பெரும்புலியூர் சுந்தரராசப் பெருமாள் கோயில் கல்வெட்டு
எஸ். இராமச்சந்திரன் (ஆய்வாளர், தென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்)

இடம்: தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டம், பெரும்புலியூரிலுள்ள சுந்தரராசப் பெருமாள் கோயிலின் முன்னர் நிறுத்தப்பட்டிருக்கும் திருச்சக்கரக் கல்லில், சக்கரச் சின்னத்தின் கீழ் இக்கல்வெட்டு காணப்படுகிறது.

காலம்: 14ஆம் நூற்றாண்டு.

செய்தி: சுந்தரராசப் பெருமாள் எனத் தற்போது வழங்கப்படும் இறைவனின் பெயர் திரியவிருந்த பெருமாள் என்பதாகும். சிதைந்த நிலையிலிருந்த இக்கோயிலை எழுபத்தொன்பது நாட்டுப் பதினெண் பூமிக் காளி கற்பகக்கோன் என்பவர் புதுப்பித்து அமைத்துள்ளார் எனக் கொள்ளலாம். இவர் வேளாளர் சமூகக் கூட்டமைப்பைச் சேர்ந்தவராவார். 14ஆம் நூற்றாண்டில் தஞ்சை, திருச்சிராப்பள்ளிப் பகுதிகளில் வேளாளர் குலக் கூட்டமைப்பான சித்திரமேழிப் பெரிய நாட்டின் நிர்வாகத்தின் கீழ் பல கோயில்களும், கோயில்களுக்குரிய நிலங்களும் பராமரிக்கப்பட்டு வந்துள்ளன. எழுபத்தொன்பது நாட்டுப் பதினெண் பூமி என்ற அமைப்பு தொண்டை மண்டலம் சார்ந்த சித்திரமேழிப் பெரிய நாட்டாரின் நிர்வாக அமைப்பாகும். 12ஆம் நூற்றாண்டிலிருந்தே பெரியபுராண ஆசிரியர் சேக்கிழார் போன்ற தொண்டை மண்டல வேளாளர்கள் சோழ நாட்டின் நிர்வாக அமைப்பில் முதன்மையான இடம்பெறத் தொடங்கிவிட்டனர். எனவே, இக்கல்வெட்டில் குறிப்பிடப்படும் காளி கற்பகக்கோன் தொண்டை மண்டலம் சார்ந்த வேளாளராக இருப்பதற்கு வாய்ப்புள்ளது. அண்மையில் இக்கல்வெட்டு எழுத்துகளே வெளித் தெரியாவண்ணம் கோயில் நிர்வாகத்தாரால் புதைத்து வைத்துக் கட்டப்பட்டுவிட்டது எனத் தெரிகிறது.

குறிப்பு: பகர அடைப்புக் [---] குறிக்குள் இடம் பெற்றுள்ள வாசகம் அல்லது எழுத்து, ஊகித்து எழுதப்பட்டுள்ளது. உறுதி செய்யப்பட இயலாத வகையில் சிதைந்தோ, தெளிவின்றிப் பொறிக்கப்பட்டோ, மண்ணில் புதையுண்டோ காணப்படுகிறது.

1 ஸ்வஸ்திஸ்ரீ திரி

2 யவிருந்த பெரு

3 மாள் கோயி

4 ல் எழுபத்தொ

5 ன்பது நாட்டு ப

6 தினெண் பூமிக்

7 [காளி கற்பகக்கோன்]