக்கொள்ளப்பட்டதே தவிரச் சாதிப் பட்டமாக அல்ல. இவ்வாறு இடைக்கால அரசர்கள் தேவன் என்ற பட்டம் சூட்டிக்கொள்வது சங்க கால மரபின் தொடர்ச்சியே என்பதற்கு ஆதாரம் உள்ளது. ஆய் மன்னன் இறந்தபோது வானுலகில் உள்ள இந்திரன் கோயிலில் அம்மன்னணை வரவேற்கும் வண்ணம் பெரிய ஆரவாரம் எழுந்தது என்று புறநானூறு பா. 241 குறிப்பிடுகிறது. இந்திரன் சுராபானப் பிரியன் என்பதற்கு விளக்கம் தேவையில்லை.

சங்க காலத் தமிழர் வாழ்வியலில் நறவு அல்லது கள் புறக்கணிக்கப்பட்ட பொருளாக இருந்ததில்லை. அந்தணப் புலவனான கபிலரும் வேளிர் குலச் சிற்றரசரான பாரியும் சேர்ந்தே கள்ளும் மாமிசமும் அருந்தி மகிழ்ந்திருக்கிறார்கள் என்று புறநானூற்றுப் பாடல் 113ஆல் தெரிய வருகிறது. சாங்கியம் என்ற வைதிகத் தத்துவ மரபினை உருவாக்கியவர் இந்தக் கபிலர்தான் என்றும் இவர் திருவாரூரில் பிறந்தவர் என்றும் பாரதிதாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். "ஆரூர்க் கபிலனின் எண்நூல்" என்றே சாங்கிய தத்துவத்தை ஓரிடத்தில் அவர் குறிப்பிடுகிறார். இது சரியான வரலாற்று ஆய்வின் அடிப்படையில் சொல்லப்பட்டதன்று. திராவிட இயக்கத்தாரின் ஆஸ்தானக் கவிஞர் என்பதால் பாரதிதாசனைக் குறிப்பிட நேர்ந்தது. சங்க காலப் பெண்பாற் புலவர் ஒளவையாரும் தகடூர் அரசன் அதியமானும் சேர்ந்தே மது அருந்தியுள்ளனர் (புறநானூறு பா. 235). மன்னன் அதியமான் ஒளவையாரின் புலால் நாற்றம் அடிக்கின்ற கூந்தலை நரந்தம்புல்(Lemon Grass)லின் மணம் வீசும் தன் கையால் தடவிக் கொடுப்பதாக ஒரு குறிப்புள்ளது. கூந்தல்கிழவர் என்ற சொல் உடல் புணர்ச்சிக்குரிய உரிமை உடையவனையே குறிக்கும் (புறநானூறு பா. 113).

சங்க இலக்கியங்களில் எட்டுத் தொகை நூல்களுள் மதுரைக்காஞ்சியும் ஒன்று. மதுரை நகரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட தலையானங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடிய அப்பாடல் மொத்தம் 782 வரிகள் கொண்டது. மதுரை என்ற பெயரே மதுவுடன் தொடர்புடையது. மதிரா தேவி என்பதே கள்ளமர் தேவி என்று பெருங்கதையில் குறிப்பிடப்படுகிறது. (உஞ்சைக்காண்டம், உவந்தவை காட்டல், வரி 173.) ஆறாகப் பெருகி ஓடும் கள்ளால் நனைந்த தெருக்களையுடைய மதுரை (‘மகிழ்நனை மருகின் மதுரை’) என்றே சிறுபாணாற்றுப்படை (வரி 67) குறிப்பிடுகிறது. மதுரைக்காஞ்சியின் இறுதி வரிகளைக் கொஞ்சம் கவனியுங்கள்: “அரசவையில் மாறன் என்பவனைத் தலைவனாகக் கொண்ட கோசர்கள் உனது ஆணையைக் கேட்பதற்காகக் காத்திருக்க, பிற குறுநில மன்னர்களெல்லாம் உன்னைப் புகழ்ந்து வாழ்த்துரை முழங்க, நல்ல அணிகலன்களை அணிந்த மகளிர் பொற்கலங்களில் ஏந்தி மணம் கமழ்கின்ற கள்ளினை நாள்தோறும் ஊற்றிக்கொடுக்க அக்கள்ளினை உண்டு மகிழ்ந்து நீடுழி வாழ்வாயாக!” பதிற்றுப்பத்தில் (42) தசும்புதுளங்குஇருக்கை என்ற தலைப்பில் பாடல் உள்ளது. சேர அரசன் தன் படைவீரர்களுக்கு எல்லாம் கள்ளை முகந்து கொடுத்துத் தானும் அருந்துவது வழக்கம். சேர அரசின் ஒரு நகருக்குப் பெயரே நறவு என்பதுதான்.

சரியோ தவறோ அன்றைய நிலையில் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனும் கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவனும் (கண்ணகிக்குக் கோயில் கட்டிய அதே செங்குட்டுவன்தான்) குடிகாரர்கள் என்றால் ராமனும் குடிகாரன்தான். ஆனால் அவர்கள் ஊரெல்லாம் கள்ளுக் கடையையும் சாராயக் கடையையும் திறந்து ஆறாக ஒடவிட்டுத் தங்கள் கஜானாக்களை நிரப்பிக்கொண்டுத் தாங்கள் மட்டும் புனிதர் வேடம் போட்டுத் திரிந்தவர்கள் அல்லர்.

கள் என்பது அன்றைய வாழ்வியலில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. அறப்போர் மரபினரான சான்றோர்கள் எனப்பட்ட உயர்குடிப் போர்வீரர்கள் அடங்கிய அவையில்கூடக் கள் தடை செய்யப்படவில்லை. ஊராண் மகளிர் குடித்துவிட்டு மந்திராலோசனைக் கூட்டத்துக்கு வருவது தவறாகக் கருதப்படவில்லை என்பது பெருங்கதையில் உள்ள குறிப்பால் தெரியவருகிறது. திருக்குறள் முதலிய கீழ்க்கணக்கு நூல்களில்தான் இத்தகைய போக்கு பழித்துப் பேசப்படுகிறது. சான்றோர்களின் அவையில் ஒருவன் மது அருந்தி வருவது பெற்ற தாயின் முன்னால் மது அருந்திவிட்டு வருவதைவிட மோசமானது என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார் (குறள் 923). வீர யுகத்தின் நெறிமுறைகள் வேறு, வேளாளர் யுகத்தின் நெறிமுறைகள் வேறு. அந்தந்த யுகத்தின் வாழ்வியலை அவ்வவற்றின் வரலாற்றுப் பின்னணியோடு புரிந்துகொள்ள வேண்டுமே தவிர அரைகுறைப் புரிதலின் அடிப்படையிலும், அதிகார மமதை, ஆதிக்க மனப்பான்மை ஆகியவற்றின் விளைவாகவும் இழிவுபடுத்துவது தவறு. எதிரி என்று சிலரை பாவித்துக்கொண்டு இழிவுபடுத்திப் பேசுவது தவறான செயல்.