பௌத்தம் - சாதி - திராவிடம்
ப்ரவாஹன் (ஆய்வாளர், தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்)
இந்து மதத்தின் சாரம் பிராமணீயமே, அதாவது சாதிய ஏற்றத்தாழ்வே என்பதை மையக் கருத்தாகக் கொண்டு, மற்ற மரபுகள் அனைத்தையும் அது விழுங்கிச் செரித்துத் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது என்றொரு விமர்சனம் அடிக்கடியும் முன்வைக்கப்படுகிறது. அதாவது, மற்ற மரபுகளை சுவீகரித்துக் கொள்வது - அதாவது கருந்துளையில் விழுகின்ற பொருள்கள் காணாமல் போய்விடுவதைப் போல - முற்றிலும் எதிர்மறை அம்சமாகவே முன்வைக்கப்படுகிறது. இவ்வாதத்தின், தர்க்க அடிப்படையிலான நேர் அம்சம் மூளையில் உறைக்காத அளவுக்கு ஒருதலையாக, தவறான பொருளிலேயே பொதுப்புத்தியில் பதிய வைக்கப்பட்டுள்ளது. பிற மரபுகளைச் ‘செரித்துக்கொள்வது’ கேடானதா என்ற வினாவே இப்போது நமது முதன்மையான பரிசீலனைக்குரியது.

அரசியல் நோக்கத்தை முதன்மையாகக் கொண்டு உருவான இஸ்லாம், கிறித்தவம் போன்ற பிற மதங்கள், மக்களிடம் வழக்கில் உள்ள நடைமுறைகளை அல்லது சமூகக் கோட்பாடுகளைச் செரித்துக்கொள்ள முடிவதில்லை. இது அம்மதங்களின் கட்டிறுக்கம் வாய்ந்தத் தன்மையைக் காட்டுகிறது. அரசியல் சொற்களில் இதைக் குறிப்பிடுவதாயின், பிற அம்சங்களுக்கு இடங்கொடாத, ஜனநாயகமற்ற தன்மையைக் காட்டுகிறது. ஆனால் இந்து மதத்தில், அதிகாரத்தையும், இருக்கின்ற நிலவரத்தையும் தக்கவைக்கின்ற கோட்பாடுகளுக்கும் அப்பால் உள்ள அம்சங்களும் - பழங்குடி வழிபாடு தொடங்கி ஊழ்வினைக் கோட்பாடு வரை - உரிய முறையில் ஏற்று அங்கீகரிக்கப்படுகிறது.

பொதுவாக, அரசியல் தளத்திலும் சமூகத் தளத்திலும் மற்றவற்றை ஏற்று அங்கீகரிக்கின்ற பண்பை ஜனநாயகம் என்றும், அதுவே உயர்ந்த பண்பென்றும் போற்றுபவர்கள் இந்து மதம் என்று வரும்போது மட்டும் மாறுபட்ட அளவுகோலை முன்வைத்து மற்றவற்றை அது அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளும் தன்மையை, எதிர்மறையாக, சதியாகவும் சூழ்ச்சியாகவும் மட்டுமே பார்க்கின்றனர். இந்த ஜனநாயகத் தன்மை, நேர் அம்சமாகப் புரிந்து கொள்ளப்படுவதற்குப் பதிலாக, எதிர்மறையாக மட்டுமே சித்திரிக்கப்படுவதற்கும், புரிந்து கொள்ளப்படுவதற்கும் நெடிய அரசியல் வரலாற்றுப் பின்புலம் உண்டு. சுருங்கக்கூறின் அப்பின்புலத்தை, பிரிட்டிஷ் காலனி ஆட்சியின் விளைவு எனலாம்.

இந்து மதம் அல்லது பிராமணீயத்தின் அடிப்படை, சாதிய ஏற்றத்தாழ்வை அங்கீகரித்து நியாயப்படுத்துவதாக மட்டுமே புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அதாவது, நால் வேதங்களைப் (ரிக், யஜூர், சாம, அதர்வண) புனித நூலாகக் கருதியப் பிராமணர்களே, அவற்றை இந்து மதத்தின் அதிகாரப்பூர்வ நூல்களாகக் கொண்டு, சாதிய ஏற்றத் தாழ்வுக்கு நியாயங்கள் கற்பித்ததனால் இது பிராமணீயம் எனப்படுகிறது. மேலும், நடைமுறையில், பிராமணர்கள் சாதியத்தைக் கடுமையாகக் கடைப்பிடித்தனர், கடைப்பிடித்து வருகின்றனர் என்கிற உண்மை ஒரு பக்கமிருக்க, சாதியை நியாயப்படுத்துகின்ற கோட்பாட்டு அடிப்படைக்கும் பிராமணர்களுக்குரியதாகக் கருதப்படும் நால் வேதங்களுக்குமான தொடர்பு என்ன?

வேதங்கள் சித்திரிக்கின்ற சமூக அமைப்பில் ஏற்றத்தாழ்வுகள் இருந்ததற்கான சான்றுகள் இல்லை; வேதங்கள் வாய்மொழியாகச் சொல்லப்பட்டு வந்த காலகட்டத்தில் அவற்றுக்குரிய சமூகத்தினரின் வாழ்க்கை முறை இடம் விட்டு இடம் பெயர்வதாக, இனக்குழுச் சமுதாயமாக இருந்தது என்பது அறிஞர்களின் கருத்து. அவ்வாறிருக்க, அவ்வேதங்கள் ஏற்றத்தாழ்வான ஒரு சமூகத்திற்கானக் கோட்பாட்டு நியாயங்களைக் கொண்டிருக்க முடியுமா?

சமூகத்தில் ஏற்றத் தாழ்வு தோன்றிய பின்னரே அதை நியாயப்படுத்துகின்ற தத்துவங்களுக்கான தேவை எழும். இந்தியாவில் சமூக ஏற்றத் தாழ்வுகள் நிலைப்பெற்றுவிட்ட பிறகு தோன்றிய பௌத்த, சமண சமயங்களின் அடிப்படைக் கொள்கை ஊழ்வினைக் கோட்பாடாகும். ஊழ்வினைக் கோட்பாடென்பது, முற்பிறவியில் செய்த நல்வினை/தீவினையின் நிமித்தம் இப்பிறவி அமைவதாக கருதுவதாகும். அதாவது, முற்பிறவியில் ஒருவர் செய்த பாவ/புண்ணியத்தின் நிமித்தம் இப்பிறவியில் தாழ்ந்த/உயர்ந்த என்று கருதப்படும் சாதியில் பிறந்திருக்கிறார்; இப்பிறவியில் செய்கின்ற பாவ/புண்ணியங்களின் அடிப்படையில், அதாவது சாதிக்குரிய ஒழுக்கத்தை மீறுவதை அல்லது கடைப்பிடிப்பதையொட்டி அடுத்த பிறவி அமையும் என்று போதிப்பதன் மூலம் அவரவர் சாதி நிலை நியாயப்படுத்தப்படுகிறது. இது கோட்பாட்டு வகையில் சாதியை நியாயப்படுத்துவதாகும்.

செந்தமிழில் தோன்றிய பௌத்தக் காப்பியமாகிய மணிமேகலை, சமணக் காப்பியமாகிய சிலப்பதிகாரம் ஆகிய இரண்டுமே ஊழ்வினையை அடிப்படையாகக் கொண்ட நிகழ்வுகளைச் சித்திரிக்கும் காப்பியங்களாகும். மணிமேகலையும், அவளைக் காதலித்ததால் கொலை செய்யப்படும் உதயகுமாரனும், முற்பிறவியில் யார்யாராக இருந்தனர், இப்பிறவியில் இத்தகைய நிகழ்வுகளை எதிர்கொள்வதற்கான ஊழ்வினைப் பின்னணி என்ன என்பன போன்ற காரணகாரிய விளக்கங்களை நீக்கிவிட்டுப் பார்த்தால் மணிமேகலைக் கதையே இல்லை. கோவலன் கண்ணகியின் முற்பிறவியை அடிப்படையாகக் கொண்டதே சிலப்பதிகாரக் காப்பியம். அதிலும் அவர்களின் முற்பிறவிச் செயல்களை விடுத்துப் பார்த்தால் சிலப்பதிகாரமே இல்லை.

மேலும், தமிழகத்தில் பௌத்தம் வலுப்பெற்றிருந்த, அச்சுத விக்கந்தன் என்கிற களப்பிர அரசனின் காலத்தில், பூம்புகார் நகரில் இருந்த கணதாசன் விகாரையில் புத்ததத்தரால் எழுதப்பட்ட அபிதம்ம அவதார உரை, “புகார் நகரில் சுத்த ஜாதிகளே வாழ்வதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர்” என்று குறிப்பிடுகிறது. இன்றைக்கும் சிங்கள பௌத்த சமூகத்தில் சற்று மாறுபட்ட வகையில் அகமணமுறையுடன் கூடிய சாதி அமைப்பு நீடித்து வருகிறது.

இந்து மதத்துக்கும் பிராமணீயத்துக்கும் உரியது எனப்படும் வேதங்களில், நாம் மேலே கூறியபடி, ஏற்றத்தாழ்வான சமூகத்தை நியாயப்படுத்தக்கூடிய கோட்பாடு இல்லை என்பது ஒரு பக்கமிருக்க, பின்னாளில் தோன்றிய வேதங்களின் இறுதிப் பகுதியான உபநிஷதங்களில் கர்மக் கோட்பாடு வலியுறுத்தப்பட்டுள்ளது. உபநிஷதங்களின் காலம், கி.மு. 7 ஆம் நூற்றாண்டு தொடங்கி சில நூற்றாண்டுகள் எனலாம். தொல்லியல் துறை சொல்லாடலில், ‘இரண்டாம் நகர்மயமாக்கக் காலம்’ எனப்படும் இதே காலகட்டம்தான், மகாவீரருக்கு முற்பட்ட 23 சமண தீர்த்தங்கரர்களின் காலமாகும். பௌத்த, சமண சமயங்கள் எழுச்சி பெறத் தொடங்கிய, - மகாவீரர், புத்தர் ஆகியோரின் காலமாகிய - கி.மு. 5 - 4 நூற்றாண்டுகளில் தோன்றிய உபநிஷதங்கள் அவற்றுக்குப் போட்டியாகக் கர்மக் கோட்பாட்டை வகுத்துக்கொண்டது. இந்த கர்மக் கோட்பாடும் புத்தரின் கோட்பாடும் கிட்டத்தட்ட ஒன்றே. பொதுவாக, புத்தர் நாத்தீகர் என்றும், பௌத்தம் நாத்தீக மதம் என்றும் கருதப்படுகிறது. உண்மையில், புத்தரைப் பொருத்தவரை கடவுள் இருக்கிறாரா என்கிற வினாவுக்கு மௌனமே விடை. இதனால்தான் அவர் அறியொணாவதி எனப்படுகிறார். அதே நேரத்தில் கடவுள் குறித்துக் கருதாது, கடமையைச் செய்வதே நிர்வாணத்தை அடைவதற்கான வழி என்பதே புத்தரின் கொள்கை.

இவ்வாறாக அரசு உருவாக்கத்திற்குப் பிறகு, அதற்குச் சார்புடையதாக, மறுபிறவிக் கோட்பாட்டின் வழியே சமூக ஏற்றத் தாழ்வை நியாயப்படுத்திய பௌத்த, சமண சமயங்கள் செழித்து வளர்ந்த காலகட்டத்தில் தோன்றிய புருஷ சூக்தத்தில்தான் வர்ணங்கள் பற்றிய சுலோகங்கள் உள்ளன. அதிலும் அந்தச் சுலோகங்களைக் கொண்ட ரிக் வேதத்தின் 10 ஆவது மண்டலம் பிற்கால இடைச்செருகல் என்பது டாக்டர். அம்பேத்கர் உட்பட பல அறிஞர்களாலும் சொல்லப்பட்டுள்ளது. இவ்வாறாக சாதி ஏற்றத்தாழ்வுகளுக்கு நியாயம் கற்பிக்கக் கூடிய கோட்பாட்டுடன் அதிகம் தொடர்புடையவை பௌத்த, சமண மதங்களே.

மறுபிறவிக் கோட்பாட்டுக்கும் இந்து மதத்திற்கு அல்லது பிராமணீயத்திற்கான தொடர்பு பலவீனமானது. வேதங்களுடனும் பிராமணர்களுடனும் அதிக தொடர்புடைய இந்து மதத்தின் இரு முக்கியப் பிரிவுகளாக உள்ள சைவம், வைணவம் ஆகிய இரண்டிலுமே, பௌத்த, சமண சமயங்களைப் போலன்றி, கர்மக் கோட்பாட்டிலிருந்து விலக்களித்து, பக்தியின் அடிப்படையில் சாதி வேறுபாடு கடந்து இறைவனை அடையமுடியும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. சமணராக இருந்து சைவத்துக்கு மாறிய அப்பர் பெருமான்,

“அங்கமெலாம் குறைந்தழுகு நோயராகி
ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும்
கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்பராகில்
அவர்கண்டீர் யாம் வணங்கும் கடவுளாரே”


அதாவது மாட்டுக்கறி சாப்பிடக்கூடிய புலையராக இருந்தாலும் கூட அவர் சிவனின் அடியாராக இருப்பாராயின் அவர் கடவுளுக்கு நிகரானவர் என்கிறார்.

அதைப் போலவே வைணவப் பிரிவில் நம்மாழ்வார்,

“குலந்தாங்கு சாதிகள் நாலிலும் கீழி ழிந்து எத்தனை
நலந்தா னிலாத சண்டாள சண்டாள ராகிலும்
வலந்தாங்கு சக்கரத்தண்ணல் மணிவண்ணற் காளென்று உள்
கலந்தார் அடியார் தம் அடியார் எம் அடிகளே”


என்கிறார். அதாவது, சண்டாளர் எனப்படுவோர்க்கும் உய்வுண்டு என்கிறார்.

இவ்வாறாக, கர்மக் கோட்பாட்டையும் தளர்த்தி, பக்தியின் அடிப்படையில் விலக்களிக்கின்ற இந்து மதம் சாதியை நிலை நிறுத்துவதாகவும், கோட்பாட்டு அளவிலும் நிறுவன வகையிலும் இறுக்கமான, பிறவற்றுக்கு இடங்கொடாத தன்மை கொண்ட பௌத்த, சமண மதங்கள், சாதி மறுப்பு மதங்களாகவும் பிராமணீயத்திற்கு எதிரானவையாகவும் பொதுப்புத்தியில் பதிய வைக்கப்பட்டுள்ளதன. இந்த அடிப்படையில் இருந்தே திராவிட இயக்கக் கவிஞர் பாரதிதாசன்,

“மேகலையும் நற்சிலம்பும் பூண்டு கண்ணே
வீழ்ச்சியும் சூழ்ச்சியும் தாண்டு”


என்கிறார். இதில், சாதிய ஏற்றத்தாழ்வை நியாயப்படுத்தும் கோட்பாடான ஊழ்வினையை விதிவிலக்கின்றி போதிக்கின்ற சமணத்தையும் பௌத்தத்தையும் கொண்டு, பக்தியின் அடிப்படையில் கர்மாவுக்கு விலக்களிக்கின்ற சைவ - வைணவத்திற்கு, பெரிய புரணத்தையும் கம்ப ராமாயணத்தையும் சொல்லி அவற்றை முறையே வீழ்ச்சி என்றும் சூழ்ச்சி என்றும் வர்ணித்து ஒழிக்கக் கோருவதுதான் வரலாற்று நகைமுரண்.

(26-02-2008 தினமணி நாளிதழில் கடவுள் - கருணாநிதி - பழம்பெருமை என்ற தலைப்பில் டி.ஜே.எஸ். ஜார்ஜ் எழுதிய கட்டுரைக்கான எதிர்வினை.)

pravaahan@sishri.org

SISHRI Home